அரசியல்
அலசல்
Published:Updated:

சொத்துக்காக மிரட்டுகிறார்! - கட்சி நிறுவனத்தை அபகரிக்க நினைக்கிறார்!

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்)
பிரீமியம் ஸ்டோரி
News
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்)

- இந்திய கம்யூனிஸ்ட் பதிப்பக சர்ச்சை!

- ராணி கார்த்திக்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்) நிறுவனம் யாருக்குச் சொந்தம் என்பதில் கட்சிக்கும், என்.சி.பி.ஹெச் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்திருக்கிறது. ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரே, அந்தக் கட்சியின் பதிப்பக நிர்வாக இயக்குநரிடமிருந்து பங்குகளை எழுதிக் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்’ என்றும் தகவல்கள் சிறகடிக்கின்றன.

பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த புத்தகங்களையும், பிற நூல்களையும் அச்சிட்டு விற்பனை செய்துவரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் என்னதான் பிரச்னை என்று விசாரித்தோம். நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “கடந்த 2016-ம் ஆண்டு, முன்னாள் நிர்வாக இயக்குநர் ராதா கிருஷ்ணமூர்த்தி மறைவையொட்டி, தோழர் நல்லகண்ணு கொண்டுவந்த தீர்மானத்தின் மூலமாக நான் என்.சி.பி.ஹெச் நிறுவனத்தின் வாழ்நாள் நிர்வாக இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் பொறுப்பேற்ற பிறகு, எட்டு புதிய கிளைகளை நிறுவி, கடந்த ஆண்டில் மட்டும் 25 கோடி ரூபாய் டர்ன் ஓவர் வருமளவுக்கு என்.சி.பி.எச் நிறுவனத்தை லாபகரமாக நடத்திவருகிறேன். இந்த நிலையில் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் என்.சி.பி.ஹெச் கிளை மேலாளர்களைத் திரட்டி, எனக்கெதிராகச் சதியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்)

என்.சி.பி.ஹெச் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனம். கம்யூனிஸ்ட் தலைவர்களான சீனிவாசராவ், மணலி கந்தசாமி, ப.ஜீவானந்தம், வி.பி.சிந்தன், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகிய ஐந்து பேரின் முதலீட்டுடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது கருத்து வேறுபாடு காரணமாக வி.பி.சிந்தன், எம்.ஆர்.வெங்கட்ராமன் இருவரும் சி.பி.எம் பார்ட்டிக்குச் சென்றுவிட்டனர். ஆனால், நிறுவனத்தின் பங்குகள் போர்டு ஆஃப் டைரக்டர்கள் குழுவிலுள்ளவர்கள் வசமே இருந்தன. யாரேனும் இந்தக் குழுவிலிருந்து வெளியேறிச் செல்லும்போது, தன்வசமுள்ள பங்குகளை மற்ற போர்டு டைரக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அதன்படி, தோழர்கள் தா.பாண்டியன், நல்லகண்ணு ஆகியோர் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகியபோது, தங்களிடமிருந்த பங்குகளை, 2021-ம் ஆண்டு என்னிடம் ஒப்படைத்தனர். தற்போது என்.சி.பி.ஹெச்-சுக்குச் சொந்தமான 49,200 பங்குகளில் 40,200 பங்குகளை நான்தான் நிர்வகித்து வருகிறேன்.

இந்த நிலையில், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர், என்னிடமுள்ள 40,200 பங்குகளையும் நல்லகண்ணு பெயரில் நான் எழுதி வைக்க வேண்டுமென என்னை மிரட்டுகிறார்கள். போலீஸாரும் இவர்களின் கைப்பாவையாகச் செயல்பட்டு, கடந்த இரண்டு வாரங் களாக என்னையும் என் குடும்பத்தையும் அலைக்கழிக்கின்றனர். இவர்களால் எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தினால் நான் தலைமறைவாக இருக்கிறேன்” என்றார் விரிவாக.

சண்முகம் சரவணன் - முத்தரசன்
சண்முகம் சரவணன் - முத்தரசன்

இது தொடர்பாக என்.சி.பி.ஹெச்- நிறுவனத்தின் பதிப்பாசிரியர் ப.கு.ராஜன் பேசும்போது, “தொழிலாளர் நலன் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அதிகாரத் திமிருடன் இவ்வளவு கேவலமாக நடப்பதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை அமலில் இருக்குபோதே, பதிப்பக அலுவலகத்துக்குள் நுழைந்து ஊழியர்களை மிரட்டுகிறார்கள். நிர்வாக இயக்குநரின் கல்லூரியில் படிக்கும் மகனை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டுகிறார்கள். பிரச்னையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளாமல், ரெளடித்தனம் செய்கிறது சி.பி.ஐ” என்றார் ஆதங்கத்துடன்.

இந்தப் பிரச்னை குறித்து எழுத்தாளரும், வழக்கறிஞருமான இரா.முருகவேளிடம் பேசினோம். அவர், “என்.சி.பி.ஹெச் நிறுவனம் முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் திரட்டப் பட்ட நிதியால் உருவானது. ஏறத்தாழ 600 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட என்.சி.பி.ஹெச் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் சண்முகம் சரவணனுக்கு நேர்மையான முறையில் சென்று சேரவில்லை. தீர்மானத்தின் மூலம் பங்குகள் எழுதிக்கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாகச் சொல்லப்படு கிறது. அது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். தற்போது, கட்சி நிறுவன மான என்.சி.பி.ஹெச்-சின் மொத்தச் சொத்துகளையும் சண்முகம் சரவணன் தன்வசப்படுத்த நினைக்கிறார். இதை யாராலும் ஏற்க முடியாது. கட்சிக்குச் சொந்தமான நிறுவனத்துக்குள் அதன் தலைவர்களே வரக் கூடாது என நீதிமன்றத்தில் தடை வாங்கியிருப்பது அபத்தமானது. மேலும், தவறாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில் அதைச் சரிசெய்ய முயல மாட்டாரா...முத்தரசனின் புகார் நடவடிக்கைகளை இந்த முறையில்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ப.கு.ராஜன், இரா.முருகவேள்
ப.கு.ராஜன், இரா.முருகவேள்

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் விளக்கம் கேட்டோம். “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனம்தான். அதைத் தொடங்கியது கட்சியின் மூத்த தலைவர்கள். சண்முகம் சரவணன் போலியான புகாரைச் சொல்கிறார். கட்சிக்குச் சொந்தமான நிறுவனத்தில், அவர் ஒருவர் மட்டுமே மெஜாரிட்டி ஷேர் ஹோல்டராக இருப்பது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஏற்றதல்ல. இது தொடர்பாக அவரிடம் ஐந்து முறைக்குமேல் பேச்சுவார்த்தை நடத்தியிருக் கிறோம். விரைவில் இந்த விவகாரத்தை அவர் சுமுகமாக முடித்துவைப்பார் என்று நம்புகிறோம்” என்றார் சுருக்கமாக.

பொதுவுடைமைக் கட்சியின் பதிப்பகம் தனியுரிமைப் பிரச்னையிலிருந்து விடுபடுமா?