பிரீமியம் ஸ்டோரி

- க.பழனித்துரை

லகத்தில் ஆளுகை (Governance) பற்றி நிரூபணமான ஓர் உண்மை இருக்கிறது. எவ்வளவு தீர்க்கமான முடிவுகளையும் திட்டங்களையும் மத்திய அரசு எடுத்தாலும், மாநில அரசு அவற்றை சரிவர அமல்படுத்தவில்லை எனில் எதிர்பார்த்த எந்த விளைவையும் சமூகத்தில் ஏற்படுத்த முடியாது. அதேபோல்தான் மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களை, உள்ளாட்சி சரிவர அமல்படுத்தவில்லை என்றால், அந்தத் திட்டங்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. எனவே, இந்த மூன்று அரசுகளும் ஒன்றையொன்று புரிந்து, நம்பிக்கையுடன் இணக்கமாக ஒரே நேர்க்கோட்டில் செயல்படுமேயானால் மிகப்பெரிய மாற்றம் சமூகத்தில் ஏற்படும். இதுவே ஆளுகைக் கோட்பாடு.

அடுத்து எந்த நாட்டில் வலுவாக உள்ளாட்சி செயல்படுகிறதோ அங்கு மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தரமானதாகச் செய்து தரப்படும். இவை அத்தனைக்கும் மேலாக எங்கு ஆளுகை என்பது சிக்கலற்றதாக, எளிமைப்படுத்தப்பட்டதாக, மக்களுக்குப் புரியக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதோ, அங்கு அரசாங்கத்தின்மேல் மக்கள் ஆதிக்கம் செலுத்தி தங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் பணிகளையும் முறையுடன் பெற்றுக்கொள்வார்கள். இதில் மிக முக்கியமான ஒன்று, உள்ளாட்சியை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கு வது. இப்படியான உள்ளாட்சியை உருவாக்குவது சவாலான பணி.

உருவாக்கப்பட்ட உள்ளாட்சியில் மக்களைப் பங்கேற்கச் செய்து அரசாங்கத்தை தமதாக்கிக்கொள்ளும் மனோபாவத்தை மக்களிடம் உருவாக்குவது அதனினும் சவாலான பணி. எந்த நாட்டில் இந்த இரண்டு பணிகளும் சிறப்பாகச் செய்யப்படு கின்றனவோ, அந்த நாட்டில் மக்கள் தரமான சேவையை அரசாங்கத்திட மிருந்து பெற்றுவிடுவார்கள். இந்தப் பணிகள் நடுத்தரவர்க்கம் அதிகமாக வாழும் நாடுகளில் சிறப்பாகச் செய்யப்பட்டுவிடும். ஆனால், ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் இது மிகச் சிரமமே.

உள்ளாட்சி அமைப்புகள்
உள்ளாட்சி அமைப்புகள்

இன்று வளர்ச்சி என்ற பெயரிலும் முன்னேற்றம் என்ற பெயரிலும் மிகப்பெரிய போரை இயற்கை வளங்கள்மீது நடத்தி, தட்பவெட்ப அவசர நிலையைக்கொண்டுவந்து விட்டனர். இதைச் சரி செய்ய ஐ.நா மன்றம் எத்தனை தீர்மானம் நிறைவேற்றினாலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றங்கள் எத்தனை கொள்கைகளை வகுத்தாலும், சட்டமன்றங்கள் எத்தனை திட்டங்களைக் கொண்டுவந்தாலும் சமூகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றால், நாம் வாழும் வாழ்விடம் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும். இதைத்தான் புவியியல் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், உள்ளாட்சியை வலுப்படுத்திச் செயல்பட வைப்பது என்பது இன்றியமையாத பணி. ஆனால், நம் நாட்டில் உள்ளாட்சியை ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்கள் அதிகாரமற்றதாகவும், நிதி குறைந்ததாகவும், திறன்களற்ற தாகவும்தான் வைத்துள்ளன என்று டாடா சமூகவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஆய்வுக்கு ஆலோசகர் என்ற முறையில் அகில இந்திய அளவில் உள்ளாட்சிகள் செயல்படுவதைப் பார்த்தபோது, அரசியல் சாசனம் தரும் அற்புதமான வாய்ப்பை இந்த நாட்டில், நம் சமூகம் பயன்படுத்திக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.

அரசியல் சாசனம் தரும் அற்புதமான வாய்ப்பை இந்த நாட்டில், நம் சமூகம் பயன்படுத்திக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.

பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த 73-வது மற்றும் 74-வது அரசியல் சாசனச் சட்டத் திருத்தங்களை ஏற்படுத்திவிட்டு அன்றைய நம் மத்திய அரசு ஓர் அமைச்சகத்தை உருவாக்கி அதிகாரப் பரவலை மாநில அரசுகள் முனைப்போடு செயல்படுத்திட வழிவகை செய்தது. அதன்படி அந்த அமைச்சகத்துக்கு மணி சங்கர் அய்யர் நியமனம் செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அறிவார்ந்த விவாதம் ஒன்றை அறிவு ஜீவிகள் மத்திய அரசின் முன்வைத்தனர். அதாவது, ‘73-வது மற்றும் 74-வது திருத்தச் சட்டங்கள் அரசியல் சட்டத்தின்மூலம் உள்ளாட்சியை நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஓர் அரசாங்கமாக உருவாக்கத்தான் கொண்டு வரப்பட்டன.

ஆனால், கிராமப்புற உள்ளாட்சியை வலுப்படுத்துவதற்கு மட்டுமே அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறையுடைய முயற்சி. எனவே, அந்த அமைச்சகத்தை உள்ளாட்சிக்கான அமைச்சகமாக உருவாக்கி கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளை முறையாக வளர்த் தெடுப்பதற்கான வழிகாட்டுதலை செய்ய வேண்டும்’ என்று விவாதிக்கப் பட்டது. அந்தச் சூழலில், அது யார் காதிலும் விழவில்லை. இருந்தபோதிலும் மணிசங்கர் அய்யர், மாநில அரசுகளுடன் போராடி, வாதாடி ‘உள்ளாட்சியை நாம் புறந்தள்ள முடியாது’ என்ற அளவுக்குக் கொண்டு வந்துவிட்டார். ஆனால், அவருக்குப் பிறகு அந்த அமைச்சகம் சிறிது சிறிதாக அதன் மதிப்பை இழந்து, இன்று அது ஒரு துறையாக மாறிவிட்டது.

காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த இந்த உள்ளாட்சியை அரசாங்கமாக நடத்திக் காட்டியது இடதுசாரிகளின் தலைமையில் செயல்பட்ட கேரள அரசாங்கம். அந்த மாநிலம்தான் இன்றுவரை உள்ளாட்சி அமைப்பை சிறப்பாகச் செயல்படுத்துவதில் முன்னுதாரண மாநிலமாகத் திகழ்கிறது. அதன் உள்ளாட்சிக்கான சுற்றுலா என்கிற கருத்தாக்கம் பிரபலமானது; உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இன்றைக்குத் தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவதற்குக்கூட மிகப்பெரிய அளவில் போராட வேண்டியுள்ளது. ஆனால், அன்று மத்திய அரசாங்கத்தில் மணிசங்கர் அய்யர் அமைச்சராக இருந்தபோது, பல தன்னார்வ அமைப்புகளுடன் சேர்த்து மாநில உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வழிவகை கண்டது மத்திய அரசின் இந்த அமைச்சகம். ஆனால், இன்றோ உள்ளாட்சிகளை வலுப்படுத்த முனையும் சூழலில் மத்திய அரசு இல்லை என்பதுதான் யதார்த்தம்.

பெண்கள் பொதுத்தளத்துக்கு வந்து தங்கள் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
உள்ளாட்சி அமைப்புகள்
உள்ளாட்சி அமைப்புகள்

இந்த 25 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ளாட்சிகள் செயல்பாட்டை ஆய்வு செய்தபோது நமக்குத் தெரிந்த உண்மை:

1.பட்டியல் சமூகத்தினர் தங்கள் பிரச்னைகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவந்து தீர்வுகாண போராட ஆரம்பித்துவிட்டனர்.

2.பெண்கள் பொதுத்தளத்துக்கு வந்து தங்கள் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். இதன் விளைவாக சமூகம் பெண்கள் பிரச்னைகளை உள்வாங்க ஆரம்பித்து விட்டது.

3.பொதுமக்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்கும் நிலையில் இருந்து அரசுத் துறைகளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படு கின்றனர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.

