Published:Updated:

``ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாகிறது!" – நாராயணசாமி காட்டம்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``பிரதமர் ஒரு சர்வாதிகாரியாக இருப்பது போலவும், அவர் கலந்துகொண்ட விழாவில் முதல்வர் கோரிக்கை வைக்கக் கூடாது என்றும் சொல்வதன் மூலம் பா.ஜ.க-வினர் அரசியலில் அரைவேக்காடுகள் என்பது தெளிவாகத் தெரிகிறது.” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாகிறது!" – நாராயணசாமி காட்டம்

``பிரதமர் ஒரு சர்வாதிகாரியாக இருப்பது போலவும், அவர் கலந்துகொண்ட விழாவில் முதல்வர் கோரிக்கை வைக்கக் கூடாது என்றும் சொல்வதன் மூலம் பா.ஜ.க-வினர் அரசியலில் அரைவேக்காடுகள் என்பது தெளிவாகத் தெரிகிறது.” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்னைக்கு விஜயம் செய்து ஒன்றிய, மாநில அரசின் ரூ.31,400/- கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில், `மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்திக்கு இணையாக தமிழை ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதி பாதியில் நிறுத்தப்பட கூடாது. கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்றார்போல் நிதி வழங்க வேண்டும்' என பிரதமரிடம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதமர் செல்லும்போது அவரிடம் முதல்வர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். ஆனால், இதனை பெரிதுபடுத்தி பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் பிரதமர் பங்கேற்றக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கைகளை கேட்டது, பிரதமரை கொச்சைப்படுத்தியதாக இருக்கிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டு திட்டங்களை நிறைவேற்றினால்தான் நாடு வளர்ச்சி பெறும். முதல்வர் என்ற முறையில் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னுடைய கடமையை செய்துள்ளார். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், விவரம் தெரியாமல் பிரதமர் ஒரு சர்வாதிகாரியாக இருப்பது போலவும், அவர் கலந்துகொண்ட விழாவில் முதல்வர் கோரிக்கை வைக்கக் கூடாது என்றும் சொல்வதன் மூலம் பா.ஜ.க-வினர் அரசியலில் அரைவேக்காடுகள் என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்களின் உரிமையை பற்றி கேட்பதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு உரிமை உண்டு. ஒரு கட்சியினர் தங்களது பிரதமருக்கு தாங்கள் விசுவாசமான இருக்கிறோம் என்பதை காட்டி கொள்வதற்காக ஜால்ரா போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ்நாடு மக்களின் உணர்வை முதல்வர் பிரதிபலித்துள்ளார். எனவே, அவரை நாங்கள் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். முதல்வர் தெரிவித்த கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். புதுச்சேரி அரசானது மின் விநியோகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தது உறுதியாகியிருக்கிறது. மின் துறை தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெளிவாக இருக்கிறது.

முதல்வர் ரங்கசாமி!
முதல்வர் ரங்கசாமி!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தபோது, அதனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். இப்போது பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டதால் முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து கையெழுத்து பெற்றுள்ளார்கள். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மின் விநியோகத்தை தனியார் மயமாக்க முடிவு எடுத்துவிட்டீர்களா? என்று முதல்வரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, மக்களுக்கு எது நன்மையோ அதை நாங்கள் செய்வோம் என்று மழுப்பலாக பதில் கூறியுள்ளார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தொழிலாளர்களிடம் மற்ற மாநிலங்களில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்கப்பட்ட பிறகு எந்த நிலை இருக்கிறது என்பதை பார்த்து, அதன்பிறகு தொழிலாளர்களிடம் கலந்து பேசி அரசு முடிவு எடுக்கும் என்று சொன்ன முதல்வர், இப்போது வாயை மூடிக்கொண்டு அந்த கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதிலிருந்து முதல்வர் எவ்வளவு பலவீனமாக உள்ளார் என்பதும், பா.ஜ.க எப்படி ரங்கசாமியை ஆட்டிப்படைக்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம். மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம். சில தினங்களுக்கு முன்பு நடந்த ஸ்மார்ட் சிட்டி நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, இத்திட்டத்தில் 64 கோடி தான் செலவு செய்யப்பட்டுள்ளது. கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளார். 2011 முதல் 2016 வரை ரங்கசாமி முதல்வராக இருந்தபோது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற முடிவு செய்தோம். அதை மத்திய அரசும் ஏற்றது. ரூ.1,500/- கோடியில் 64 திட்டங்களுக்கு நாங்கள் கோப்பு அனுப்பினோம். ஆனால், கவர்னராக இருந்த கிரண்பேடியும், தலைமைச் செயலராக இருந்த அஸ்வனிகுமாரும் கோப்புகளை திருப்பி அனுப்பி திட்டங்களை காலதாமதம் செய்தார்கள்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரங்கசாமி கிரண்பேடிக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். மேலும் அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம்தான் பொறுப்பாளராக இருந்தார். எனவே அவரிடம் தான் திட்டம் காலதாமதமானதற்கு ரங்கசாமி கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் காலதாமதம் ஆனதற்கு கிரண்பேடியும், அதிகாரிகளும்தான் காரணம். இப்போது ஏதுவான துணைநிலை ஆளுநர், சாதகமான அதிகாரிகள் இருக்கிறார்கள். நிதி இருக்கிறது. ஓராண்டு காலமாக ஆட்சியில் இருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நீங்கள் புதிய சைக்கிளை விட்டதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. என்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்ட பஞ்சாலைகள், கூட்டுறவு நூற்பாலைகளை திறப்போம் என்றும் கூட்டுறவு நிறுவனங்களை திறந்து தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கொடுப்போம் என்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்போம் என்றும் சொன்னார்கள்.

ஆனால் மூன்று பஞ்சாலைகளின் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல், அவற்றை மூடுவதற்கு தொழில்துறையும், தொழிலாளர் துறையும் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு அவலமான ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி தலைமையில் அரங்கேறி கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அரியாங்குப்பத்தில் ஒரு ரௌடி வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர் கதையாக இருந்து வருகிறது. சிறையில் உள்ள குற்றவாளிகள் வியாபாரிகளை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பது தொடங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் முதல்வராக ரங்கசாமி வருகிறோரா, அப்போதெல்லாம் புதுச்சேரி கொலை நகரமாக ஆகிவிடும். மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அரியாங்குப்பம், திருக்கனூர், காமராஜர் நகர், கவிக்குயில் மற்றும் நகரப்பகுதியில் கஞ்சா சரளமாக விற்கப்படுகிறது. வெளிநாட்டினர் கொக்கைன் கொண்டு வந்து விற்கிறார்கள். இதனால் புதுச்சேரி கலாசாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் அவதிப்படுகிறார்கள். அதை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல்துறை ஒத்துழைப்போடு இது நடக்கிறது. முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி விலகினால்தான் புதுச்சேரி மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். இல்லையென்றால் தொடர்ந்து கொலைகள் நடந்து கொண்டிருக்கும். அவரால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதற்கு காரணம், அமைச்சரவையில் ஊழல் இருப்பதால் அதிகாரிகளும் ஊழல் செய்கிறார்கள். இதனால் மாநில வளர்ச்சி தடைபடுகிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றப்படவில்லை. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை. மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தர இவர்களுக்கு தெம்பு, திராணி இல்லை. பா.ஜ.க-வின் கை பொம்மையாகவும் ரங்கசாமி செயல்படுகிறார். பொருளாதார வளர்ச்சி குறைந்து வேலைவாய்ப்பு இல்லாத ஒரு நிலை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இது மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism