Published:Updated:

பற்றவைத்த கந்தசாமி... பதற்றத்தில் புதுச்சேரி!

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
News
புதுச்சேரி

புதுச்சேரி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, மீண்டும் பிரான்ஸ் நாட்டுடன் இணையலாம்’ என்று பிரெஞ்ச்-இந்திய ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

‘‘மாநில மக்களின் உரிமைக்காக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. புதுச்சேரி மக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்” - ஆகஸ்ட் 16-ம் தேதி, இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த நாள் விழா கொண்டாட்டத் தின்போது இப்படிப் பேசி பரபரப்புத் தீயைப் பற்றவைத்தார் முதல்வர் நாராயணசாமி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘நாங்கள் அடிமை கிடையாது. ஒப்பந்தத்தின்படிதான் இந்திய அரசுடன் இணைந்திருக்கிறோம். இன்றும் புதுச்சேரி மக்களிடம் கருத்து கேட்டாலும், `பிரெஞ்ச் அரசுடன் இணைவோம்’ என்றுதான் சொல்வார்கள்’’ என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசி அனலைக் கூட்டினார் சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் அமைச்சர் கந்தசாமியும் உதிர்த்துவரும் உஷ்ணமேற்றும் வார்த்தைகளால், கடந்த ஒரு மாத காலமாக புதுச்சேரியில் இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

சமீபத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘‘புதுச்சேரியைத் தமிழகத் துடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. அப்படி நடந்தால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைத் தமிழகத்துடனும், ஏனாமை ஆந்திராவுடனும், மாஹேவை கேரளாவுடனும் இணைத்துவிடுவார்கள்’’ என்றும் அமைச்சர் கந்தசாமி பேசினார்.

நாராயணசாமி
நாராயணசாமி

‘வாக்கெடுப்பு நடத்தி பிரான்ஸுடன் இணைவோம். தமிழகத்துடன் இணைக்க நினைத்தால், 1979 போராட்டம் மீண்டும் வரும்’ என்று மத்திய அரசுக்கு எதிராகச் சிலர் சமூக வலைதளங்களில் கொதித்து வருவதால், அங்கே உஷ்ணம் கூடியிருக்கிறது. மேலும் ஒரு போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் புதுச்சேரியில் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமியுடன் பேசினோம். “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசைச் செயல்படவிடாமல் மத்திய அரசு முடக்குகிறது. துணைநிலை ஆளுநர் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாராலும் தன்னிச்சையாக மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. 10,000 அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை. காலியாக இருக்கும் 9,500 அரசுப் பணியிடங்களை நிரப்ப முடியாததால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. இப்படி அனைத்து வகையிலும் புதுச்சேரியை முடக்கி, தமிழகத்துடன் இணைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

பற்றவைத்த கந்தசாமி... பதற்றத்தில் புதுச்சேரி!

வாக்கெடுப்பு நடத்தி ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் இந்திய அரசுடன் இணைந்தோம். ஆனால், எங்களுக்கான நிதி, உரிமைகள் என எதையும் மத்திய அரசு அளிக்கவில்லை. அதனால், மீண்டும் அதே போல வாக்கெடுப்பு நடத்தி பிரான்ஸுடன் இணையப்போகிறோம் என்று சொன்னால், மத்திய அரசால் என்ன செய்ய முடியும்? புதுச்சேரி மக்களும் பிரான்ஸ் நாட்டுடன் இணைவதைத்தான் விரும்புவார்கள்’’ என்றார் ஆவேசமாக.

பிரெஞ்ச்-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1954-ம் ஆண்டு புதுச்சேரிப் பகுதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரான்ஸ். இணைப்பின்போது, ‘புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்தார், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. 1979-ல் பிரதமராகப் பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய், தமிழகத்துடன் புதுச்சேரியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் அதற்கு ஆதரவு தெரிவிக்க, வெகுண்டெழுந்தனர் புதுச்சேரி மக்கள். இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைத்துத் தரப்பினரும் முன்னெடுத்த ‘இணைப்பு எதிர்ப்பு’ போராட்டத்தால் பற்றியெரிந்தது புதுச்சேரி. அரசு அலுவலகங்கள், வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரத்தக் களறியாகின புதுச்சேரி வீதிகள். வன்முறை, ஊரடங்கு உத்தரவு, உயிரிழப்புகள் என 10 நாள்கள் தொடர்ந்த போராட்டத்தையடுத்து, இணைப்பு முடிவை மொரார்ஜி தேசாய் கைவிட்டார். இது பழைய வரலாறு.

‘‘ `புதுச்சேரி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, மீண்டும் பிரான்ஸ் நாட்டுடன் இணையலாம்’ என்று பிரெஞ்ச்-இந்திய ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதே சமயம், ‘புதுச்சேரியின் தனித்துவம் பாதுகாக்கப்படும்’ என்ற மத்திய அரசின் வாக்குறுதி மீறப்படும் பட்சத்தில், 1979-ல் ஏற்பட்ட மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

கந்தசாமி - சாமிநாதன்
கந்தசாமி - சாமிநாதன்

‘‘ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்த மாநில அமைச்சர் ஒருவரே, புதுச்சேரி அரசின் இறையாண்மையைச் சிறுமைப் படுத்தும் வகையில் பொறுப்பில்லாத குற்றச்சாட்டை வைப்பது சட்டப்படி கண்டிக்கத்தக்கது’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கும் புதுச்சேரி பி.ஜே.பி தலைவர் சாமிநாதனிடம் பேசியபோது, “இணைப்பு என்று வெளியான தகவலால் புதுச்சேரியில் ஏற்கெனவே ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், வன்முறையைத் தூண்டும் வகையில் அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத் தக்கது. இது குறித்து உள்துறைக்குப் புகார் அளித்திருக்கிறோம்’’ என்றார்.

மத்திய அரசால் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றால், தொடர் சட்டப் போராட்டத்தின் மூலமே அதை மீட்டெடுக்க வேண்டும். அதைவிடுத்து, எளிய மக்களின் உணர்வுகளை ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தால், மோசமான விபரீதங்களை எதிர்கொள்ள நேரிடும்!