Published:Updated:

அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்குக் கட்டுப்பாடு அவசியமா?

ஓடிடி
News
ஓடிடி ( Representational Image )

சமீபத்தில், மத்திய பா.ஜ.க அரசால், 'இணையவழியிலான ஊடகம், இனி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படும்' என்கிற அறிவிப்பு ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர எதிர்கொண்டது.

`இணையத்தில் வரும் செய்தித் தளங்களும், அமேஸான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி (OTT) தளங்களும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன’ என்ற அறிவிப்பு பல்வேறு விவாதங்களை உண்டாக்கியிருக்கிறது. அது குறித்த கட்டுரைத் தொகுப்பே இது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இன்று ஒவ்வொருவருக்கும் எக்கச்சக்கமான வாய்ப்புகளை வாரிவழங்கியிருக்கிறது. அறிவும் திறமையும், சமூக வலைதளங்களில் கணக்கும் இருந்தால் போதும்... எந்த விஷயம் குறித்தும் யாரும் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். அது ஓரளவுக்குச் சரியாக, பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால் இன்ஸ்டன்ட்டாக பிரபலமாகலாம். கொஞ்சம் பாடத் தெரிந்தால் எஸ்.பி.பி-யாக, ஆடத் தெரிந்தால் பிரபுதேவாவாக, நடிக்கத் தெரிந்தால் ரஜினி - கமலாக என இன்று டிஜிட்டல் யுகம் தந்திருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

 ஓடிடி
ஓடிடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சினிமா வாய்ப்புகளுக்காகக் கால்கடுக்கக் காத்திருக்கத் தேவையில்லை. தங்களின் கதைகளை, கற்பனைகளை குறும்படங்களாகச் சுட்டுத்தள்ளலாம். நாம் சமூகத்துக்குக் காட்சிப்படுத்த நினைக்கும் விஷயங்களை ஆவணப்படங்களாக எடுத்துக் காட்டலாம். அது பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்துவிட்டால் போதும், திரையுலகக் கதவுகள் தானாகத் திறந்துவிடும். எங்கோ தூரத்தில், யாரோ குறிப்பிட்ட சிலர் மட்டுமே கோலோச்சிவந்த சினிமாத்துறை, இன்று திறமையுள்ள எளியவருக்கும் களமாக மாறிப்போகக் காரணம் இந்த அறிவியல் வளர்ச்சிதான்.

அதேபோல கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஓடிடி தளங்கள் வாயிலாகப் படங்கள் வெளியாகின. இது திரையரங்குகளைவிட மக்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றன. நேர விரயத்தைத் தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து படம் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதால், பெண்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த வருட தீபாவளிப் பண்டிகையின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில், ஓடிடி தளங்களில் வெளியான `சூரரைப் போற்று’, `மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு படங்கள் பெரும்பங்கு வகித்துள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சீரியல் பார்ப்பது கௌரவக் குறைச்சலாகவும், சோம்பல் தரும் விஷயமாகவும் பார்க்கப்பட்ட நிலையில், இன்று விறுவிறுப்பான வெப் சீரிஸ்கள் பார்ப்பதுதான் பலரின் விருப்பத்துக்குரிய பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. ஆனால், இது போன்ற இணையவழி ஊடகம் எந்த அளவுக்குப் புதுப்புது வாய்ப்புகளையும் கதவுகளையும் திறந்துவிடுகிறதோ, அதே அளவுக்கு அது கொண்டிருக்கும் கட்டற்ற சுதந்திரத்தால் சர்ச்சைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் வழிவகுத்துவிடுகிறது என்பதே இது போன்ற இணையவழி ஊடகத்தின் மீது முன்வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

காரணம், அச்சு ஊடகத்தைக் கண்காணிக்க பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, தொலைக்காட்சியில் வரும் செய்திகளுக்கு என்.பி.ஏ., சினிமாவுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் குழு ஆகியவை இருப்பதைப்போல ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றைத் தணிக்கை செய்ய எந்த அமைப்பும் இதுவரை இல்லாமல் இருப்பதே. ஆனால், அதையே காரணம் காட்டி, அரசியல் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் நியாயமாக முன்வைக்கக்கூடிய விமர்சனங்களிலிருந்து நழுவுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கிவிடுகிறது என்பதே இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்க்கக்கூடியவர்கள் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது.

சமீபத்தில், மத்திய பா.ஜ.க அரசால், 'இணையவழியிலான ஊடகம் இனி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படும்' என்ற அறிவிப்பும் இப்படி இரு வகையான கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

`பொறுப்புள்ள சுதந்திரத்தைக் கடைப்பிடிப்பது ஊடகத்தின் கடமை. அரசு உங்களை நம்புகையில், நீங்களும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்த விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில், தனியாகக் கட்டுப்பாடு அமைப்பு என எதுவும் இல்லை. ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.'
பிரகாஷ் ஜவடேகர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`உண்மைக்கு மாறான செய்திகளும், கலாசார சீர்கேடுகளை உருவாக்கும் தகவல்களும் பரவிவருவதைத் தடுப்பதற்காகவே இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறோம்' என்கிறது மத்திய பா.ஜ.க தரப்பு. ஆனால், `தனி மனிதர்களின் ஊடக சுதந்திரத்தை முடக்குவதும், அரசுக்கு எதிரான கருத்துகள் வெளிவரவிடாமல் தடுப்பதுவுமே இந்த உத்தரவின் நோக்கம்' என்கிறார் எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன்.

