Published:Updated:

`சிவசேனா முதல்வர்; என்.சி.பி துணை முதல்வர்!' - மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்

மகாராஷ்டிராவில் நடந்துவரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சோனியா - பவார்- தாக்கரே
சோனியா - பவார்- தாக்கரே

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையைப் பெறாததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. சிவசேனா - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் இன்னும் அங்கு இழுபறி நீடித்துவருகிறது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

இந்த விரிசல் பின்னாளில் பெரும் சண்டையாக மாறவே, பா.ஜ.க கூட்டணி முறிந்தது. தற்போது என்.சி.பி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது சிவசேனா. இவர்களின் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாகவும், சிவசேனாவே ஐந்து ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் தொடரும் என்றும் என்.சி.பி தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சிவசேனா! - காங்கிரஸ் முடிவுக்காகக் காத்திருக்கும் உத்தவ்

இன்று மும்பையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு பேசிய என்.சி.பி தலைவர் நவாப் மாலிக், ``சிவசேனா தன் பழைய கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் அவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்துள்ளோம். அடுத்த முதல்வர் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் என்றும் என்.சி.பி துணை முதல்வர் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி அரசில் காங்கிரஸ் பங்கு வகிக்கும் அல்லது பின்னால் இருந்து உதவும். காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. நாளை நாங்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

என்.சி,பி
என்.சி,பி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்.சி.பி தலைவர் சரத் பவார் ஆகிய இருவரும் விரைவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் சந்திப்பில் அரசு அமைப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.