Published:Updated:

`இரண்டே நிமிட அவகாசம்; ஷிஃப்டு முறையில் பாதுகாப்பு!’- பா.ஜ.க கோட்டையை அசைத்த இளம்பெண்

சோனியா தூஹன்
சோனியா தூஹன் ( Quint )

பா.ஜ.க-வின் பிடியில் இருந்த நான்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை மீட்டு கவனம் ஈர்த்துள்ளார் சோனியா தூஹன்.

பா.ஜ.க - சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் என மகாராஷ்ட்ரா அரசியலில் நடந்துவந்த ஆடுபுலி ஆட்டத்தில், 28 வயதுப் பெண் ஒருவர் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் அதிகக் கவனம் பெற்றுள்ளார். அதுவும் அவர் பா.ஜ.க-வை எதிர்த்து நின்று வெற்றியும் பெற்றுள்ளார் என்றால் நிச்சயம் பிரபலமடையத்தானே செய்வார்..!

பா.ஜ.க அரசு பதவியேற்பு
பா.ஜ.க அரசு பதவியேற்பு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க- சிவசேனா ஆகியவற்றின் கூட்டணி முறிந்த பிறகு சிவசேனா- காங்கிரஸ்- என்.சி.பி ஆகிய கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. அந்தக் கூட்டணி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் என்.சி.பி-யின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் கடந்த சனிக்கிழமை காலை யாருக்கும் தெரியாமல் முதல்வராகப் பதவியேற்றார் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ். கூடவே, துணை முதல்வராகப் பதவியேற்றார் அஜித் பவார்.

அந்த நேரத்தில் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்த நான்கு எம்.எல்.ஏ-க்கள் திடீரென காணாமல் போனதாகவும் அவர்களை பா.ஜ.க கடத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. அந்த நான்கு எம்.எல்.ஏ-க்களையும் பா.ஜ.க கோட்டையிலிருந்து யாருக்கும் தெரியாமல் மீட்கும் பொறுப்புதான் என்.சி.பி மாணவர் அணித் தலைவர் சோனியா தூஹனுக்கு வழங்கப்பட்டது. அந்த ஆபரேஷனைக் கையில் எடுத்த 24 மணி நேரத்தில் கச்சிதமாகச் செயல்பட்டு இக்கட்டான சூழலில் என்.சி.பி-யைக் காப்பாற்றி தலைமையிடம் நல்லபெயர் எடுத்துள்ளார் சோனியா.

எம்.எல்.ஏ-க்களுடன் சோனியா
எம்.எல்.ஏ-க்களுடன் சோனியா

எம்.எல்.ஏ-க்கள் மீட்பு ஆபரேஷன்!

என்.சி.பி-யின் எம்.எல்.ஏ-க்கள் மீட்கப்பட்ட ஆபரேஷன் பற்றி `தி குயின்ட்' ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார் சோனியா தூஹன். `பா.ஜ.க பிடியிலிருந்த எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் சரத் பவாருக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பின்னரே அவர்கள் சிக்கிய விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. அதுவும் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால், டெல்லியில் அல்லது அதற்கு அருகில் இருக்க வேண்டும் என நாங்கள் யூகித்தோம்.

முதல்வர் உத்தவ்தான், ஆனால்...? - ஆட்சியையும் கட்சியையும் விட்டுக்கொடுக்காத தாக்கரே குடும்பம்

என்.சி.பி இளைஞர் அணித் தலைவர் திராஜ் சர்மாவுக்கும் எனக்கும் எம்.எல்.ஏ-க்களை மீட்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. முதலில் நாங்கள் எம்.எல்.ஏ-க்கள் எங்கு உள்ளனர் எனத் தீவிர சோதனையை நடத்தினோம். அதன் முடிவில் அவர்கள் ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது.

`இரண்டே நிமிட அவகாசம்; ஷிஃப்டு முறையில் பாதுகாப்பு!’- பா.ஜ.க கோட்டையை அசைத்த இளம்பெண்

பின்னர் நாங்கள் அனைவரும் நேரடியாக குருகிராம் கிளம்பிச் சென்றோம். அந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் அறை எண் 5109, 5110, 5111 ஆகியவற்றில் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் அங்கு சென்றபோது ஹோட்டல் முழுவதும் சுமார் 100 முதல் 150 பா.ஜ.க-வினர் இருந்தனர். அவர்கள் பா.ஜ.க-வினர்தான் என என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஏனெனில் அங்கு குருகிராம் பா.ஜ.க மாவட்டத் தலைவர் பூபேந்தர் சௌதானும் இருந்தார். எம்.எல்.ஏ-க்களை அங்கிருந்து வெளியில் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிட்டது.

பின்னர் நாங்கள் இரு அணிகளாகப் பிரிந்து அதே ஹோட்டலில் இரண்டு அறைகளை எடுத்துத் தங்கி பா.ஜ.க-வினரின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பா.ஜ.க-வினர் இல்லாத இரண்டு நிமிடங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதைப் பயன்படுத்தி ஒரு எம்.எல்.ஏ-வை எங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்.

பின்னர் இரவு 9:30 மணிக்குத்தான் எங்களுக்குத் தெரிந்தது, பா.ஜ.க-வினர் ஷிஃப்டு முறையில் அங்கு காவல் காத்திருந்தார்கள் என்று. மாலை உணவு இடைவேளையின்போது ஒரு குழு வெளியில் சென்று மற்றொரு குழு உள்ளே வரும்போது மேலும் எங்களுக்கு 2 நிமிட அவகாசம் இருக்கிறது என்பதை உணர்ந்தோம்.

சோனியா தூஹன்
சோனியா தூஹன்
twitter

அதேபோல் இரவு உணவுக்காக மீண்டும் குழு மாறியபோது நாங்கள் இரண்டாவது எம்.எல்.ஏ-வை வெளியில் கொண்டுவந்தோம். அவர்கள் இருவரையும் ஹோட்டலுக்குப் பின்னால் இருக்கும் கேட் வழியாக அழைத்துவந்து டெல்லியில் உள்ள சரத் பவார் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டோம்.

மூன்றாவதாக இருந்த எம்.எல்.ஏ-வை நேரடியாகச் சென்று மீட்டு அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக அழைத்து வந்தோம். அப்போதுதான் பெரும் சண்டை வெடித்தது. இருந்தும், அதைச் சமாளித்துக்கொண்டு மூவரையும் எப்படியோ டெல்லி கொண்டு சென்றுவிட்டோம். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 2:40 மணிக்கு விமானம் ஏறி அதிகாலை 4:40 மணிக்கு மும்பையை வந்தடைந்தோம். காலை 5:10 மணிக்கு என்.சி.பி எம்.எல்.ஏ-க்கள் சரத் பவாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின் வேறு இடத்திலிருந்த நான்காவது எம்.எல்.ஏ-வும் மீட்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சோனியா தூஹன்?

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனியா. பள்ளிப் படிப்பை அதே ஊரில் முடித்த அவர், கல்லூரி படிப்பை அம்பலாவில் தொடர்ந்தார். பின்னர் அரசியல் மீதிருந்த ஆர்வத்தினால் தன் 21 வயதில் என்.சி.பி-யின் மாணவர் அமைப்பில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொடங்கியுள்ளார்.

சோனியா தூஹன்
சோனியா தூஹன்
quint

அப்போதிலிருந்து கடுமையான உழைப்பினால் முன்னேறி பின்னர் என்.சி.பி மாணவர் அமைப்பின் தலைவராக உயர்ந்துள்ளார் சோனியா தூஹன். தற்போது நடந்த மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சையில் அவர் தனித்த கவனம் பெற்றுள்ளார். எம்.எல்.ஏ-க்கள் மீட்பு ஆபரேஷனில் இருந்த ஒரே பெண் சோனியாதான் என்பதும் இவர்தான் அந்தக் குழுவை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News & Image Credits : The Quint

மகாராஷ்டிராவின் பரபர அரசியலுக்கு மத்தியில் ஹரியானாவில் சோனியா தூஹனின் சாமர்த்தியம் பற்றிய உங்கள் கருத்தை கமென்டில் பதிவு செய்யுங்கள் மக்களே...!

அடுத்த கட்டுரைக்கு