Published:Updated:

Live Updates: `ஒரு பகுதியினருக்கு நன்மைகளைப் புரியவைக்க முடியவில்லை; மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ்!’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு...!

19 Nov 2021 9 AM

``விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள்!” - மோடி

பிரதமர் மோடி, ``விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருள்களைச் சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

19 Nov 2021 9 AM

``விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கம்!’’

மோடி
மோடி

பிரதமர் மோடி, ``2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்குச் சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை நேரடியாக அறிவேன். அவர்களுக்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. விதிகளை மாற்றி சிறப்பான முறையில் விவசாயிகளுக்குக் காப்பீடு வழங்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சரியான விதைகள், உரம், பயிர், காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் 80 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலைச் செய்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருள்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்திருக்கிறது” என்றார்.

19 Nov 2021 8 AM

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு