Election bannerElection banner
Published:Updated:

ராமதாஸ் புதிய இயக்கம்: விஸ்வரூபம் எடுக்கிறதா அரக்கோணம் இரட்டைக் கொலை?

இரட்டைக் கொலை
இரட்டைக் கொலை

அரக்கோணம் இரட்டைக் கொலை விவகாரத்தை அடுத்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் புதிய இயக்கத்தைத் தோற்றுவித்ததன் தேவையும் நோக்கமும் என்ன?

தேர்தல் தகராறு காரணமாக அரக்கோணம் சோகனூரில் அர்ஜுன், சூர்யா என்ற இரண்டு இளைஞர்கள் அடித்துப் படுகொலை செய்யப்பட்டனர். பானைச் சின்னத்துக்கு வாக்குக் கேட்டதால்தான் இருவரும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று வி.சி.க தரப்பிலும், இந்தப் படுகொலைக்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மது போதையில் நடந்த சம்பவத்தைவைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள் என்று பா.ம.க தரப்பிலும் வேறு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதற்கிடையே ``வன்னியர்கள்மீது அவதூறுகள் பரப்பப்படும்போது அது தொடர்பான உண்மைநிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னிய மக்களைக் காக்கவும் அறிவுசார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம் தொடங்கப்படுகிறது” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் 12.04.2021 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் புதிய இயக்கத்தைத் தோற்றுவித்ததன் தேவையும் நோக்கமும் என்ன என்பது குறித்து பா.ம.க செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதியிடம் பேசினோம்...

``பொய், வன்மப் பிரசாரங்கள், அவதூறுகளை எதிர்கொண்டு உண்மையை அறிவுசார்ந்து எல்லா தளத்துக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். ஒரு சமூகத்துக்கு எதிராக, கதைகளாகத் தொடர்ந்து பொய்ப் பிரசாரங்களைக் கட்டமைக்கும்போது அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அறிவு சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்வார்கள் என்பதைத்தான் இந்த இயக்கம் தோன்றியதன் பின்புலமாகப் பார்க்க வேண்டும். வன்னியர்கள் மட்டுமல்ல, இந்த இயக்கத்தின் மூலம் அனைத்துத் தமிழ்ச் சமூகமும் பலனடையும். அரக்கோணம் இரட்டைப் படுகொலையில் எந்த அரசியல் பின்புலமோ, சமூகப் பின்புலமோ இல்லை என புரட்சி பாரதத் தலைவர் கொலை நடந்த அன்றே கள ஆய்வு செய்து அறிக்கைவிட்டிருக்கிறார். இது தொடர்பாக மாற்றுக் கருத்து வைத்திருந்த அரங்க குணசேகரன் உள்ளிட்ட பலரும் உண்மையை அறிந்து பின் தங்கள் கருத்திலிருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். தருமபுரியில் ஒரு சொட்டு ரத்தம்கூட சிந்தாமல் நடந்த சம்பவத்தை, கலவரம் என்று தி.மு.க., வி.சி.க உள்ளிட்ட பல கட்சிகளும், போலி முற்போக்கு வேடதாரிகளும் பொய்ப் பிரசாரம் செய்து பெரிதாக்கினர்.

வினோபா பூபதி - பா.ம.க செய்தித் தொடர்பாளர்
வினோபா பூபதி - பா.ம.க செய்தித் தொடர்பாளர்
ஃபேஸ்புக்

விழுப்புரம் நவீனா வழக்கில் என்ன நடந்தது, ஆராயி என்பவருக்கு எதிரான வன்முறையில் பா.ம.க-வுக்கு எதிராக, வன்னியர்களுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான, விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கருவேப்பிலங்குறிச்சியில் திலகவதி என்ற பட்டதாரிப் பெண் படுகொலை செய்யப்பட்டபோது அந்தக் குற்றத்தில் தொடர்புடையவருக்கு ஆதரவாக இருந்தது யார்? மேலே சொன்ன கொலைகள், படுகொலைகள் மற்றும் இயல்பாக நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தைக் கலவரமாகக் கட்டமைத்து அதன் மூலம் ஆதாரம் தேடுபவர்கள்தான் இதிலும் ஆதாயம் பார்க்க முயல்கிறார்கள்.

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சொன்னதுபோல பெரியார், அம்பேத்கரின் சமூகநீதி, சமூக ஜனநாயகத்தை உண்மையாகப் படித்தவர்கள் யாரும் திருமாவளவன் பக்கத்தில் இல்லை என்பதுதான் உண்மை. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், எழுச்சிக்காவும், முன்னேற்றத்துக்காகவும்தான் அண்ணல் அம்பேத்கர் பேசியிருக்கிறாரே தவிர பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டும், ஒரு சமூகத்துக்கு எதிராக வன்மப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் எங்காவது சொல்லியிருக்கிறாரா? படியுங்கள், இட ஒதுக்கீட்டை வைத்து முன்னேறுங்கள் என்று மேடைக்கு மேடை பா.ம.க தலைவர்கள் பேசிவருகிறார்கள். படியுங்கள், குடிக்காதீர்கள், போதைக்கு அடிமையாகிவிடாதீர்கள் என்று திருமாவளவனின் ஒரு மேடையிலாவது பேசப்பட்டிருக்குமா? பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சியினர் வி.சி.க-வின் செயலை விமர்சித்துவரும் வேளையில், பா.ம.க-வின் அறிவுசார் இயக்கத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஐயாவின் முகநூல் பக்கத்தை பார்த்தாலே தெரியும்... எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்ற உண்மை புலப்படும். உண்மையை மக்களிடம் சொல்லும்போது அதற்குப் பெரிய ஆதரவு நிச்சயம் கிடைக்கத்தான் செய்யும். குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது, பெரிய கலவரம் ஆக்கக் கூடாது, அமைதி வேண்டும் என்று முதல் நாளிலிருந்து பேசிவருகிறோம்.

அன்புமணி ராமதாஸ் - திருமாவளவன்
அன்புமணி ராமதாஸ் - திருமாவளவன்

இரண்டு சமூகங்களுக்கு இடையே சாதிக் கலவரம் வர வேண்டும், அதன் மூலம் அதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தி.மு.க., வி.சி.க மற்றும் முற்போக்கு வேடதாரிகள் செயல்பட்டுவருகிறார்கள்” என பதிலளித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு-விடம் இது தொடர்பாகப் பேசினோம். ``இதுவரை நாங்கள் அறிவுபூர்வமாகச் செயல்படவில்லை. இனி நாங்கள் அறிவுபூர்வமாகச் செயல்படுவோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு இப்போதாவது அறிவுசார் அமைப்பை தொடங்கியிருக்கிறார் என்பது சந்தோஷம். இனியாவது அறிவுசார்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம். தருமபுரியில் மூன்று சேரிகள் எறிக்கப்பட்டது, இளவரசன் படுகொலை போன்றவற்றை அடுத்து அனைத்துச் சாதியினர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு எதிராகப் பரப்புரையை மேற்கொண்டு, தலித் சமூகத்தின் மீது வன்மத்தைப் பரப்பியவர் மருத்துவர் ராமதாஸ். ஜீன்ஸ் பேன்ட், நல்ல சட்டை இருந்தால் வன்னியப் பெண்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று அவர்களைப் பொறுப்பற்ற முறையில் பேசியவர் மருத்துவர் ராமதாஸ். ஆனால், வி.சி.க-வுக்கு தமிழக விடுதலை, தமிழர் உரிமை குறித்து அக்கறை, பொறுப்புணர்வு இருக்கிறது.

வன்னியரசு
வன்னியரசு

அதனால்தான் களத்திலிருந்து நாங்கள் இளைஞர்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் போராட்டம் ஒருபக்கமிருக்க, பானைச் சின்னத்துக்கு வாக்குக் கேட்டதாலேயே இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்றால் அதன் பின்னணியை ஆராய்ந்து, அதற்கு எதிராகப் பேச வேண்டியது வி.சி.க-வின் கடமை.

இந்தப் படுகொலைக்குப் பின்னால் மருத்துவர் ராமதாஸ் தூண்டிவிட்டார் என நாங்கள் சொல்லவில்லை. தமிழகத்தில் வன்னிய இளைஞர்கள் மத்தியில் மோசமான சாதிய வன்மத்தை வளர்த்திருக்கிறார். அதன் பின்னணியில்தான் இது நடக்கிறது என்கிறோம். தமிழ்நாட்டில் நடக்கும் சாதி, ஆணவப் படுகொலையை அரசியல்ரீதியில் ஊக்கப்படுத்துவது மருத்துவர் ராமதாஸ்தான். பாண்டிச்சேரியிலிருந்த பா.ம.க-வை பா.ஜ.க அழித்துவிட்டது, தமிழ்நாட்டில் பா.ம.க-வை அ.தி.மு.க விழுங்கிக்கொண்டிருக்கிறது. அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். மாநில உரிமைகள் தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் பேசியதை மறுத்துவிட முடியாது. ஆனால், ஏன் அந்த நிலைப்பாட்டிலிருந்து ராமதாஸ் விலகினார்? மீண்டும் அவர் அனைத்து மக்களுக்குமான உரிமைகளைப் பேச முன்வர வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் வி.சி.க நிற்கும்.

திருமாவளவன்
திருமாவளவன்

வி.சி.க முன்னெடுப்பது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல்தானே தவிர ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரானது இல்லை. வன்னிய இளைஞர்களை மருத்துவர் ராமதாஸ் தவறாக வழிநடத்துகிறார். அவர்களிடமிருந்து இளைஞர்களை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அந்தப் பொறுப்புணர்வோடு நாங்கள் நடந்துகொள்கிறோம். இந்தப் படுகொலைக்குப் பின்னால் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய கட்சிகள்தான் இருக்கின்றன. அவர்களுக்கு எதிரானதுதான் எங்கள் போராட்டம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு