Published:Updated:

`நண்டு’ தானே சார் காரணம்; கைது பண்ணுங்க - அமைச்சர் வீட்டில் நண்டு விட்ட எதிர்க்கட்சியினர்

மகாராஷ்டிரா அணையில் அதிகமான நண்டுகள் இருந்ததே உடைப்புக்குக் காரணம் என அம்மாநில அமைச்சர் தனாஜி சாவந்த் பேசியிருந்தார்.

தனாஜி சாவந்த்
தனாஜி சாவந்த்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்தது. இரவில் அணை உடைந்ததால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் சுற்றுவட்டார கிராமங்களை சூழ்ந்துகொண்டது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அணை
அணை

இந்த அணையானது 2004-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் மிகப்பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை 5 மணியளவில் அணையில் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போதே பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இரவு 9 மணியளவில் அணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த சம்பவம் கடும் விவாதத்திற்குள்ளானது

அணை உடைப்பு சம்பவத்துக்கு அமைச்சர் தனாஜி சாவந்த் கொடுத்த விளக்கம் மக்களை ஆத்திரமடையச் செய்தது. அணையில் அதிகமான நண்டுகள் இருந்ததே உடைப்புக்கு காரணம் எனப் பேசியிருந்தார். அணையை கட்டிய கான்ட்ராக்டரைக் காப்பாற்றுவதற்காக அமைச்சர் இப்படி பேசுகிறார் என்ற பேச்சும் அடிப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் சில நண்டுகளை பிடித்துக்கொண்டு காவல்நிலையம் சென்றனர். அணை உடைப்புக்கு காரணமான நண்டு இதுதான் கைதுசெய்யுங்கள் என்று முறையிட்டார். இந்த நண்டுகள்தான் அணை உடைப்புக்குக் காரணம் என அமைச்சர் கருதினால் இந்த நண்டுகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 கீழ் கொலை வழக்கு பதிவு செய்து நண்டுகளைக் கைது செய்யுங்கள் என்றனர்.

இந்த நிலையில்தான், அமைச்சர் தனாஜி சாவந்த் இல்லத்தை இன்று முற்றுகையிட்ட தேசியவாதக் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், கூடைகளில் தாங்கள் கொண்டு வந்த நண்டுகளை அமைச்சரின் வீட்டில் விட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.