Published:Updated:

சூடுபிடிக்கும் நேஷனல் ஹெரால்டு விவகாரம்: அலுவலகம் சீல்... கைது நடவடிக்கைக்கு வாய்ப்பா?!

ராகுல் காந்தி - சோனியா காந்தி

“இந்த நேஷனல் ஹெரால்டு விவகாரத்தைவைத்து நள்ளிரவில் கைதுசெய்வதற்கான முன்னெடுப்பும் எடுத்தார்கள். ஆனால்...”

சூடுபிடிக்கும் நேஷனல் ஹெரால்டு விவகாரம்: அலுவலகம் சீல்... கைது நடவடிக்கைக்கு வாய்ப்பா?!

“இந்த நேஷனல் ஹெரால்டு விவகாரத்தைவைத்து நள்ளிரவில் கைதுசெய்வதற்கான முன்னெடுப்பும் எடுத்தார்கள். ஆனால்...”

Published:Updated:
ராகுல் காந்தி - சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக இருக்கும் ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த மாதம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது டெல்லி உட்பட நாடு முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, கடந்த வாரம் சோனியாவிடம் விசாரணை நடத்தியபோதும் காங்கிரஸ் எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்கள், தலைவர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி

இந்த நிலையில், டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்திலுள்ள யங் இந்தியா ஹவுஸ் அலுவலக பகுதியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 3-ம் தேதி பூட்டி சீல் வைத்தனர். அனுமதியின்றி அலுவலக வளாகத்தைத் திறக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததோடு, “வழக்கில் கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கும் வகையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின்கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில், யங் இந்தியா நிறுவனம் இயங்கிவந்த அலுவலகப் பகுதி மட்டும் தற்போது தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டிருக்கிறது. சீல் வைக்கும்போது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை.

சீல் வைக்கப்படவிருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அலுவலக வளாகத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறையின் உத்தரவின்றி யாரும் அந்த சீலை அகற்றக் கூடாது” என்று அதிகாரிகள் வட்டத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சோனியா காந்தி வீட்டின் முன்பும், டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்திலும் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேஷனல் ஹெரால்டு அலுவலகம்
நேஷனல் ஹெரால்டு அலுவலகம்

இந்த நிகழ்வை ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், ஆகஸ்ட் 4-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் காங்கிரஸின் வருங்கால உத்தி குறித்து விவாதிக்கலாம் என்கிறார்கள்.

இது குறித்து டெல்லி காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, “அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ என்று கூறினார்கள். ஆனால், எமர்ஜென்சியில்கூட நிர்வாகம் சரியாக இருந்தது. இப்போது நிர்வாகமே இல்லாமல் முழுக்க முழுக்க சர்வாதிகாரப் போக்காக இருக்கிறது. ‘எங்கள் அனுமதி இல்லாமல் திறக்கக் கூடாது’ என அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் அணுகப்போகிறோம். இந்த விவகாரத்தைவைத்து நள்ளிரவில் கைதுசெய்வதற்கான முன்னெடுப்பும் எடுத்தார்கள். ஆனால், கைதுசெய்தால் தங்களுக்கு எதிர்மறையாக வந்துவிடுமோ என்று ஆலோசித்து தவிர்த்திருக்கிறார்கள்” என்றவர்களிடம் ‘கைதுசெய்வதற்கான முகாந்திரம் இதில் என்ன இருக்கிறது?’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

“இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், குஜராத் கோத்ரா சம்பவம் குறித்து இரண்டு பேர் வழக்கு தொடுக்கிறார்கள். ‘நீங்கள் எப்படி வழக்குத் தொடுக்கலாம்’ என்று இன்று அவர்கள் மீதே வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். எனவே எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று முகாந்திரம் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி கவலை இல்லாமல் கைது செய்வதில்தான் முனைப்பாக இருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. ப.சிதம்பரத்தைக்கூட எஃப்.ஐ.ஆர் இல்லாமலே 100 நாள்கள் சிறையில் வைத்திருந்தார்கள்.

பொதுவாக அமலாக்கத்துறையில் தகவல்துறை என்று ஒரு பிரிவு இருக்கும். அதன் அடிப்படையில்தான் விசாரிப்பார்கள். ஆனால், சமீபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் ‘அமலாக்கத்துறை விசாரணையில் கைதுசெய்யக் கூடாது’ என்று வழக்கு தொடுத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு வழக்கு நான்கு நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது ‘அமலாக்கத்துறையினரும் கைதுசெய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பின்னணியில்தான் எங்கள் தலைவர்கள்மீது கைதுசெய்வதற்கான முன்னெடுப்பு எடுத்தார்கள். ஆனால், அது கைகூடவில்லை. எது எப்படியிருந்தாலும் பா.ஜ.க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் ஜனநாயகரீதியாக எதிர்கொள்வோம்” என்கிறார்கள் டெல்லி காங்கிரஸார்.