Published:Updated:

``ஓ.பி.எஸ்-ஸால் தினகரன்தான் கவலைப்பட வேண்டும்... ஏன்னென்றால்?!” - நத்தம் விசுவநாதன் ஓப்பன் டாக்

நத்தம் விசுவநாதன்

அ.தி.மு.க பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்ற தீர்ப்பால் மீண்டும் துணை பொதுச்செயலாளராகியிருக்கிறார் நத்தம் விசுவநாதன். சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள வீட்டில் ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

``ஓ.பி.எஸ்-ஸால் தினகரன்தான் கவலைப்பட வேண்டும்... ஏன்னென்றால்?!” - நத்தம் விசுவநாதன் ஓப்பன் டாக்

அ.தி.மு.க பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்ற தீர்ப்பால் மீண்டும் துணை பொதுச்செயலாளராகியிருக்கிறார் நத்தம் விசுவநாதன். சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள வீட்டில் ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

Published:Updated:
நத்தம் விசுவநாதன்

``தர்மயுத்தத்தின்போது ஓ.பி.எஸ்-ஸுக்குப் பக்கபலமாக இருந்த நீங்கள், எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம்?"

``சசிகலாவும் அவரின் குடும்பமும் இல்லாத கட்சியும், ஆட்சியும் வேண்டும். அம்மா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் ஆகிய ஓ.பி.எஸ்-ஸின் கொள்கைக்காகவே அவரின் பக்கம் நின்றோம். ஆனால், பதவி கிடைத்ததும் சசிகலாவைக் கட்சியில் இணைக்க வேண்டுமென்று தீர்மானம் போட்டார். இப்படி ஒரு சந்தர்ப்பவாதியை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை. தலைமைப் பண்புக்கான தகுதியோ, திறமையோ ஒரு துளிக்கூட ஓ.பி.எஸ்-ஸுக்குக் கிடையாது. கட்சியை எடப்பாடி ஒருவரால்தான் காப்பாற்ற முடியும். அதனால் அவருக்கு பக்கபலமாக இருக்கிறேன்."

நத்தம் விசுவநாதன்
நத்தம் விசுவநாதன்

``தகுதி இல்லாமலா ஜெயலலிதா அவரை இரண்டு முறை முதல்வராக்கினார்?"

"என்ன தகுதி... கிடைத்த வாய்ப்பைக்கூட ஒழுங்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே... டி.டி.வி.தினகரன் மூலம் எப்படியோ சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் ஓ.பி.எஸ் மேலே வந்தார். அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஆகாசத்திலேயே அந்தர்பல்டி அடித்துவிடுவார். முரண்பாடுகளின் மொத்த உருவம் அவர். எடப்பாடி முதல்வரானதும், அம்மா எனக்குத்தான் முதல்வர் பதவியை கொடுத்தார். 'எனக்கு இல்லை எனக்கு இல்லை' என்று `திருவிளையாடல்’ படத்தில் வரும் நாகேஷ்போல புலம்பிக்கொண்டேயிருந்தார். அந்தப் பதவி வெறியிலிருந்து அவரால் வெளியே வர முடியவில்லை."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"இவையெல்லாம் அவருடன் இருக்கும்போது உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் சுயநலமாக இருந்தீர்களா?"

``அம்மா மிகவும் புத்திசாலி. ஆனால், சசிகலாவின் இரட்டை வேடத்தை கடைசிவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா யாரையாவது பாராட்டிவிட்டால்போதும், அவரை அத்தோடு 'க்ளோஸ்' செய்துவிடுவார் சசிகலா. அவ்வளவு ஏன், தினகரனின் பேச்சை அம்மா கேட்கத் தொடங்கியதும், சொந்த அக்கா மகன் என்றுகூடப் பாராமல், அவரையும் காலிசெய்துவிட்டார். எங்கள் நிலைமையெல்லாம் எப்படியிருந்திருக்கும் நினைத்துப் பாருங்கள்... சசிகலாவைப் பற்றிப் புத்தகமே வெளியிடலாம். அந்தப் பூனைக்கு மணிகட்ட யார் வருவார்கள் என்று பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்கள் நினைத்த நேரத்தில்தான் ஓ.பி.எஸ் துணிந்து நின்றார். அதனால் அவரை ஆதரித்தோம். அவருக்குப் பதவி கிடைத்ததும், உடன் இருந்தவர்கள் எக்கேடு கெட்டும் போகட்டும் என முதுகில் குத்திவிட்டார். `சிறப்பாக முதுகில் குத்துபவர்’ என்ற பட்டத்தையே ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுக்கலாம்."

நத்தம் விசுவநாதன்
நத்தம் விசுவநாதன்

"ஓ.பி.எஸ்-ஸைக் கடுமையாக விமர்சித்ததற்காகத்தான் உங்களுக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதோ?"

``இல்லைவே இல்லை. அம்மா இருக்கும்போதே ஓ.பி.எஸ்-ஸுக்கு அடுத்த இடத்தில் நான்தான் இருந்தேன். அதன்படிதான் எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி வழங்கியிருகிறார். தற்போதைய அ.தி.மு.க தலைமையில் மூன்று சமூகங்களுக்குதான் அதிக முக்கியதுவம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கிளப்பிவிடுகிறார்கள். அ.தி.மு.க-வில் சாதியும் கிடையாது, மதமும் கிடையாது. உழைப்பு, அனுபவத்தை மையப்படுத்தித்தான் பதவிகள் வழங்கப்படும்."