``நம் நாட்டில் பெரும்பாலான தொலைக்காட்சிகள், நாளிதழ்களெல்லாம் தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஓடிடி தளங்கள் மட்டும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தன. அதில் வெளியாகும் அரசியல் சார்ந்த கருத்துகள் அவர்களை மீறிப் போய்விடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று கருதுகிறேன். தங்களுக்குச் சாதகமான கருத்துகள் வர வேண்டும் என்றும், எதிரான கருத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். காரணம்,ஒரு சில வெப் சீரிஸ்கள் அவர்களின் அரசியலை விமர்சிப்பதாகவும், கேலி செய்வதாகவும் ஒளிபரப்பாகின்றன. ஆனால், ஓடிடி தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையும் எனக் கருதுகிறார்கள்.

அபிலாஷ் சந்திரன்
அபிலாஷ் சந்திரன்

அதேவேளையில், மத்திய அரசின் இது போன்ற செயல்பாடுகளை, பா.ஜ.க-வினர் மட்டுமல்லாமல் மக்களும் வரவேற்கிறார்கள். காரணம், மக்கள் எப்போதும் தங்களை ஆதிக்கம் செய்யும் தலைவர்களை விரும்புகிறார்கள். தமிழகத்தில்கூட ஜெயலலிதா அரசுப் பணியாளர்கள் வேலைநீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தபோது, பலர் பாதிக்கப்பட்டபோதும் அவரை, `இரும்புப் பெண்மணி’ என்றுதான் அழைத்தார்கள். பணமதிப்பு நீக்கத்தின்போதுகூட நாம் அதைப் பார்த்திருக்கிறோம். ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆளுமைமீது ஈர்ப்புகொள்ளக்கூடிய வகையிலான பலவீனமான கூட்டு மனநிலைதான் அதற்குக் காரணம். ஓடிடி தளங்கள் மட்டுமல்ல, சமூக வலைதளங்களையும் அடுத்ததாகக் கட்டுப்படுத்துவார்கள். பிறகு மீண்டும் நாம் அச்சு ஊடகத்தையும், காட்சி ஊடகத்தையும் நோக்கித்தான் நகர வேண்டிய சூழல் உருவாகும். அந்த ஊடகங்கள் ஏற்கெனவே ஆளும் தரப்புக்கு சாதகமாகத்தான் பெரும்பாலும் செயல்பட்டுவருகின்றன. அதனால் அவர்களுக்குக் கவலை இல்லை'' என்கிறார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஊடகவியலாளரும், இணையத் தொலைக்காட்சி நடத்திவருபவருமான விஸ்வநாத்திடம் பேசினோம்,

``தேசியக்கொடி, தேசியச் சின்னம் ஆகியவை சிறுமைப்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது. குழந்தைகள் பாலியல் படங்கள் இருக்கக் கூடாது. மத வன்முறையைத் தூண்டுவது மாதிரியான காட்சிகள் இருக்கக் கூடாது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் காட்சிகள் இருக்கக் கூடாது. அரசால், நீதித்துறையால் தடைசெய்யப்பட்ட கருத்துகளை ஒளிபரப்பக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள்தாம் தற்போது சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது போன்ற கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல் தேவையானவைதான்.

ஆனால், சட்டங்கள், விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களின் அரசியலுக்காக இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது'' என்கிறார் அவர். தவிர, சைபர் வல்லுநர்களும் இப்படியொரு தணிக்கை கண்டிப்பாகத் தேவை என்பதையே தங்கள் கருத்தாக முன்வைக்கின்றனர். ஆனால், இந்தத் தணிக்கையை ஏற்றுக்கொள்ளும் பலரும்கூட முன்வைக்கும் ஒரே விஷயம்... `ஆளுங்கட்சி தங்களுக்குச் சாதகமாக இதைப் பயன்படுத்திக்கொள்ளும்' என்பதுதான்.

விஸ்வநாத்
விஸ்வநாத்

இது குறித்து விளக்கம் கேட்டு, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``ஆன்லைனில் ஆபாசம் உள்ளிட்ட மிக மோசமான பல விஷயங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதனால், சிறுவர், சிறுமிகள் என குடும்பத்தில் அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக அது மாறியிருக்கிறது. அதனால் இதற்கான தணிக்கை, கட்டுப்பாடு என்பது அனைத்துத் தரப்பாலும் வரவேற்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் போன்ற இணையப் பயன்பாடு அதிகமாக உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் மூலம்தான் இளைய சமுதாயத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியும். இதற்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அரசியலுக்காக இதைச் செய்கிறோம் என்பவர்கள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அது போன்ற கருத்துகள் அவர்களின் கற்பனைதானே தவிர, அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்கிறார் அவர்.