Published:Updated:

உ.பி மதரஸாக்களில் தேசியகீதம்! - மதரஸா கல்வி வாரிய முடிவுகளும் பின்னணியும்

மதரஸா

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டதும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தேசியக்கொடி ஏற்றுவது, தேசியகீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டன.

உ.பி மதரஸாக்களில் தேசியகீதம்! - மதரஸா கல்வி வாரிய முடிவுகளும் பின்னணியும்

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டதும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தேசியக்கொடி ஏற்றுவது, தேசியகீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டன.

Published:Updated:
மதரஸா

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய மதரஸாக்களிலும் இனி தேசியகீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியத் தலைவர் இப்திகார் அகமது ஜாவெத் தலைமையில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மதரஸா
மதரஸா

மதரஸாக்கள்:

இந்தியாவில் மொத்தமுள்ள 19,132 அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்களில், சுமார் 16,500 மதரஸாக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்றன. மேலும், இங்கு சுமார் 50,000-க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களும் இயங்கிவருகின்றன எனக் கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதன்முறையாக உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டதும், உத்தரப்பிரதேசத்திலுள்ள அனைத்து மதரஸாக்களிலும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), குடியரசு தினம் (ஜனவரி 26) உள்ளிட்ட முக்கிய தினங்களில் தேசியக்கொடி ஏற்றுவது, தேசியகீதம் பாடுவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், கடந்த 2018-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, உத்தரப்பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ஒரு மதரஸாவில், இஸ்லாமிய மாணவர்கள் தேசியகீதம் பாடுவதைத் தடுத்ததாகக் கூறி அங்குள்ள மதகுருமார்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட மதரஸாவின் பதிவு உரிமமும் மாநில அரசால் ரத்து செய்யப்பட்டது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்த நிலையில், நடந்த முடிந்த 2022 உ.பி சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் முதல்வராகியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியக் (UP Board of Madarsa Education) கூட்டம் நடைபெற்றது. வாரியத் தலைவர் இஃப்திகார் அஹ்மத் ஜாவெத் (Iftikhar Ahmad Javed) தலைமையேற்று நடத்திய இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரிய தலைவர் இஃப்திகார் அஹ்மத் ஜாவெத்
உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரிய தலைவர் இஃப்திகார் அஹ்மத் ஜாவெத்

ஆசிரியர் தகுதித் தேர்வு:

மதரஸா கல்வி வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துப் பேசிய இஃப்திகார் அஹ்மத் ஜாவெத், ``பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு (Teachers’ Eligibility Test -TET) நடத்தி அதன் அடிப்படையில், ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவதுபோல, மதரஸாக்களிலும் ஆசிரியர்கள் நியமனத்துக்கென்று தனியாக, `மதரஸா ஆசிரியர் தகுதித் தேர்வு (Madrassa Teachers Eligibility Test (MTET))' முறை அறிமுகப்படுத்தப்படும். அந்தத் தேர்வு செயல்முறை வாரியத்தால் இறுதிசெய்யப்படும். மேலும், இது சம்பந்தமான அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆதார் இணைப்பு:

``மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதற்கு மதரஸா ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள் என்று காரணம் கூறப்படுகிறது. எனவே, குறைந்துவரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மதரஸா ஆசிரியர்கள் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை தனியார் கான்வென்ட் பள்ளிகளில் படிக்கவைத்து வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க, வாரியத்தால் கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகைப் பதிவை சரிபார்க்க, மாணவர்கள் விவரங்களுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும்; மேலும், ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க `பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ்' முறையும் கொண்டுவரப்படும்" எனத் தெரிவித்தார்.

மதரஸா கல்வி வாரிய தலைவர் இஃப்திகார் அஹ்மத் ஜாவெத்
மதரஸா கல்வி வாரிய தலைவர் இஃப்திகார் அஹ்மத் ஜாவெத்

தேசியகீதம் கட்டாயம்:

மிக முக்கியமாக, மதரஸாக்களில் தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக, உருது மொழியில் இஸ்லாமியப் பிரார்த்தனைப் பாடல் பாடப்படுவது வழக்கம். தற்போது அந்த வழக்கத்தை மாற்றி, ``அரசு அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்து மதரஸாக்களிலும் காலை வகுப்புகளுக்கு முன்னதாகப் பாடப்படும் பிரார்த்தனைப் பாடலுக்கு பிறகு, இந்திய தேசியகீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் சேர்ந்து பாட வேண்டும்" என உ.பி அரசின் மதரஸா கல்வி வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியம்
உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியம்

இந்த உத்தரவு குறித்துப் பேசிய இஃப்திகார் ஜாவெத், ``பல்வேறு பள்ளிகளில் தேசியகீதம் பாடப்படுகிறது. மதரஸா மாணவர்களிடமும் தேசபக்தியை வளர்க்க விரும்புகிறோம். இதன் மூலம் மதப் படிப்பு மட்டுமல்லாமல் அவர்கள் நமது வரலாறு, கலாசாரம் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டுமென விரும்புகிறோம். ஏற்கெனவே சில மதரஸாக்களில் தேசியகீதம் பாடப்பட்டுதான்வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து மதரஸாக்களிலும் இந்த முறை கட்டாயமாக அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மதரஸா வாரியத் தேர்வுகள் வரும் மே மாதம் 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism