Published:Updated:

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு: ஸ்கோர் செய்த திமுக... கோட்டைவிட்ட அதிமுக!

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா
News
நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, `நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும்' என அறிவித்தார்.

`நாவலர் இரா. நெடுஞ்செழியன்' என்ற பெயரைக் குறிப்பிடாமல் தமிழகத்தின் திராவிட அரசியலை ஒருபோதும் எழுதமுடியாது. அந்த அளவுக்கு அவரின் ஆற்றலும், அரசியல் பங்களிப்பும் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. `எனக்கே பாடம் கற்றுத்தரும் அளவுக்கு தகுதி வாய்ந்தவர் நாவலர்' என பெரியாராலும், `தம்பி வா தலைமை ஏற்க வா' என அண்ணாவாலும், நடமாடும் பல்கலைக்கழகம் என அனைத்து திராவிட அரசியல் தலைவர்களாலும் புகழப்பட்டவர்.

நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன்

1967 முதல் 1969 வரை அண்ணா ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975 வரையில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர். பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர், 1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகவும், 1980-களுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து நிதித்துறை அமைச்சராகவும் செயலாற்றியவர். குறிப்பாக, முதல்வர் பதவில் இருந்தபடியே அண்ணா, எம்.ஜி.ஆர். மறைந்தபோது, இடைக்கால முதலமைச்சராகவும் பொறுப்புவகித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1920 ஜூலை 11-ம் தேதி பிறந்து, 2000 ஜனவரி 12-ம் தேதி மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. அதற்கு ஓராண்டுக்கு முன்பாக, கடந்த 2019 ஜூலை 11-ம் தேதியன்று சட்டமன்றத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ``நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்குச் சிறப்புச்செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்துப்பேசிய அன்றைய அ.தி.மு.க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். திராவிட இயக்கத்தின் தூணான நெடுஞ்செழியனுக்கு அரசின் சார்பில் விழா எடுக்கப்படும். அவரின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் வகையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்" எனத் தெரிவித்திருந்தார்.

நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்
நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்

அதன்பிறகு, `பல மாதங்களாகியும், அதிமுக அரசு உறுதியளித்தபடி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை' என குற்றம்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், `நாவலர் நூற்றாண்டு நிறைவு விழாவை' திட்டமிட்டபடி திமுக கொண்டாடும் என தொண்டர்களுக்கு கடிதம்மூலம் அறிவித்தார். அதன்படி 2020 ஜூலை 11-ம் தேதி அறிவாலயத்தில் வைத்து நாவலர் பிறந்தநாள், நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

அண்ணாவுடன் நெடுஞ்செழியன்...
அண்ணாவுடன் நெடுஞ்செழியன்...

அதேபோல, அன்றைய தினமே அப்போதைய அ.தி.மு.க முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ``சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்படும். அவரின் பிறந்த நாளான ஜூலை 11-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்" என அறிவித்தார். அதன்பிறகும் நூற்றாண்டு விழா முன்னெடுப்பில் அ.தி.மு.க தொய்வு காட்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனைத்தொடர்ந்து, 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, `நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும்' என அறிவித்தார். இந்த நிலையில், நேற்று முந்தினம் (டிசம்பர் 26) சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட, நாவலர் நெடுஞ்செழியனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நாவலர் நெடுஞ்செழியன் சிலையை திறந்துவைத்த மு.க.ஸ்டாலின்
நாவலர் நெடுஞ்செழியன் சிலையை திறந்துவைத்த மு.க.ஸ்டாலின்

அதனைத்தொடர்ந்து, நாட்டுடமையாக்கப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூல்களுக்கான அரசின் நூலுரிமைத் தொகை ரூ.25 லட்சம் அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. மேலும், நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

இரா.நெடுஞ்செழியனின் நூல்களுக்கான அரசின் நூலுரிமைத் தொகை ரூ.25 லட்சம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டபோது...
இரா.நெடுஞ்செழியனின் நூல்களுக்கான அரசின் நூலுரிமைத் தொகை ரூ.25 லட்சம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டபோது...

இந்தநிலையில், தி.மு.க-விலிருந்து பிரிந்து அதிமுகவுக்குச் சென்ற நாவலர் நெடுஞ்செழியனுக்கு, திமுக சார்பில் நூற்றண்டு விழா எடுக்கப்பட்டு, சிலையும் திறந்துவைக்கப்பட்டது. ஆனால், தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்று அதிமுகவில் இணைந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பக்கபலமாகவும், அதிமுக அமைச்சரவையில் அமைச்சர், அவைத்தலைவர் என பல்வேறு பதவிகளில் இருந்து மறைந்த அவருக்கு, அதிமுக சார்பில் பெரிதாக எந்த விழாவும் எடுக்கப்படவில்லையே! என குற்றச்சாட்டும், விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.

இதுகுறித்து, அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் விளக்கம் கேட்டோம். ``மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவின் சொத்து. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பின்பு அவருடன் உறுதுணையாக இருந்துசெயலாற்றியவர். அவர் மறைந்தபோது அதிமுகவை வழிநடத்தும் நால்வர் அணியில் ஒருவராகவும், புரட்சித் தலைவி அம்மா பொதுச்செயலாளர் ஆவதற்கு மிகமுக்கிய காரணமாகவும் இருந்தவர். அதுமட்டுமல்லாமல் இருவரின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றியவர். அவர் இறக்கும்வரை அதிமுகவில் தான் இருந்தார். எனவே, அவருக்குரிய மரியாதையையும், அவருக்குரிய சிறப்பான விழாவையும் முன்னெடுப்பது அதிமுகவின் கடமை.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

திமுக சிலை திறந்த அன்றுதான் நாங்களும் விழா கொண்டாடவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாவலரின் நூறாண்டுகள் என்பது ஓராண்டு முழுதும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. எனவே, அதிமுக தலைமை நிச்சயம் அவருக்கான விழாவை விரைவில் ஏற்பாடு செய்யும். மற்றவர்களைப்போல விளம்பரத்துக்காக அரசியல் செய்யும் கட்சியல்ல அதிமுக! உணர்வுப்பூர்வமாக தலைவர்களுக்கு மரியாதை செய்யும்" என்றார்.

நாவலர் நெடுஞ்செழியன் ஜெயலலிதா
நாவலர் நெடுஞ்செழியன் ஜெயலலிதா

கருணாநிதி மறைந்த பிறகு, ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, திமுக இயக்கம் என்பதே மக்களை ஏமாற்றக்கூடிய, பொய் வாக்குறுதிகள் அளிக்கக்கூடிய, விளம்பரத்தின் பின்னால் ஓடக்கூடிய ஒரு கட்சியாக மாறிவிட்டது. இந்த ஏழுமாத காலத்தில் தினசரி விளம்பரம் செய்கிறார்களே ஒழிய, மக்களுக்கான எந்த பணியையும் உருப்படியாகச் செய்யவில்லை. அதுபோலத்தான், திமுக அரசு நாவலர் நெடுஞ்செழியனுக்கு விழா எடுப்பதும் ஒரு விளம்பரத்துக்காகத்தான்! உண்மையில், கருணாநிதியைவிட திராவிட பாரம்பரியத்துக்கு அதிகம் உழைத்தவர் நாவலர் நெடுஞ்செழியன்தான். அன்றைக்கு முதலமைச்சராக வரவேண்டியரும் நாவலர்தான்.

நெடுஞ்செழியன், ஜெயலலிதா
நெடுஞ்செழியன், ஜெயலலிதா

ஆனால், அவருக்கு வரவேண்டிய பதவிகளையெல்லாம் தட்டிப்பறித்தது, மறைந்த முதல்வர் கருணாநிதியின் குடும்பம். அவர் வளர்ச்சியை தடுத்ததும் அவர்கள்தான். ஆனால், இன்றைக்கு ஏதோ விழா எடுப்பதுபோல எடுக்கிறார்களே தவிர, அவர்களின் உண்மையான நோக்கம் வரலாறுகளை மறைப்பதுதான்" என திமுக மீது குற்றம்சாட்டினார்.

நாவலர் நூற்றாண்டு விழாவில் அதிமுக கோட்டைவிடவும், திமுக புகுந்து ஸ்கோர் செய்திருக்கிறது! `எம்.ஜி.ஆர் நூற்றாண்டையே ஓராண்டு கழித்து தாமதமாகக் கொண்டாடிய அதிமுகவினர், நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை எப்போது கொண்டாடப்போகிறார்கள்?’ எனத் திமுக-வினர் கேள்வி எழுப்புகின்றார்கள்.