Published:Updated:

``ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அதிகாரிகளை மிரட்டுகின்றனர்” - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

நாராயணசாமி

”சபாநாயகர் பா.ஜ.க-வின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கட்சி அலுவலக விழாக்களில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது. தனது அதிகார எல்லையை மீறி அரசு நிர்வாகத்தில் சபாநாயகர் தலையிடுகிறார்” – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அதிகாரிகளை மிரட்டுகின்றனர்” - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

”சபாநாயகர் பா.ஜ.க-வின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கட்சி அலுவலக விழாக்களில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது. தனது அதிகார எல்லையை மீறி அரசு நிர்வாகத்தில் சபாநாயகர் தலையிடுகிறார்” – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுவை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துகின்றனர். நேற்று முன்தினமும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.  அதில் தொகுதி வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், பா.ஜ.க எம்எல்ஏ-க்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் முதலமைச்சர்மீது புகார் செய்துள்ளனர். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புறக்கணிக்கப்பட்டால், ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை அவர்கள் ஏன் திரும்பப் பெறவில்லை...  தெம்பும் திராணியும் இருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டியதுதானே... பா.ஜ.க-வினர் சும்மா பூச்சாண்டி  காட்டக் கூடாது. இது பா.ஜ.க-வின் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

புதுச்சேரி
புதுச்சேரி

சமீபத்தில் அமைச்சர் சாய்சரவணக்குமார் காரைக்காலுக்குச் சென்றார். அப்போது தகுதியில்லாத, வறுமைக்கோட்டுக்கு மேல்  உள்ள 200 பேருக்கு சிவப்பு ரேஷன் அட்டையை வழங்கியுள்ளார். ஆனால் ரேஷன் கார்டு மாற்றுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில்  குடிமைப்பொருள் வழங்கல் துறையில் தூங்குகின்றன. தகுதியில்லாதவர்களுக்கு சிவப்பு ரேஷன் அட்டை வழங்கியதைத் தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மீது பா.ஜ.க-வினர் புகார் அளித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அதிகாரிகளை மிரட்டுகின்றனர். அதற்குக் காரணம்  ரௌடிகளும், கொலையாளிகளும் பா.ஜ.க-வில் சேர்ந்திருப்பதுதான். கட்சிமாறிகளுக்குத்தான் பா.ஜ.க-வில் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. உண்மையாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேற்றைய தினம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அனுமதி பெற்று நடத்திய போராட்டத்தில் திடீரென இந்து முன்னணியினர் நுழைந்து கல்வீச்சு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, `எப்படி போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தீர்கள்?’ என்று சபாநாயகர் செல்வம் போலீஸை மிரட்டுகிறார். சபாநாயகர் என்பவர் நடுநிலை வகிக்க வேண்டும். அவர் அரசியல்  செய்ய விரும்பினால் பதவி விலகி அரசியலுக்கு வர வேண்டும். தொடர்ச்சியாக அவர் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகிறார். சபாநாயகர் பா.ஜ.க-வின்  கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கட்சி அலுவலக விழாக்களில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது. தனது அதிகார எல்லையை மீறி அரசு  நிர்வாகத்தில் சபாநாயகர் தலையிடுகிறார். அதை அவர் தவிர்க்க வேண்டும். வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறிவருகிறது. காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீரைக் காய்ச்சி குடிக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.

இதுவரை  கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவில்லை. நடமாடும் மருத்துவ முகாம் அமைக்க கவர்னர் அறிவுறுத்தியும் நடவடிக்கை  எடுக்கவில்லை. கைக்குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனைகளில் நிற்பது வேதனையளிக்கிறது. சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாய்லாந்து, மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் அனுப்பியுள்ளேன். பா.ஜ.க ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த காங்கிரஸாரின் கருத்து. இதை வலியுறுத்தி எழுத்துபூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்” என்றார்.