4. கிராமப்புறங்களில் எங்கெல்லாம் கிராம சபையைப் புரிதலுடன் நடத்திட பஞ்சாயத்துத் தலைவர்கள் முயன்றார்களோ, அங்கெல்லாம் ஒரு விவாத ஜனநாயகம் உருவாகியிருக்கிறது.

நான்குமே நல்ல அம்சங்கள். அதே நேரத்தில், 25 ஆண்டுகளில் உள்ளாட்சிக்கு விதிக்கப்பட்ட பணிகளான பொருளாதார முன்னேற்றம், சமூகநீதி ஆகியவை சாத்தியப்படவில்லை. அதேபோல் 5 மற்றும் 6-வது செட்யூல்டு பகுதிகள் மற்றும் ஆதிவாசிகள் பகுதிக்கான பஞ்சாயத்துகளும் தங்கள் செயல்பாடுகளில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளன. எல்லாச் சட்டங்களும் முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டால், மக்களுக்குத் தரமான சேவைகள் கிடைப்பது மட்டுமல்லாமல், ஏழைகள், விளிம்புநிலை மக்கள் அதிகாரப்படுத்தப் பட்டு அரசைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவுக்கு உள்ளாட்சியின் எல்லாச் சட்டங்களும் சக்தி வாய்ந்தவை. எனவே உள்ளாட்சியை வலுப் படுத்துவது என்பது கிராமங்களை வலுப்படுத்துவது, மேம்படுத்துவது, ஏழைகளைப் பாதுகாப்பது, ஒடுக்கப்பட்ட மக்களை மேம்பாடு அடையச் செய்வது. இவை எல்லா வற்றையும்விட கிராமங்களிலும் நகரங்களிலும் மத நல்லிணக்கம் பேணவும் அமைதியை நிலைநாட்டிடவும் இந்த உள்ளாட்சிகள் பணியாற்றிட வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையத்தை மத்திய தேர்தல் ஆணையத்துடன் இணைத்து, அது தன் சுயாட்சித் தன்மையை பாதுகாத்துக்கொண்டு செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களைத் தாண்டி, விதிக்கப்பட்ட பணிகளைத் தாண்டி தாங்களே பல பொறுப்புள்ள பணிகளை எடுத்துச் செயல்பட்டு குட்டிக் குடியரசுகளாக உருவானதையும் ஆய்வுகள் எடுத்துக்காட்டியிருக் கின்றன. எனவே, நம் நாட்டின் எல்லாத் தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கும் உள்ளாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கு முதலில் மத்திய அரசு உள்ளாட்சிக்கான ஓர் அமைச்சகத்தை உருவாக்கவேண்டும். இதன்மூலம் உள்ளாட்சியை வடிவமைத்து வலுவூட்டிச் செயல்பாடுகளில் ஈடுபட வைக்க மாநில அரசாங்கத்துக்கும் உதவிட வேண்டும்.

இந்த அமைச்சகம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகளை வேரூன்ற மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் அமைப்பாக மட்டும் செயல்பட வேண்டும். இந்த அமைச்சகத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டியதில்லை. திட்டப்பணிகளை கிராமிய மேம்பாட்டுக்காகவும் நகர மேம்பாட்டுக்காகவும் உருவாக்கப் பட்ட மத்திய அரசின் தனித்தனி அமைச்சகங்களே உருவாக்கிச் செயல்படுத்தலாம். அதேபோல் மாநில தேர்தல் ஆணையத்தை மத்திய தேர்தல் ஆணையத்துடன் இணைத்து, அது தன் சுயாட்சித் தன்மையை பாதுகாத்துக்கொண்டு செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். உள்ளாட்சி ஆளுகை மற்றும் நிர்வாகத்தை எளிமைப்படுத்த சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் நகராட்சிக்கும் வழங்க வேண்டும். சந்தைக்கும் தொழிலுக்கும் சீர்திருத்தம் செய்யும் அரசாங்கம் மக்களுக்கான நிர்வாகத்தில் ஏன் சீர்திருத்தம் செய்யக்கூடாது? இந்தச் சீர்திருத்தங்கள்தான் மக்களுக்கான சீர்திருத்தங்கள். நம் கருத்தாளர்கள் இதைப் பற்றிய விவாதங்களை பொதுத் தளங்களில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு