Published:Updated:

துரை வைகோ: `இது வாரிசு அரசியல் அல்ல, வரலாற்று அரசியல். ஏனென்றால்..?!’ - நாஞ்சில் சம்பத் சொல்வதென்ன?

``மதிமுக ஆயுள் முழுவதும் போராடுவதற்கென்று பிறந்த கட்சி. தேர்தல் களத்தில் தோற்றுப்போயிருந்தாலும் போர்க்களத்தில் அது வென்றே வந்திருக்கிறது" என்கிறார் நாஞ்சில் சம்பத்

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ பொறுப்பேற்ற நிகழ்வு அரசியலில் ஆதரவு, எதிர்ப்பு எனப் பல விவாதங்களைக் கிளப்பியுள்து. வாரிசு அரசியலை எதிர்த்து தி.மு.க-விலிருந்து வெளியேறிய வைகோ மதிமுக-வைத் தொடங்கினார். இப்போது மதிமுக-விலும் வாரிசு அரசியல் புகுந்துவிட்டது என்ற விமர்சனங்களும் வந்துள்ளன.

இது பற்றி நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். ``திமுக-வில் வாரிசு அரசியல் வந்ததால் அதை எதிர்த்து வைகோ வெளியேறினார் என்பது தவறான தகவல். திமுக-வின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட நாள் முதல் அதை அங்கீகரித்துதான் வைகோ பயணம் செய்தார். நாடு முழுக்க அதிமுக ஆட்சியை எதிர்த்து தளபதி ஸ்டாலின் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டபோது, நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினின் தேதியைப் பெற்று அவரோடு சைக்கிள் பயணம் செய்தவர் வைகோ. ஒருநாளும் ஸ்டாலினைப் போட்டியாளராக அவர் கருதவில்லை. கருதுவதற்கு தேவையும் இல்லை. அவருடைய களம் வேறு; வைகோவின் களம் வேறு.

துரை வைகோ
துரை வைகோ

ஆனால் விடுதலைப்புலிகள் விவகாரத்தில் வைகோவின்மீது சிலபேர் கட்டி அமைத்த பிம்பம் அவரை திமுக-வில் இருக்கவிடாமல் செய்தது என்பதுதான் உண்மை. ஆகவே, வாரிசு அரசியலை எதிர்த்துத்தான் மதிமுக தொடங்கப்பட்டது எனச் சொல்வது வரலாற்றுப் பிழை. இன்றைக்கு தம்பி துரை வைகோ மதிமுக-வின் தலைமைக் கழகச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கிறார். மதிமுக-வில் இருக்கிற தொண்டர்கள் அதை உற்சாகமாக வரவேற்கிறார்கள். எந்த ஒரு முடிவையும் அந்தக் கட்சியினுடைய தொண்டர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த முடிவை பொதுமக்களும் ஏற்றுக்கொள்கிற நிலைமைக்கு காலம் கொண்டுவந்து நிறுத்தும். அதுதான் இங்கேயும் நடக்கப்போகிறது” என்கிறார்.

`இது வாரிசு அரசியல் இல்லை எனில், எது வாரிசு அரசியல்?!’  - துரை வைகோவுக்காகச் சமாளிக்கிறாரா வைகோ?

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், ``துரை வைகோ வந்திருப்பது வாரிசு அரசியல் அல்ல; வரலாற்று அரசியல். ஏனென்றால் மதிமுக ஆளுகின்ற கட்சி அல்ல. அதிகாரத்தில் இருக்கிற கட்சி அல்ல. ஆயுள் முழுவதும் போராடுவதற்கென்று பிறந்த கட்சி. தேர்தல் களத்தில் மதிமுக தோற்றுப்போயிருந்தாலும் போர்க்களத்தில் அது வென்றே வந்திருக்கிறது. 19 மாத காலம் எட்டுக்கு நாலு கொட்டடியில், இருண்ட சிறையில் தவமிருந்து கருத்துரிமைக்கு காப்புரிமை பெற்றுத்தந்தவர் வைகோ. முல்லைப்பெரியாறு பிரச்னையில் தமிழ்நாட்டினுடைய உரிமையை நிலைநாட்டுவதற்குப் பல்வேறு களங்களைக் கண்டு முல்லைப்பெரியாறை மீட்டுத்தந்தவர் வைகோதான். ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டிருக்கிறது என்றால், அதை இழுத்து மூடுவதற்கு பொதுமக்களே அறப்போருக்கு அணியமானார்கள் என்றால் அந்த அக்னியை விதைத்தவருக்குப் பெயர் வைகோ.

