Election bannerElection banner
Published:Updated:

குமரி: `இலங்கை அரசின் காவலில் ஓர் இந்திய மீனவரோ, படகோ இல்லை!’ - பிரதமர் மோடி பெருமிதம்

கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி
கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி

`புதிய மீன்பிடித் துறைமுகங்கள், மீன்களை இறக்கும் மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதில் சிறந்த படகுகள், கடலில் போகும் உபகரணங்கள், கடல்பாசி வளர்க்கும் திட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறோம்’ - பிரதமர் மோடி.

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டசபை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ``வணக்கம், நாகர்கோவிலுக்கு நான் வந்திருப்பதால் இந்த மண்ணின் பெருமைமிகு நாஞ்சில் பொருணன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, செண்பகராமன் பிள்ளை, அய்யா வைகுண்டர், தாணுலிங்க நாடார், கே.காமராஜர், மார்ஷல் நேசமணி ஆகியோரை நினைவுகூர்கிறேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், அருள்மிகு நாகராஜா கோயில், உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை உலக மக்களை கவர்ந்திருக்கின்றன. இன்று (02-04-2021) புனித வெள்ளி. ஏசு கிறிஸ்துவின் தியாகத்தையும், அவர் எளியமக்களுக்கு ஆற்றிய பணியையும் நினைவுகூர்கிறேன்.

பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி
பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி

நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி இருக்கிறது. அவர்களது கவனமெல்லாம் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சி பற்றி இருக்கிறது. உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. டெல்லியின் மத்தியப் பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச்சின்னம் அமைக்க பல ஏக்கர் இடத்தை எடுத்தார். ஆனால், நாங்கள் அப்துல் கலாம் நினைவிடத்தை ராமேஸ்வரத்தில் அமைத்தோம்.

கருணாநிதியின் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியவர்கள், மகுடம் சூட்டிக்கொண்டு வந்த இளவரசரைப் பார்த்து மனப் புழுக்கத்தில் உள்ளனர். தேசத்தின் மனநிலை தெளிவாக உள்ளது. தகுதி பார்க்காமல் உறவு என்ற நிலையில் பதவி கொடுப்பதால் மக்கள் எதிர்க்கட்சியினரை ஜனநாயக விரோதியாகப் பார்க்கிறார்கள். நம் நாட்டின் 356 சட்டப் பிரிவை காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகள் காங்கிரஸால் கலைக்கப்பட்டுள்ளன.

பிரசாரக் கூட்டத்தில் பேசும் மோடி
பிரசாரக் கூட்டத்தில் பேசும் மோடி

முந்தைய அரசு கடலோரப் பகுதியைப் பற்றிக் கவலைப்படவில்லை. கடற்கரையை அபிவிருத்தி செய்ய மூன்று அடிப்படைத் திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, நவீன உள் கட்டமைப்பு வளர்ச்சி, புதிய துறைமுகங்களை அமைத்தல். நம் துறைமுகங்கள் வளர்ச்சியடையப்போகின்றன. நீல பொருளாதாரம் என்ற கடல் சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் முக்கியத்துவம் தருவதால் மீனவர்களின் வருவாய் அதிகரிக்கும்.

புதிய மீன்பிடித் துறைமுகங்கள், மீன்களை இறக்கும் மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதில் சிறந்த படகுகள், கடலில் போகும் உபகரணங்கள், கடல்பாசி வளர்க்கும் திட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறோம். மீனவர்களுக்காக 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பே நம் அரசின் முன்னுரிமை. கடந்த சில நாள்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து 40 மீனவர்களையும், நான்கு படகுகளையும் மீட்டு வந்தோம். இந்தியாவின் எந்த ஒரு மீனவரோ, ஒரு படகோ இப்போது இலங்கை அரசின் காவலில் இல்லை.

பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு
பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு

மீன் விற்க நிறைய தடைகள் இருக்கின்றன. சிறந்த சாலை, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றின் தடைகளை நீக்க சாத்தியப்படும் இடங்களில் சாலை நீர்வழிகளும் அமைக்கப்படும். மீனவர்கள் வாழ்க்கை எளிதாகவும் வளமாகவும் இருக்கும். மீனவர்களுக்கு மீன்பிடித் திட்டங்களும், உணவு பதப்படுத்தும் திட்டங்களும் அமைக்கப்படும். மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் மூலம் மீனவர்களின் வளர்ச்சிக்காக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவிருக்கின்றன" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு