Published:Updated:

ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல்; 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - நெமிலியில் என்ன நடக்கிறது?

‘‘நெமிலி ஒன்றியக்குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறும். அனைத்துப் பிரிவினரும் போட்டியிடலாம்’’ எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

இன்று நடக்கவிருந்த ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஏழு நாள்கள் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நெமிலி ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர் மனோகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ-வுமான சு.ரவியிடம் கேட்டோம். ``நெமிலி ஒன்றியத்தில் மொத்தம் 19 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். தி.மு.க-8, பா.ம.க-5, அ.தி.மு.க-4, சுயேச்சை-2 பேர். ஒன்றியக்குழுத் தலைவர் பதவி அனைத்துப் பிரிவினரும் போட்டியிடும் வகையில் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி
அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி

நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வடிவேலுவும், அவரின் மாமியார் சங்கரியும் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றிபெற்றிருப்பதால், மாமியாரின் ஆதரவுடன் ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தார் வடிவேலு. இந்த நிலையில், சயனபுரம் என்ற ஊராட்சியில் வடிவேலு கிளார்க்காகப் பணிபுரிந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஊராட்சிகள் திருத்தச் சட்டத்தை மேற்கோள் காட்டி, ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். இதனால், வடிவேலு போட்டியிட சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசாணையின் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக நெமிலி ஊராட்சி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் 18-ம் தேதி தன்னிச்சையாக ஒரு நோட்டீஸை வெளியிட்டிருந்தார்.

ஆண் கவுன்சிலர்கள் யாரும் போட்டியிடாத வகையில், பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒன்றியக்குழுத் தலைவர் பதவி மாற்றப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வடிவேலுவுக்கு பதிலாக, அவரின் மாமியார் சங்கரியை ஒன்றியக்குழுத் தலைவராக்குவதற்காக இட ஒதுக்கீடு பட்டியலில் முறைகேடு செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேள்வி எழுப்பினோம். அவர் உரிய பதில் அளிக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இட ஒதுக்கீடு தொடர்பான முன்னுக்குப் பின் முரணான இரண்டு நோட்டீஸ்களையும் சமர்ப்பித்தோம். தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடிவேலு
வடிவேலு

இது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி, ஏழு நாள்கள் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து புதிய அறிவிப்பை வெளியிட அனுமதித்து, வழக்கை முடித்து வைத்திருக்கிறார்’’ என்று சொல்கிறார்’’ எம்.எல்.ஏ ரவி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், கவுன்சிலருமான வடிவேலுவிடம் விளக்கம் கேட்டோம். ``ஊராட்சி நிர்வாகத்தில் இருந்தபோது, நான் முறைகேடு செய்துவிட்டதாகவும், அந்தப் புகார் நிலுவையில் இருப்பதாகவும் அ.தி.மு.க எம்.எல்.ஏ தரப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பொய்ப் புகார்களைக் கொடுத்தனர். முற்றிலும் தவறான அந்தக் குற்றச்சாட்டுக்கு நான் விளக்கமும் கொடுத்துவிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016-ல் என் மீது ஒருவர் மொட்டைக்கடிதத்தில் புகார் கொடுத்திருந்தார். அப்போது நடந்த விசாரணையில், ‘என்மீது எந்தத் தவறும் இல்லை. முறைகேட்டுக்கான முகாந்தரமும் கண்டறியப்படவில்லை. ஊராட்சி நிதியையும் கையாடல் செய்யவில்லை’ என்று மேல் அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். அவதூறு பரப்புகிறார்கள். நானும் என் மனைவியும் பஞ்சாயத்து கிளார்க்குகளாத்தான் வேலை பார்த்துவந்தோம். அப்போதும், தி.மு.க-வில் பொறுப்பில் இருந்தேன். என்னுடைய அரசுப் பணியை முடித்துவிட்டு அரசியல் பணியைச் செய்ததும் உண்மைதான். அது தவறு எனத் தெரிந்ததால், நானே சுயமாகத்தான் அரசுப் பணி வேண்டாம் என்று ராஜினாமா செய்து எழுதி கொடுத்துவிட்டு வந்தேன். அதன் பிறகு தி.மு.க-வில் முழு நேர கட்சிப் பணியைச் செய்துவருகிறேன்.

புதிய அறிவிப்பு
புதிய அறிவிப்பு

அது ஒருபுறமிருக்க... அரசாணையில் பொதுப்பிரிவினருக்குத்தான் நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் பதவி எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அதிகாரிகளின் அலட்சியத்தால் பெண்கள் பிரிவினருக்கு என நோட்டீஸில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக அதிகாரிகளும் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தனர். அதற்குள் அ.தி.மு.க எம்.எல்.ஏ தரப்பினர் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டார்கள். வடிவேலு ஆகிய நான்... தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீதிமன்றம் ஏதாவது உத்தரவு போட்டிருக்கிறதா? நான் போட்டியிட எந்தத் தடையும் இல்லை. எப்படியாவது, நான் தலைவராவதை தடுத்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி சதி செய்கிறார். அவர்களின் பூச்சாண்டிக்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை. தன் தொகுதியிலுள்ள நெமிலி ஒன்றியத்தை தி.மு.க கைப்பற்றிவிடக் கூடாது என்று பா.ம.க கவுன்சிலர்களிடம் ஆதரவு கோருகிறார். பேரம் பேசுகிறார். அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி முகத்தில் கரியைப் பூசுவதற்கான நாளும் நெருங்கிவிட்டது’’ என்றார்.

இதற்கிடையே, ``நெமிலி ஒன்றியக்குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறும். அனைத்துப் பிரிவினரும் போட்டியிடலாம்’’ என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு