கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள முடிகெரே சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் பட்டியலின எம்.எல்.ஏ-வாக நயனா மோதம்மா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். 43 வயதான நயனா, முன்னாள் கார்ப்பரேட் வழக்கறிஞர், இந்திய தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.

இந்நிலையில், இவருக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள் தோல்வியின் விரக்தியால் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி இருக்கின்றனர். பிரசாரத்தின் போது புடவையில் இருந்த பெண், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் புடவையைத் தவிர்த்துப் பிற ஆடைகளை அணிவதாகச் சொல்லி, அவருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றனர்.
மே 10 கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரும், மே 13 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் நயனா மோதம்மாவின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பா.ஜ.க கட்சியுடன் தொடர்புடைய சில குழுக்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பியுள்ளதாக நயனா தெரிவித்து இருக்கிறார். நயனா தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது.
தன்னை அவதூறு செய்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய வீடியோ கிளிப்பை அவரே பதிவிட்டு, ``தோல்வியின் விரக்தி உங்களை மேலும் ஆட்டிப்படைக்க வேண்டாம். அரசியல், நான், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வித்தியாசம் தெரியாத அந்த முட்டாள்களுக்கு பதில்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதோடு, ’என் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் வேறுபட்டது என்பதால் மறைக்க எதுவும் இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையிலோ கார்ப்பரேட் வழக்கறிஞராகவோ சில ஆடைகளை அணிவது சட்டமன்ற உறுப்பினராகத் என் வேலையை எந்த வகையிலும் பாதிக்காது. நான் சில ஆடைகளை அணிவதால் என் வேலையைச் செய்ய முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சமூக வலைதளத்தில் இவருக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.