வைகோவுடன் துரை வைகோ
வைகோவுடன் துரை வைகோ

தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த போராட்டத்துக்கு அவர் முகம் தந்திருக்கிறார். 54 கவன ஈர்ப்பு தீர்மானங்களை ஈழத்தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறார். லண்டனில், ஜெனீவாவின், அமெரிக்காவின் ஆஸ்லோவில் என்று உலக அரங்கில் தமிழின விடுதலையை அவர் முன்மொழிந்து பேசிய பேச்சுகள் வரலாற்றுச் சிறப்புமிகுந்தவை. ஓர் இயக்கத்தைத் தொடங்கி கன்னியாகுமரி - சென்னை, நெல்லை - சென்னை, பூம்புகாரிலிருந்து கல்லடை என்று தொடர்ந்து நடைப்பயணம் மேற்கொண்டு, அந்த இயக்கத்தை நிலைநிறுத்துவதற்கு வைகோ கொடுத்த விலை எனக்குத் தெரிந்து இந்திய அரசியலில் யாரும் கொடுக்காத விலை. ஆனால் அவர் தவறு இழைத்திருக்கிறார். எந்தக் கட்சியிலிருந்து விலகி வந்தாரோ அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது. எந்தக் கட்சி ஆகாது என்று, வேண்டாமென்று 1994-ல் ஏப்ரல் 16-ல் அறிவித்தாரோ அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தது என வைகோவினுடைய நிலைப்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே அதிகாரத்தை விரும்புகிறவர்கள் அண்ணன் வைகோவை நம்பியிருந்தால் அதிகாரத்துக்கு வர முடியாது என்று கருதி அந்தக் கட்சியிலிருந்து இடம்பெயர்ந்து தாய்க்கழகத்தில் இணைந்தார்கள். இன்றைக்கு ஒரு பாசிசக் கட்சி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு திட்டமிடுகிறது. திராவிட இயக்கத்தை வீழ்த்துவதே அவர்களது குறிக்கோள். ஆகவே மனிதனை மனிதனாக்கிய திராவிட இயக்கத்தைக் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு வைகோவுக்கு இருக்கிறது. ஆகவே திமுக-வுடன் இசைந்தும் இணைந்தும் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டு மதிமுக இன்றைக்குப் பேசப்படுகிற இடத்தில் இருக்கிறது.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

ஆகவே வைகோ களைத்துப்போய் இருக்கிறார், ம.தி.மு.க இளைத்துப்போய் இருக்கிறது. கட்சியைவிட்டு பலபேர் போய்விட்டார்கள். எல்லா ஊரிலும் அமைப்பு இருந்தாலும் அந்த அமைப்பு இயங்கக்கூடிய நிலையில் இன்றைக்கு இல்லை. ஆகவே வைகோவின் சுமைகளைப் பகிர்ந்துகொள்ளவும், கழகத் தோழர்களை ஒருங்கிணைக்கவும் துரை வைகோ களமாடுவார், எல்லோருடைய கவனத்தையும் கவருவார் என நம்புகிறேன். தம்பி துரை வைகோவின் வருகை நல்வரவாகட்டும். ஒரு வரலாற்று மாற்றத்துக்காக அவர் வாசல் திறந்துவைப்பார் என்று அந்தக் கட்சியின் சராசரித் தொண்டர்கள் நம்புவதைப்போலவே நாஞ்சில் சம்பத்தும் நம்புகிறேன்" என்றார் விரிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு