Election bannerElection banner
Published:Updated:

போயஸ் கார்டனில் வேகமெடுக்கும் புதிய வீட்டு வேலைகள்; தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கிறாரா சசிகலா?

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்

`தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிச்சயமாக எடப்பாடியால் தப்பிக்கவே முடியாது’ என அடித்துச் சொல்லும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதற்கான காரணங்கள் சிலவற்றையும் விளக்கினர்.

பெங்களூரு சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி 9-ம் தேதி விடுதலையான சசிகலா தமிழகம் முழுவதும் கோயில் கோயிலாகச் சுற்றிவருகிறார். இந்தநிலையில், ``அவரின் இந்த ஆன்மிகப் பயணங்களெல்லாம் இன்னும் இருபது நாள்களுக்குத்தான். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாருங்கள். தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும். அ.தி.மு.க-வைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சின்னம்மாவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார்கள் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் சிலர்.

சசிகலா
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. ஓசூரிலிருந்து சென்னை வரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அவரின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதால், வெளியாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நாள்களுக்குப் பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியில் வந்தார் சசிகலா.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றுவார் சசிகலா என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபட வேண்டும்'' எனப் பேசியதை அவரின் ஆதரவாளர்களே எதிர்பார்க்கவில்லை. ஆனால். சசிகலாவின் அத்தகைய பேச்சுக்கு, மத்திய பா.ஜ.க கொடுத்த அழுத்தம்தான் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதை அடியோடு மறுத்தார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

இது ஒருபுறமிருக்க, 'சசிகலா சிறையிலிருந்து வெளியானால், அ.தி.மு.க-வில் பல களேபரங்கள் வெடிக்கும்; பல நிர்வாகிகள் சசிகலாவின் பக்கம் வந்துவிடுவார்கள்' என சசிகலாவின் ஆதரவாளர்கள் சொன்னார்கள். ஆனால், அது போன்ற எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை. `இன்னும் இரண்டு மாதகாலப் பதவியை ஏன் அவசரப்பட்டு இழக்க வேண்டும் என்றுதான் பொறுமையாக இருக்கிறார்கள். வருகிற தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கவில்லை என்றால் பாருங்கள்... பாதிப்பேர் கழன்றுகொள்வார்கள்'' என்றார்கள். ஆனால், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் யாரின் மனமும் நோகாதபடிக்கு வேட்பாளர் தேர்வு இருந்ததால் தப்பித்துக்கொண்டார் எடப்பாடி என அப்போது சொல்லப்பட்டது. ஆனால், ``தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிச்சயமாக எடப்பாடியால் தப்பிக்கவே முடியாது'' என அடித்துச் சொல்லும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதற்கான காரணங்கள் சிலவற்றையும் விளக்கினர்.

சசிகலா
சசிகலா

``பா.ஜ.க தலைமை, இடப்பங்கீடு தொடர்பாகப் பேச ஆரம்பித்த நாள் முதலாகவே அ.ம.மு.க-வை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவந்து இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என வலியுறுத்தியது. அமித் ஷாவும் நேரடியாகவே எடப்பாடியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் எடப்பாடிதான் தாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலமாகவே ஜெயித்துவிடலாம், இணைப்பு எல்லாம் தேவையில்லை என விடாப்பிடியாக இருந்தார். தொடர்ந்து பேசிப் பார்த்த பா.ஜ.க தலைமையும் சரியென ஒப்புக்கொண்டது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிட்ட இருபது இடங்களில் ஓரிடத்தில்கூட வெற்றிபெறுவதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை முடிவுகளும் அப்படியே வந்தால், கண்டிப்பாக பா.ஜ.க தலைமை எடப்பாடியைச் சும்மா விடாது. ஏற்கெனவே, 'கட்சி என் பின்னால்தான் இருக்கிறது' என ஓ.பி.எஸ் தந்த வாக்குறுதியால் ஏமாந்துபோன பா.ஜ.க தலைமை, ஓ.பி.எஸ்-ஸை நம்புவதைக் கைவிட்டது. தற்போது ஆட்சியையே கைப்பற்றிவிடலாம் என இ.பி.எஸ் தந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவரின் போக்குக்கு விட்டுக் கொடுத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக மாறும் பட்சத்தில் கண்டிப்பாக பா.ஜ.க-வின் சாய்ஸாகவே சின்னம்மா மட்டும்தான் இருப்பார்.

அதுமட்டுமல்ல, தி.மு.க தரப்பில் இப்போதே யார் மீதெல்லாம் வழக்குகளைப் போட வேண்டும் என லிஸ்ட் தயாராகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அ.தி.மு.க மிகக்குறைவாக வெற்றிபெறும் பட்சத்தில், தி.மு.க தன் சாட்டையைச் சுழற்ற ஒருபோதும் தாமதிக்காது. அப்படி அ.தி.மு.க முக்கியப்புள்ளிகள் வழக்குகளுக்காக அல்லாடிக்கொண்டிருக்கும் வேளையில் இயல்பாகவே கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சின்னம்மாவின் தயவை, தலைமையை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்
ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

அடுத்ததாக, அ.தி.மு.க-வின் சொத்துகள் அனைத்தும் அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என இரண்டு அறக்கட்டளைகளின் கீழ்தான் இருக்கின்றன. அதன் உறுப்பினர்களாக இருந்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் அம்மா, அவர் இறந்துவிட்டார். மற்றொருவர் அம்மாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன். அவர் சின்னம்மாவுடன் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறார். சின்னம்மா மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றும், அ.ம.மு.க., அ.தி.மு.க இணைய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். தலைமைக் கழக அலுவலகம் முதல் அனைத்துக் கட்சி அலுவலகங்களையும் அவரின் துணையோடு கைப்பற்றும் பட்சத்தில் இயல்பாகவே கட்சியும் நிர்வாகிகளும் சின்னம்மாவின் பக்கம் வந்துவிடுவார்கள். சின்னம்மாவின் போயஸ் கார்டன் புதிய வீட்டு வேலைகள் அதனால்தான் வேக வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டால் வீடு வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வீடு தயாராகிக்கொண்டிருக்கிறது. போயஸ் கார்டனில் இருப்பதுதான் தனக்கு ராசி என சின்னம்மா நினைக்கிறார். சித்திரை இறுதிக்குள் வேலைகள் முடிந்து வைகாசியில் குடியேறிவிடுவார்'' என்கிறார்கள் நம்பிக்கையாக.

சசிகலா ஆதரவு நாடகம் ஏன்? - டபுள் ரோல் பன்னீர்...

இது ஒருபுறமிருக்க, ``இப்போதே துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் முதல் பல முக்கிய நிர்வாகிகள் சின்னம்மாவுடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிடும். இப்போதே நேரிலும் தொலைபேசியிலும் பலர் சின்னம்மாவுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். கட்சியில் பல மாற்றங்கள் இருக்கும் என்பது உண்மைதான்'' என்கிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர்.

அவர்கள் பேசும்போது, ``தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதாகமாக வரும் என எடப்பாடி நினைக்கிறார். ஆனால் ஓ.பி.எஸ் அதை நம்பவில்லை. அதனால் எப்படியாவது எதிர்கட்சித் தலைவராகவாவது ஆகிவிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதுமட்டுமல்ல, கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் சசிகலாவையே கொண்டுவரும் முயற்சிகளும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கின்றன. ஓ.பி.எஸ்-ஸின் தம்பி, சசிகலாவைச் சந்தித்த பிறகு, ஓ.பி.எஸ்-ஸும் தம்பிதுரையும் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்துவருகிறார்கள். அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தஞ்சாவூர் ரங்கசாமி, சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி பழனிவேல் இருவரும் ஓ.பி.எஸ் வீட்டுக்கே சென்று இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கின்றனர். கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா, பொருளாளராக ஓ.பி.எஸ்., அவைத்தலைவர் தம்பிதுரை எனவும் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ் - சசிகலா
ஓ.பி.எஸ் - சசிகலா

இவர்கள் மட்டுமல்ல, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பின்னால் நின்று சசிகலாவை ஆதரிக்கத் தயாராகிவிட்டார்கள். வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விஷயத்தில், தென் மாவட்ட அமைச்சர்களுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளாமல், தான் ஜெயித்தால் போதும் என முடிவெடுத்த எடப்பாடியின் சுயநலமே அதற்குக் காரணம். தென்மாவட்டங்களில் மட்டுமல்ல, கொங்குப் பகுதியிலிருந்து செங்கோட்டையன் உள்ளிட்ட சிலரும் வட மாவட்டத்தில் சிலரும்கூட ஓ.பி.எஸ் பக்கம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வேலுமணி, தங்கமணியைத் தவிர மற்ற நிர்வாகிகள் எடப்பாடியின் மீது கடுமையான கோபத்தில்தான் இருக்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்காகத்தான் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான 2-ம் தேதியே பலர் சசிகலாவை வெளிப்படையாகச் சென்று சந்திப்பார்கள் பாருங்கள்'' என்கிறார்கள் அதிரடியாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு