Published:Updated:

`பாடப்புத்தகத்தில் முகலாயர்களின் வரலாற்றுப் பகுதி நீக்கமா?' - சர்ச்சையும் NCERT விளக்கமும்!

NCERT பாடப்புத்தகம்

`NCERT திட்டமிட்டு நீக்கியப் பகுதிகளில் பெரும்பாலானவை முகலாயர்கள், இஸ்லாமியர்கள் குறித்த வரலாறு' என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதர கல்வியாளர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:

`பாடப்புத்தகத்தில் முகலாயர்களின் வரலாற்றுப் பகுதி நீக்கமா?' - சர்ச்சையும் NCERT விளக்கமும்!

`NCERT திட்டமிட்டு நீக்கியப் பகுதிகளில் பெரும்பாலானவை முகலாயர்கள், இஸ்லாமியர்கள் குறித்த வரலாறு' என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதர கல்வியாளர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

NCERT பாடப்புத்தகம்

`கொரோனா தொற்றின் தாக்கத்தால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கற்றல் பின்னடைவுகளைக் கருத்தில்கொண்டு, அவர்களின் பாடத்திட்டத்தில் சுமையாக இருக்கும் பகுதிகள் நீக்கப்பட்டு திருத்தியமைக்கப்படுகிறது' எனக் கூறி பாடப்புத்தகங்களில் இருந்துவந்த முகலாயர்கள் குறித்த பாடப்பகுதிகளை NCERT நீக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

என்.சி.இ.ஆர்.டி
என்.சி.இ.ஆர்.டி

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க...

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) சார்பாகத் தயாரிக்கப்படும் பாடப்புத்தகங்கள், சி.பி.எஸ்.இ போன்ற மத்தியப் பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா சமயத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட மன அழுத்தம், கற்றல் பின்னடைவுகளைக் களைந்து அவர்களை விரைவாக மீட்டெடுக்க உதவும் நோக்கில் NCERT-ன் பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, ஒரு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. பின்னர் நிபுணர்குழு, `மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பாடங்களைத் தவிர்த்து, சுமையாக இருக்கும் பாடப்பகுதிகளை நீக்கம் செய்யலாம்’ எனப் பரிந்துரை செய்தது. அதன்படி, மாணவர்களுக்குச் சுமையாக இருக்கும் பகுதிகள் நீக்கம்செய்யப்பட்டு திருத்தியமைக்கப்பட்டிருப்பதாக NCERT அறிவிப்பு வெளியிட்டது.

முகலாயர்கள் பற்றிய பாடங்கள் நீக்கம்...

அதன்படி, ``NCERT-ன் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயம் (முகலாய தர்பார், 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகள்) என்ற பாடம் வரலாற்றுப் (இந்திய வரலாறு - பகுதி II) புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்தி புத்தகத்திலிருந்த உருது கவிதைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.

முகலாயர்கள்
முகலாயர்கள்

மேலும், அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் ஒன்றான `சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் அரசியல்' என்ற புத்தகத்திலிருந்த `மக்கள் இயக்கங்களின் எழுச்சி' மற்றும் 'தனிக்கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்' ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த அத்தியாயங்களில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கம் போன்றவை இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தவிர, அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்திலிருந்த 2002 குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.

குஜராத் கலவரம்
குஜராத் கலவரம்

குறிப்பாக, `குஜராத் போன்ற நிகழ்வுகள், அரசியல் நோக்கங்களுக்காக மத உணர்வுகளைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரிக்கின்றன. இது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது' என்றிருந்த பத்தியும், குஜராத் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக குஜராத் அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) விமர்சித்திருந்ததைக் குறிப்பிட்ட பக்கங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன" எனத் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், 11-ம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி, கலாசார மோதல் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், திருத்தியமைக்கப்பட்ட இந்த பாடத்திட்டங்கள் நடப்பு கல்வியாண்டு (2023-24) முதலே செயல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.

குறிப்பாக, `NCERT திட்டமிட்டு நீக்கியப் பகுதிகளில் பெரும்பாலானவை முகலாயர்கள், இஸ்லாமியர்கள் குறித்த வரலாறு' என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதர கல்வியாளர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், `காங்கிரஸ் சார்புடைய எழுத்தாளர்கள் வரலாற்றை திரித்து எழுதியிருக்கிறார்கள். அதை மாற்றும் நேரம் வந்துவிட்டது' என பா.ஜ.க தலைவர்கள் வரவேற்றிருக்கின்றனர்.

NCERT
NCERT

NCERT இயக்குநர் மறுப்பு...

இந்த நிலையில், NCERT-ன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி, ``12-ம் வகுப்பு மாணவர்களுக்காக NCERT தயாரித்திருக்கும் வரலாற்றுப் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்களின் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் முற்றிலும் பொய். அதில் உண்மை இல்லை!" என மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் மேலும், ``தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்படி நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுவதைத்தான் நாங்கள் அமல்படுத்துகிறோம்.

தினேஷ் பிரசாத் சக்லானி
தினேஷ் பிரசாத் சக்லானி

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுவருகிறது. அது விரைவில் இறுதிசெய்யப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி பாடப்புத்தகங்கள் 2024-ல் அச்சிடப்படும். தற்போது நாங்கள் எதையும் கைவிடவில்லை. முகலாயர்களின் வரலாற்றைப் பாடப்புத்தகத்திலிருந்து NCERT நீக்கிவிட்டதாகக் கூறுவது தேவையற்ற விவாதம். இது குறித்து தெரியாதவர்கள், பாடப்புத்தகத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்!" என பதிலளித்திருக்கிறார்.