Published:Updated:

``புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது... ரங்கசாமி பாஜக-வுக்கு அடிமையாகிவிட்டார்!" - நாராயணசாமி

நாராயணசாமி

``தமிழக அரசு விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை பேசுவது அழகல்ல. அரசியல் செய்ய விரும்பினால், தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்." – நாராயணசாமி

``புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது... ரங்கசாமி பாஜக-வுக்கு அடிமையாகிவிட்டார்!" - நாராயணசாமி

``தமிழக அரசு விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை பேசுவது அழகல்ல. அரசியல் செய்ய விரும்பினால், தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்." – நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``அரசின் முடிவுகளில் தலையிட ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். அதை பொதுவெளியில் பேசுவது அழகல்ல. ஆனால் தமிழக ஆளுநர் ரவியும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும் இதைத் தொடர்ந்து செய்கின்றனர். மக்களால் தேர்வான அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றுதான் அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது. அதைத் தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள் கேட்க மறுக்கின்றனர். தெலங்கானா ஆளுநர் மாளிகையில் இந்த மாதத்தில் எந்த நாளில் மக்கள் குறைகேட்கும் நிகழ்வை ஆளுநர் நடத்துகிறார் என்று தெரிவித்தால் அதை நேரில் பார்த்து உறுதிசெய்ய விரும்புகிறேன்.

புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

என் சவாலை ஏற்று அந்தத் தேதியை ஆளுநர் தமிழிசை தெரிவிப்பாரா... குறை கேட்கும் நிகழ்வை நடத்தினால், அவர் ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்க முடியாது. பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியினர் அவரை விரட்டியடிப்பர். முக்கியமாக தமிழக அரசு விஷயங்களில் மூக்கை நுழைப்பேன் என தமிழிசை பேசுவது அழகல்ல. அரசியல் செய்ய விரும்பினால், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம். மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியை முருகன் வகிக்கவில்லை. மீன்வளத்துறை உள்ளிட்ட சில துறைகளை வைத்திருக்கிறார். அவர் பொறுப்பு வகிக்கும் துறைகளுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தலாம்.

ஒட்டுமொத்த துறைகளுக்கு நடத்தலாமா... அரசு அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதனும் பங்கேற்றிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கட்சித் தலைவரைப் பங்கேற்க அனுமதிக்க யார் அதிகாரம் அளித்தது எனக் கேள்வி எழுகிறது. இது மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற முருகன் எடுத்த ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கட்சித் தலைவர் பங்கேற்புக்கு மத்திய இணை அமைச்சர் முருகன், முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா ஆகிய மூவர்தான் பொறுப்பு. இந்த விவகாரத்திஸ் ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறியதற்காக மத்திய அமைச்சர் முருகன் பதவி விலக வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

தலைமைச் செயலர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரியில் நடைபெறும் இரட்டை ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தாலும் அவர் போட்டிருக்கும் சட்டை பா.ஜ.க-வுக்குச் சொந்தம். அவர் பா.ஜ.க-வுக்கு அடிமையாகிவிட்டார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பா.ஜ.க கூட்டங்களில் பங்கேற்று விதிகளை மீறிச் செயல்படுவதால் நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம். புதிய மதுபான ஆலைகள் அனுமதிக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், ரூ.90 கோடி லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி வாய் திறப்பாரா?” என்றார்.