Published:Updated:

`எங்களுக்கும் இரண்டரை ஆண்டு பதவி?’ -மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு செக் வைக்கும் என்.சி.பி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - என்.சி.பி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது சிவசேனா. ` இது முடிவுக்கு வந்தால் மட்டுமே அங்கு விரைவில் புதிய அரசு பதவியேற்கும்' எனக் கூறப்படுகிறது.

என்.சி.பி - சிவசேனா
என்.சி.பி - சிவசேனா

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 20 நாள்கள் ஆகவுள்ள நிலையில் அங்கு இன்னும் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முன்வரவில்லை. அந்த மாநிலத்தில் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பா.ஜ.க - சிவசேனாவுக்குள் ஏற்பட்ட பதவி மோதல்தான் பிரதான காரணம். தாங்கள் கேட்கும் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத பா.ஜ.கவைப் புறம் தள்ளிவிட்டு, நேராக ஆளுநரிடம் சென்று ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க வேண்டும் என்றும், தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க 48 மணிநேரம் கால அவகாசம் வேண்டும் என்றும் சிவசேனா கோரிக்கை வைத்தது. ஆனால், சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஆளுநர், அடுத்தபடியாக உள்ள என்.சி.பி-க்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அவர்களுக்கு நேற்று இரவு வரை பெரும்பான்மையை நிரூபிக்க நேரம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே பிற்பகலில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தார் ஆளுநர்.

`எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை வழங்குவதற்கான சூழலில் இல்லாததால் ஜனாதிபதியின் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்' என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “ முதலில் பா.ஜ.க-வை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்தார். ஆனால், அதற்கு அவர்கள் முன்வரவில்லை. மறுநாள் நாங்கள் சென்று ஆளுநரிடம் 48 மணிநேரம் கால அவகாசம் கேட்டோம். அதற்கும் அவர் ஒப்புதல் வழங்கவில்லை. `நாங்கள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும்' என்று காங்கிரஸ் - என்.சி.பி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதற்காகவே ஆளுநரிடம் நேரம் கேட்டோம்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

பா.ஜ.க-வும் சிவசேனாவும் நீண்ட வருடங்களாகச் சேர்ந்து இருந்தன. ஆனால், தற்போது சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி-யுடன் செல்ல விரும்புகிறது. நாங்கள் இரு கட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் எங்கள் கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்துக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பலருக்கு அமைச்சர் பதவி மீது ஆசை இருக்கும். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் அவர் அப்படி இல்லை. மகாராஷ்டிரா ஆட்சிக்காக தன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவரை கண்டு நாங்கள் பெருமையடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் விதித்த கெடு; முன்வராத 3 கட்சிகள்! -மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை?

தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக போதிய ஆதரவுடன் யாரேனும் ஆட்சியமைக்க வந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு புதிய அரசு அமையும். இல்லையேல் மகாராஷ்டிரா மாநிலம் மீண்டும் தேர்தலைச் சந்திக்கும்.

இந்நிலையில் சிவசேனா- என்.சி.பி- காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தற்போது உருவாகியுள்ள இந்தநிலையைக் கருத்தில் கொண்டு, `முதல்வர் பதவியை என்.சி.பி கேட்க வாய்ப்புள்ளது' எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் - என்.சி.பி- சிவசேனா
காங்கிரஸ் - என்.சி.பி- சிவசேனா

‘தங்களுக்கு இரண்டரை வருட ஆட்சி வேண்டும்' என்றே பா.ஜ.க-வுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது சிவசேனா. அதன்படி அந்த இரண்டரை வருட ஆட்சியைத் தற்போது என்.சி.பி கேட்கலாம் என அரசியல் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

`என்.சி.பி-யை விட சிவசேனா இரண்டு இடங்களில் மட்டுமே அதிகமாக வெற்றி பெற்றுள்ளதால் என்.சி.பி-யின் கோரிக்கைக்கு எந்தத் தடங்கலும் இருக்காது’ எனக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகும் அங்கு கட்சிகளுக்கு இடையேயான பதவி பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையாமல் தொடர்கிறது.