Published:Updated:

டாஸ்மாக் சேல்ஸ்மேன் முதல் கட்சித் தாவி வந்தவர் வரை! - எடுபடுமா எடப்பாடி கணக்கு?

புதுமுக வேட்பாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புதுமுக வேட்பாளர்கள்

அ.தி.மு.க புதுமுக வேட்பாளர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்

டாஸ்மாக் சேல்ஸ்மேன் முதல் கட்சித் தாவி வந்தவர் வரை! - எடுபடுமா எடப்பாடி கணக்கு?

அ.தி.மு.க புதுமுக வேட்பாளர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்

Published:Updated:
புதுமுக வேட்பாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புதுமுக வேட்பாளர்கள்

அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் எப்போதுமே ஆச்சர்யப்படுத்துவார் ஜெயலலிதா. ஒவ்வொரு முறையும் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு தருவார். இம்முறையும் அந்த மரபு மாறவில்லை. 40-க்கும் மேற்பட்ட புதியவர்கள் தேர்தல் களம் காணவிருக்கிறார்கள். ‘எடப்பாடி பழனிசாமி தனது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தன் விசுவாசிகளுக்கு வாய்ப்பை வாரி வழங்கியிருக்கிறார்’ என்கிறார்கள் விஷயமறிந்த அ.தி.மு.க-வினர். தலைமைக் கழக நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிய விவரங்களின் தொகுப்பு இது...

சந்தோஷ்குமார் - பரிதா - பொன். ஜெயசீலன்
சந்தோஷ்குமார் - பரிதா - பொன். ஜெயசீலன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி வேட்பாளர் சந்தோஷ்குமாரின் ஒரே தகுதி, எடப்பாடியின் உற்ற நண்பரான மாவட்டச் செயலாளர் குமரகுருவின் நண்பர் என்பதுதான். ‘அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் வலுவாக இருக்கும் இந்தத் தொகுதியில் நம்பிக்கையான நபரைக் களத்தில் இறக்க வேண்டும்’ என்று எடப்பாடி சொன்னதைச் செய்திருக்கிறார் குமரகுரு. இதேபோல கள்ளக்குறிச்சியிலும் குமரகுருவின் ஆலோசனையில் செந்தில்குமாரைக் களத்தில் இறக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வேட்பாளராக ஜி.பரிதாவை அறிவிப்பார்கள் என்று மாவட்டத்தில் கட்சியினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. பன்னீர் பங்கீட்டில் பரிதாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பரிதாவின் கணவரும், பன்னீரின் உறவினரும் அரசுத்துறையில் பணிபுரிகிறார்கள். அந்த நட்பில் புதிதாகத் தேர்தல் களத்தில் காலடி எடுத்துவைக்கிறார் பரிதா.

சுரேஷ்குமார் - தானேஷ்  - அமுல் கந்தசாமி
சுரேஷ்குமார் - தானேஷ் - அமுல் கந்தசாமி

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியில் போட்டியிடவுள்ள பொன்.ஜெயசீலன், தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கொடநாடு பங்களா கொலைகள் விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட மர வியாபாரி சஜ்ஜீவன், தன் விசுவாசியான பொன்.ஜெயசீலனுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேசி சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வேட்பாளரான வழக்கறிஞர் சுரேஷ்குமார், கட்சியின் முன்னாள் நகர இணைச் செயலாளர். தாய், ஓய்வுபெற்ற ஆசிரியை. தந்தை, ஓய்வுபெற்ற நீதிபதி. மனைவி, இந்துசமய அறநிலையத்துறையில் இணை ஆணையர் என்று குடும்பமே தொகுதியில் நன்கு அறிமுகமானவர்கள்தான். மாவட்டச் செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான காமராஜின் பரிந்துரையால் சுரேஷ்குமாருக்கு சீட் கிடைத்திருக்கிறது.

