Published:Updated:

``புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை..!" - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

அமைச்சர் பொன்முடி

தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ``புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதை முதலமைச்சர் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்" என்று கூறினார்.

``புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை..!" - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ``புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதை முதலமைச்சர் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்" என்று கூறினார்.

Published:Updated:
அமைச்சர் பொன்முடி

தேசிய கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ``கல்விக் கொள்கைகள் அரசியல்ரீதியாகப் பார்க்கப்படுகின்றன. விரைவில் சுமுகமாக தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை" எனப் பேசியிருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தொழிற்படிப்புகளில் தமிழ் வழியில் படித்தல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ``2010-ல் அரசாணை வெளியிடப்பட்டு, பொறியியல் கல்லூரிகளிலே தமிழ் வழி படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

2010-லிருந்தே இது நடைமுறையில் இருக்கிறது. ஆகவே, தொழில் படிப்புகளில் தமிழ் வழி படிப்பு என்பது 2010-ம் ஆண்டே தொடங்கிவிட்ட ஒன்றுதான். அது ஒன்றும் புதிதாக நம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க முதலமைச்சர் மிகத் தெளிவாக எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். புதிய கல்விக் கொள்கையிலே பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன என்பது உண்மை. நாம் இதுவரையில் பின்பற்றியிருக்கிற கல்விக் கொள்கையில் எந்தத் தவறுமில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மாற்றங்களை, வளர்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதை அவர்கள் அறிவிப்பார்கள். ஆகவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை, ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism