Published:Updated:

`நேரு - நோ; சாவர்க்கர் - யெஸ்!’ கர்நாடக அரசின் சுதந்திர தின விளம்பர சர்ச்சை... தற்செயலா, அரசியலா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகா அரசு நாளிதழ்களுக்குக் கொடுத்த விளம்பரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலை போராட்ட வீரருமான நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதேபோல, சாவர்க்கர் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

`நேரு - நோ; சாவர்க்கர் - யெஸ்!’ கர்நாடக அரசின் சுதந்திர தின விளம்பர சர்ச்சை... தற்செயலா, அரசியலா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகா அரசு நாளிதழ்களுக்குக் கொடுத்த விளம்பரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலை போராட்ட வீரருமான நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதேபோல, சாவர்க்கர் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:

நாட்டின் 75-வது சுதந்திர தினம் நிறைவடைவதையொட்டி, 'அமுத பெருவிழா' என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநில அரசுகள் சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டே அறிவுறுத்தி பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்றவும், சமூக வலைதளங்களின் முகப்பில் தேசியக்கொடி படத்தை 'டிபி'யாக வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.

சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதற்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு மரியாதை செலுத்துமவிதமாக, கர்நாடக மாநில பா.ஜ.க அரசு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், வல்லபாய் படேல், பகத் சிங், சந்திரசேகர ஆசாத், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், லாலா லஜிபதிராய், பால கங்காதத திலகர் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், நாட்டின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்டக் காலத்தில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 3,259 நாள்கள் சிறைவாசம் அனுபவித்த விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் படம் இடம்பெறவில்லை. மாறாக 'புரட்சியாளர் சாவர்க்கர்' என்ற அடைமொழியுடன் முதல் வரிசையில் 'வினாயக் சவார்க்கர்' படம் இடம்பெற்றியிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.

கர்நாடக அரசின் விளம்பரம்
கர்நாடக அரசின் விளம்பரம்

மேலும், `பிரிட்டிஷ் அரசுக்கு ஆறு மன்னிப்பு கடிதங்கள் எழுதிக் கொடுத்து சிறையிலிருந்து விடுதலையான சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரர் பட்டியலில் எப்படி இடம்பெறச் செய்யலாம்?’ என்று சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்யப்பட்டுவருகிறது.

இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் கேட்டபோது, ``அரசு விளம்பரத்தில் நேரு படம் இருக்க வேண்டும் என்று எதுவும் கட்டாயமில்லை. தமிழ்நாடு அரசின் விளம்பரத்தில் நேரு படம் இதுவரை இடம்பெற்றதில்லை. சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு சார்பில் நேருவின் படத்தைப் போட்டு, விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதில் தற்போதைய பாரத பிரதமர் மோடியின் படமோ, குடியரசுத் தலைவர் படமோ இல்லை. நேரு விடுதலைப் போராட்ட வீரர், எனவே அவரின் படத்தைப் போட வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

அப்படிப் பார்த்தால், லட்சக்கணக்கான விடுதலை வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரின் படத்தையும் விளம்பரத்தில் போட முடியுமா... வீர சாவர்க்கர் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தை வேறு பரிணாமத்துக்கு அழைத்துச் சென்றவர். அவரின் படத்தைப் போடுவதில் எந்தத் தவறுமில்லை. நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தச் சுதந்திர தினத்தில் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸார் செயல்படுகின்றனர்" என்றார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா கூறுகையில், ``கர்நாடக அரசு விளம்பரத்தில் ஜவஹர்லால் நேருவின் படத்தைப் போடுவது அவர்களின் சொந்த விருப்பம். ஆனால், நாட்டின் விடுதலைக்காகக் கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுக்காலம் சிறையிலிருந்தவர் நேரு. விடுதலை பெற்ற பின்னர் 16 ஆண்டுகள் பிரதமராக, நவீன இந்தியாவின் சிற்பியாகப் பணியாற்றியிருக்கிறார். நாட்டின் சுதந்திரத்தை நேருவைப் புறக்கணித்துவிட்டுக் கொண்டாட முடியாது. பா.ஜ.க-வினர் நேரு மீதான காழ்ப்புணர்ச்சியை இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து வெளிக்காட்டுகிறார்கள். அவரின் பெருமையை யாரும் மூடி மறைக்க முடியாது.

கோபண்ணா
கோபண்ணா

அதேநேரத்தில் விடுதலைக்காக தற்போதைய பா.ஜ.க-வின் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. 2002-ம் ஆண்டு வரை தேசியக்கொடியைக்கூட ஏற்றாத, தேசவிரோதக் கூட்டம், இன்று நமக்கு தேசபக்திப் பாடம் எடுக்கிறது. ஆரம்பகாலத்தில் சாவர்க்கர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஆனால், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டபோது, பல மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். `இனி என் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன் என்று’ கூறியவரை வீரர் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. பா.ஜ.க-வின் இந்தத் தந்திரம் இனி பலிக்காது" என்றார்.