Published:Updated:

`கோபப்பட்டார்; உடனே திரும்பிவிட்டார்!'- மோடியின் ஷூட்டிங் சர்ச்சைக்கு அதிகாரியின் விளக்கம்

சத்யா கோபாலன்

மோடியின் டிஸ்கவரி எபிசோட் ஆகஸ்ட் 12-ம் தேதியன்று 180 நாடுகளில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

மோடி நிகழ்ச்சி
மோடி நிகழ்ச்சி

பிப்ரவரி 14, 2019 இந்தியர்கள் இந்த நாளை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள். இந்த தாக்குதலில் 43 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் பிரதமர் மோடி பிஸியாக ஷூட்டிங் செய்துகொண்டிருந்ததாகவும் அது முடிந்த பின்னரே தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்ததாகவும் காங்கிரஸ் கட்சியினர் அப்போது குற்றம்சாட்டி வந்தனர்.

புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

இந்த நிலையில் தேசிய புலிகள் தினமாக நேற்று டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலகப் புகழ்பெற்ற மேன் Vs வைல்டு நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியப் பிரதமர் மோடி தோன்றியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. புல்வாமா தாக்குதல் நடந்த அன்று மோடி, டிஸ்கவரி சேனல் ஷூட்டிங்கில்தான் இருந்துள்ளார் என மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தில் நேற்று முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மோடியை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், `புல்வாமா தாக்குதல் நடந்த அதே நாளில்தான் மோடியின் ஷூட்டிங்கும் நடந்தது’ என அரசு அதிகாரி ஒருவர் எக்னாமிக் டைம்ஸ் (Economic times) ஊடகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

``மோடியின் தெரியாத பக்கங்கள்!” - #ManVsWild பியர் க்ரில்ஸ் ட்வீட்டும் நெட்டிசன்களின் கேள்வியும்

அவர் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், `` பிரதமரின் ஷூட்டிங் பிப்ரவரி 14-ம் தேதி நடந்தது என்பதை மறுக்க முடியாது. புல்வாமா தாக்குதல் நடந்த அன்று மாலை 3 மணிக்குத் தொடங்கிய ஷூட்டிங் 45 நிமிடங்கள் நடந்தது. உத்தரகாண்ட்டின் கார்பெட் தேசிய பூங்காவில் நடந்த ஷூட்டிங் முடித்து மோடி அங்கிருந்து புறப்பட்டு ருத்ரபூரில் நடந்த பேரிடர் மீட்பு மையம் திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார்.

மோடி நிகழ்ச்சி
மோடி நிகழ்ச்சி

கார்பெட்டிலிருந்து ருத்ரபூர் சென்றுகொண்டிருக்கும் வழியில்தான் பிரதமருக்குத் தாக்குதல் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது நான்கு மணி இருக்கும். அதை அறிந்ததும் முன்னரே ஏன் எனக்குக் கூறவில்லை எனப் பிரதமர் அருகிலிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கோபமடைந்தார். பின்னர் 4:45 மணிக்கு ருத்ரபூரில் இருந்தவாறே அதிகாரிகளுடன் போனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ருத்ரபூர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் உடனடியாக டெல்லி திரும்பினார்” என அவர் கூறியுள்ளார்.