Published:Updated:

`தேசப் பக்தரை இங்கே குறிப்பிடக் கூடாது!’- ஆ.ராசா பேச்சும் பிரக்யாவின் சர்ச்சைக் கருத்தும்

காந்தியைக் கொலை செய்த கோட்சேவை தேசப்பக்தர் என பிரக்யா சிங் மீண்டும் கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பிரக்யா
பிரக்யா

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பிரக்யா சிங் தாகூர், `மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தேசப் பக்தர்' எனப் பேசியிருந்தார். இவரின் கருத்துக்குத் தேசிய அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களே பிரக்யாவின் கருத்தை விமர்சித்திருந்தனர்.

ஆ.ராசா
ஆ.ராசா

பிரக்யா உட்பட 3 பேருக்கு பா.ஜ.க நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து அவர் மன்னிப்புக் கேட்டார். மேலும், இந்தியப் பிரதமர் மோடி, `பிரக்யா பேசியது மன்னிக்கமுடியாத குற்றம். அவரை என் இதயம் மன்னிக்காது” என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரக்யா. தொடர்ந்து சில நாள்களாக அவர் எங்கு இருந்தார் என்பதே தெரியாமல் அமைதியாக இருந்துவந்தார். தற்போது அதே கோட்சேவால் பிரக்யா மீண்டும் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் எஸ்பிஜி என்ற சிறப்புப் பாதுகாப்புப் படை சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எஸ்பிஜி சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி காந்தியைக் கொலை செய்த கோட்சேவை குறிப்பிட்டார் தி.மு.க உறுப்பினர் ஆ.ராசா

பிரக்யா
பிரக்யா

காந்தியைக் கொலை செய்த பிறகு கோட்சே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் சிறு பகுதியைப் படித்துக் காட்டினார். அதில், `32 ஆண்டுகளாகக் காந்தி மீது வஞ்சம் கொண்டிருந்தேன். அதன் பிறகுதான் காந்தியைத் திட்டமிட்டுக் கொலை செய்தேன். அவர் ஒரு சார்பு கொள்கை உடையவர் என நினைத்தே இதைச் செய்தேன்’ என்பதைக் குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.

பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழுவில் சாத்வி பிரக்யா சிங் தாகூர்... கிளம்பும் எதிர்ப்பு!

அப்போது குறுக்கிட்ட பிரக்யா, `இந்த விவாதத்தில் தேசப் பக்தரைக் குறிப்பிடக் கூடாது’ என ராசாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பிரக்யா சிங், கோட்சேவை மீண்டும் தேசப்பக்தர் என நாடாளுமன்றத்திலேயே கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

பிரக்யா குறுக்கிட்டு சர்ச்சையான கருத்தைக் கூறியதால் அவரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தன் கருத்துக்கான விளக்கத்தை நாளை (இன்று) தெரிவிப்பேன் என நாடாளுமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் பிரக்யா. இருந்தும் அவரது பேச்சு நேற்று முதல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் அவரது கருத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.