நத்தம் விசுவநாதன்
நத்தம் விசுவநாதன்

"ஓ.பி.எஸ் குறித்து நீங்கள் சொல்வது உண்மையென்றால், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அது தெரியாமல் இருக்குமா?"

"ஓ.பி.எஸ் ஒரு மண் குதிரை. அவர்மீது ஏறி அரசியல் ஆற்றைக் கடக்க முடியாது. அவர் பக்கம் சேரும் நிர்வாகிகளின் நிலைமையைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இது வைத்திலிங்கத்துக்கும் தெரியும். சசிகலாவை எப்படியாவது கட்சியில் சேர்த்துவிட, ஓ.பி.எஸ்-ஸைவைத்து காய்நகர்த்துகிறார். சசிகலா தலைமையில் கட்சி வந்து, ஆட்சியைக் கைப்பற்றினால், முதல்வர் ஆகிவிடலாம் என்று வைத்திலிங்கம் அதீத கற்பனையில் இருக்கிறார். எடப்பாடி இருக்கும்வரை சசிகலாவால் கட்சிக்குள் வர முடியாது."

"கடந்தமுறை அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டபோது பா.ஜ.க-தான் அதைத் தீர்த்தது. இப்போது பா.ஜ.க-வின் நிலைப்பாடு ஏன்ன?"

" பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. அது என்னவாக இருந்தாலும் அது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் வேறு கட்சி, நாங்கள் வேறு கட்சி."

``ஓ.பி.எஸ்-ஸால் தினகரன்தான் கவலைப்பட வேண்டும்... ஏன்னென்றால்?!” - நத்தம் விசுவநாதன் ஓப்பன் டாக்

"எதிரும் புதிருமாக இருந்த திண்டுக்கல் சீனிவாசனும், நீங்களும் ஒரே அணியில் எப்படிச் சுமுகமாகச் செயல்படுகிறீர்கள்?"

" (பலமாக சிரிக்கிறார்.) எனக்கும், அண்ணன் சீனிவாசனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'விசு' என்று பாசமாக அழைத்துப் பேசுவார். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்தேதான் சென்று வருகிறோம். எங்களுக்குள் பிரச்னையென யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை."

``ஓ.பி.எஸ்-ஸால் தினகரன்தான் கவலைப்பட வேண்டும்... ஏன்னென்றால்?!” - நத்தம் விசுவநாதன் ஓப்பன் டாக்

"உங்கள் மாவட்டத்தில் ரெட்டியார் சத்திரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஓ.பி.எஸ் பக்கம் சென்றிருக்கிறாரே?"

"ஒரு ஆள் போனதால் ஒண்ணும் ஆகப்போறதில்லை. 99 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடியைத்தான் ஆதரிக்கிறார்கள். பூஜ்யம் ஒன்று என்று மாறும்போது, மொத்தக் கட்சியும் அவர்கள் பக்கம் சென்றதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதேநேரத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கும் தினகரனின் அ.ம.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் சென்றிருக்கிறார்கள். இதனால், தினகரன்தான் கவலைப்பட வேண்டுமே தவிர, எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை."

" சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை எடப்பாடி வேண்டுமென்றே நிராகரித்திருப்பதாக ஓ.பி.எஸ் தரப்பினர் கூறுகிறார்களே?"

" எல்லா விழாக்களுக்கும் எல்லாரும் போக வேண்டுமென்று அவசியமில்லை. எடப்பாடி வேண்டுமென்றே விழாவை நிராகரிக்கவில்லை. அவரின் பிரதிநிதியாக நாங்கள் நேரடியாகச் சென்றோம். 144 தடை உத்தரவிருந்ததால், பதிவுசெய்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விழாவைச் சிறப்பித்தோம்."

``ஓ.பி.எஸ்-ஸால் தினகரன்தான் கவலைப்பட வேண்டும்... ஏன்னென்றால்?!” - நத்தம் விசுவநாதன் ஓப்பன் டாக்

" முத்துராமலிங்க தேவர் ஜயந்தியின்போது தங்கக் கவசத்தை எடுத்துக் கொடுக்கும் விவகாரத்தில் பிரச்னை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?"

"ஓ.பி.எஸ் தரப்பினர் பிரச்னை கிளப்பினால்தான் உண்டு. ஆனால், தங்கக் கவசத்தை எடுத்துக் கொடுக்கும் உரிமை இனி அவருக்கு இல்லை. அ.தி.மு.க பொருளாளராக பொறுப்பேற்று இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன்தான் வங்கியிலிருந்து கவசத்தை எடுத்துக் கொடுப்பார். எப்போதும்போல அ.தி.மு.க சார்பில் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்."

"வரும்காலத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?"

" ஓ.பி.எஸ்-ஸை எடப்பாடி ஒருக்காலமும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்பது எனது நம்பிக்கை. மீண்டும் அவர் இங்கு வந்தால், ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார். அவரைத் தவிர்த்து யார் வந்தாலும் இணைந்துகொள்வோம்."

"கட்சிப் பிரச்னையே கதியென்று இருந்தால், அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதியை யார் கவனிப்பது?"

"ஓராண்டு தி.மு.க ஆட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில், அந்தப் பிரச்னை குறித்துப் பேசவிடாமல் எங்களைத் தடுத்து, தி.மு.க-வுக்கு மறைமுகமாகப் பல நன்மைகளை ஓ.பி.எஸ் செய்கிறார். இருந்தபோதிலும் மக்கள் பிரச்னை குறித்துத் தொடர்ந்து பேசித்தான்வருகிறோம்."