Published:Updated:

செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு: `மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்!’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் ( Photo: Vikatan / T. Vijay )

``நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். நீட் நுழைவுத்தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12-ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை இந்த முறை அதிகரிக்கப்பட்டிருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ``நீட் தேர்வு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் தமிழக அரசின் தெளிவான முடிவு அதன் பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். எனினும், நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக் கூடாது என்பதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்” என்றார்.

நீட் தேர்வு: `குழு அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டுமா?!’ - சட்டம் சொல்வது என்ன?
அடுத்த கட்டுரைக்கு