Published:Updated:

`என்.ஐ.ஏ சட்டத்தை தவறான வழியில் இந்த அரசு பயன்படுத்தாது!' - மக்களவையில் அமித் ஷா

தினேஷ் ராமையா

என்.ஐ.ஏ-வுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தீவிர விவாதத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா ( LS TV )

தேசிய புலனாய்வு முகமைக்குக் (என்.ஐ.ஏ) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான என்.ஐ.ஏ சட்டம் 2008-ல் திருத்தம் கொண்டுவருதற்கான என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா 2019 மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் இன்று கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மசோதாவை குறிப்பிட்ட பிரிவினருக்கோ அல்லது மதத்தினருக்கோ எதிராகப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், அரசியல்ரீதியாக இந்த சட்டத்தை அரசு பயன்படுத்தவும் வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை
தேசிய புலனாய்வு முகமை

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். என்.ஐ.ஏ-வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் விவகாரத்தில் நமது நாடாளுமன்றம் ஒரே குரலில் பேசுகிறோம் என்ற தகவலை உலகுக்கும் தீவிரவாதிகளுக்கும் நாம் அளிக்க வேண்டும். ஏற்கெனவே அமலில் இருந்த பொடா சட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. தனது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ளவே காங்கிரஸ் கட்சி அதைச் செய்தது.

இந்தச் சட்டத்தை மதரீதியாகப் பயன்படுத்தும் எந்த எண்ணமும் மோடி தலைமையிலான இந்த அரசுக்கு இல்லை. தீவிரவாதத்தை ஒழிப்பதே இந்த அரசின் நோக்கம். அதேபோல், நடவடிக்கை எடுக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவரின் மதத்தையும் நாங்கள் பார்க்க மாட்டோம்'' என்று பேசினார். இந்தச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது ஹைதராபாத் தொகுதி எம்.பி ஓவைசி - உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையில் காரசார விவாதம் நடந்தது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா
LSTV

என்.ஐ.ஏ சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களின்படி இந்தியா மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொடர்பாக, தீவிரவாதக் குற்றங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும். அதேபோல், இதுதொடர்பான குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.