Published:Updated:

``புதுச்சேரியில் திமுக ஆட்சி என ஸ்டாலின் சொன்னதில் தவறில்லை!” - நாராயணசாமி

நாராயணசாமி

”புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சொன்னதில் எந்தவித தவறும் இல்லை.” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``புதுச்சேரியில் திமுக ஆட்சி என ஸ்டாலின் சொன்னதில் தவறில்லை!” - நாராயணசாமி

”புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சொன்னதில் எந்தவித தவறும் இல்லை.” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

புதுச்சேரியில் தனது கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், “புதுவை மாநிலத்தில் ஃபரூக் மரைக்காயர் தலைமையிலும், டி.ராமச்சந்திரன் தலைமையிலும், ஜானகிராமன் தலைமையிலும் நமது தி.மு.க ஆட்சி நடைபெற்றிருக்கிறது. அதனால் நிச்சயமாக தி.மு.க ஆட்சி புதுவை மாநிலத்தில் மீண்டும்  உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் பட வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார். புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலின் பேச்சின் தொடர்ச்சியாக தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்வதற்கான கோப்புகளை தமிழக ஆளுநருக்கு அரசு அனுப்பியும் இதுவரை ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே நடத்தி வருகின்றனர். அதனால் பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அதனால் உடனடியாக புதுச்சேரி அரசு சட்டமன்றத்தைக்கூட்டி ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும். இந்தியாவில் சண்டிகர் மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மின் துறையை தனியார்மாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஆனால் புதுச்சேரியில் மட்டும் மின் துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்று முதல்வரும் அமைச்சர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். தேவைப்பட்டால் மின் துறை தனியார்மயமாக்கலை தடுப்பதற்காக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர இருக்கிறோம். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான் அரசியலில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகவே அறிக்கை வெளியிட்டு என் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

ஆறு முறை கட்சி மாறியவருக்கு என்னைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது. அவர் இனிமேல் தலைகீழாக நின்றாலும் புதுச்சேரி முதல்வர் என்ற அவரது கனவு பலிக்காது. அவருக்கு நாவடக்கம் தேவை. அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்தவன் நான். ஆனால் அதை நான் சொல்ல விரும்பவில்லை. புதுச்சேரியில் கோயில் மற்றும் பள்ளிகள் அருகே ஏற்கெனவே நிறைய மதுபான கடைகள் இருக்கின்றன. தற்போது வருமானத்தை மட்டும் குறிவைத்து ரெஸ்டோ பார் என்ற பெயரில் குடியிருப்பு, கோவில், பள்ளிகள் அருகே மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகிறார். கோயில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே இருக்கும் மதுபான கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அதற்காக நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறோம்.

கலால் துறையில் இமாலய ஊழல் நடந்து வருகிறது, குப்பை அள்ளுவதில் ஊழல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரிடம் கையொப்பம் வாங்குவதற்கென்றே நான்கு புரோக்கர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் முதலமைச்சரை நாட முடிகிறது. அதில் ஒரு புரோக்கருக்கு கோடி கணக்கில் சொத்து இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் அவரது பெயரை ஆதாரத்துடன் வெளியிடுவேன்” என்றவரிடம் ஸ்டாலின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் சொன்னதில் எந்தவித தவறும் இல்லை. அந்தந்த கட்சியினர் தங்கள் ஆட்சி ஒரு மாநிலத்தில் மலர வேண்டும் என்று நினைப்பது நியாயம்தான்” என்று முடித்துக்கொண்டார்.