வீரமணி - முருகன்  - செந்தில்குமார்
வீரமணி - முருகன் - செந்தில்குமார்

தி.மு.க-வுக்குச் சென்றுவிட்ட செந்தில் பாலாஜியைக் கடுப்பேற்றுவதற்காக, அவரின் வலதுகரமாக அ.தி.மு.க-விலிருந்த தானேஷ் என்ற முத்துக்குமாருக்கு கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சீட் வாங்கிக்கொடுத்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ‘‘ஜெயித்தால் நீதான்யா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்’’ என்று தானேஷை உசுப்பேற்றவும் தவறவில்லையாம் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் சந்திரன், பரமத்தி வேலூரில் சேகர் ஆகியோர் வேட்பாளர்களாயிருக்கிறார்கள். இருவருமே அமைச்சர் தங்கமணியின் விசுவாசிகள்.

கோவை மாவட்டம், வால்பாறை தொகுதி த.மா.கா-வுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அங்கு அமுல் கந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது கட்சியினருக்கே ஆச்சர்யம்தான். இது அமைச்சர் வேலுமணியிடம் காட்டிய விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு என்கிறார்கள்.

ஜெயக்குமார் - பண்ணாரி - தங்கவேலு
ஜெயக்குமார் - பண்ணாரி - தங்கவேலு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள ‘யூனியன்’ வீரமணி, ஊரக வளர்ச்சித்துறையில் கிளார்க்காகப் பணிபுரிந்தவர். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு முறைப்படி அ.தி.மு.க-வில் இணைந்ததால், ஜெயலலிதாவே இவரை ‘யூனியன்’ வீரமணி என்ற அடைமொழியுடன் அழைத்தார். ‘முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வைத்திலிங்கத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கிப் பேட்டியளித்தார். அதற்கு வைத்திலிங்கம் செய்த கைம்மாறுதான் இது என்கிறார்கள் டெல்டா அ.தி.மு.க-வினர். அதன்படி பார்த்தால், எடப்பாடியின் ஹிட் லிஸ்ட்டிலிருந்து தப்பியவர் இவர் மட்டுமாகத்தான் இருக்கும்!

தன் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் தன் நம்பிக்கைக்குரிய முருகனை வேட்பாளராக பன்னீர்செல்வம் நிறுத்தியிருக்கிறார். பன்னீரின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத் நெருங்கிய நட்பில் இருப்பதால், பழநி தொகுதியில் புதுமுகம் ரவி மனோகரனுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், யூனியன் கவுன்சிலரான ஜெயக்குமார். சிட்டிங் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென தீவிரமாகக் காய்நகர்த்திவந்த ஜெயக்குமார், அமைச்சர் கருப்பணன் ரூட் பிடித்து பெருந்துறையில் சீட் வாங்கியிருக்கிறார்.

பவானிசாகர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பண்ணாரி, புஞ்சை புளியம்பட்டி டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தவர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். ‘எப்படி இவர் வேட்பாளரானார்?’ என அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியினருமே குழம்பிக்கிடக்கிறார்கள்.

 ரவி மனோகரன் - சந்திரன் - சேகர்்
ரவி மனோகரன் - சந்திரன் - சேகர்்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வேட்பாளராகியிருக்கிறார் தங்கவேலு. காங்கிரஸ் கட்சியிலிருந்து அ.தி.மு.க-வில் சேர்ந்து இரண்டு மாதங்கள்கூட முழுமையடையாத நிலையில், தன்னிடம் காட்டிய விசுவாசத்துக்காக தங்கவேலுக்கு சீட் வாங்கிக்கொடுத்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

ஒருகாலத்தில் அ.தி.மு.க-வில் புதுமுகம் என்றாலே அது மன்னார்குடியின் மகிமை என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அமைச்சர்களின் உறவுகள் முதல் ஓட்டுநர்கள் வரை பலரையும் சரிக்கட்டி முதன்முறையாகத் தேர்தல் களத்துக்குள் இறங்கியிருக்கிறார்கள் புதுமுக வேட்பாளர்கள். அவர்களுக்குக் கட்சியினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்பது போகப் போகத் தெரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism