Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `மீண்டும் வந்தாள் ராதா' | பகுதி - 22

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

நீதன் எதிர்பார்க்கவில்லை. அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று மாத்திரமல்ல, அவள் அத்தனை அழகு என்பதையும்தான். வெளியில் போனதும் அவளது உடலிலும் மனதிலும் அப்படியொரு பரிபூரணம் நுழைந்திருந்தது. துயர்ரேகைகள் மறைந்த வெளிச்சமாகியிருந்தாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `மீண்டும் வந்தாள் ராதா' | பகுதி - 22

நீதன் எதிர்பார்க்கவில்லை. அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று மாத்திரமல்ல, அவள் அத்தனை அழகு என்பதையும்தான். வெளியில் போனதும் அவளது உடலிலும் மனதிலும் அப்படியொரு பரிபூரணம் நுழைந்திருந்தது. துயர்ரேகைகள் மறைந்த வெளிச்சமாகியிருந்தாள்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

அல்பா கம்பவுண்டுக்கு முன்பாக வட்டமாகக் கூடியிருந்த தமிழ் அகதிகள், பொங்கலுக்காக வெளியிலிருந்து வந்த வடையைச் சூடு காண்பித்து, பிளெயின் டீயுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மதியம் பராமரித்த மரத்துப்போன கோழி வறுவலுக்கு, பழசென்றாலும் வடை புதிதாக ருசித்தது.

சார்ளி கம்பவுண்டிலிருந்து வந்த சில பெண்கள் ஒவ்வொருவரும், தங்களது ஊரில் எவ்வாறு வடை செய்வார்கள் என்பதை ஆளுக்காள் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். சம்பந்தமே இல்லாமல், இடையில் வந்து நுழைந்து இருந்துகொண்ட இரான் நாட்டுக் கிழவியொருத்தி, வடையை இரண்டு விரல்களால் பிய்த்து, வெளிச்சத்தில் தூக்கிப்பிடித்துப் பார்த்த பிறகு வாயில் போட்டுக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவை தின்னும்போதும், அதன் சுவையை மூளைக்கு அனுப்பி, அனுமதி பெற்றுக்கொள்வதுபோலிருந்தது அவளது முகபாவனை. அவளது சுருக்கம் விழுந்த தாடை, வடையின் சுவைக்கு ஏற்றவாறு தாளம் போட்டுக்கொண்டு, ஆடி ஆடி அரைத்தது.

நீதன் தனக்கான பிளெயின் ரீயைப் போட்டுக்கொண்டு முகாமின் மத்தியிலுள்ள உதைபந்தாட்டத் திடலைச் சுற்றி மெதுவாக நடந்துகொண்டிருந்தான். பொங்கலுக்குச் சமைத்தவற்றை வைத்து அடுத்தநாளும் சாப்பிட்டது, அவனுக்கு மதியம் பசிக்கவில்லை. நீண்ட பகலுறக்கத்துக்குப் பிறகு, மூன்று மணியளவில் எழுந்தவன், குளித்துவிட்டு வெளியில் வந்தான். குளிர்க்காற்றோடு நடைபோட்டபோது உடம்புக்கு மலர்ச்சியாக இருந்தது. இளஞ்சூடான பிளெயின் ரீ, நித்திரை அலுப்பை உடலில் ஒற்றி ஒற்றி எடுத்தது.

இரண்டு மணியானதும், வெளியிலிருந்து வழக்கம்போல விருந்தினர்கள் வரத் தொடங்கினார்கள். பார்க்க வந்திருக்கும் அகதிகளைத் தேடி, முகாம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வோர் இடமாக ஓடத் தொடங்கினார்கள்.

எவ்வளவுதான் மனமெங்கும் துயரங்கள் கொப்பளித்தபடியிருந்தாலும் மாலை வேளைகளில் முகாம் சுற்றாடல் சற்று இளகிக்கிடக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதிய உணவை முடித்துவிட்டு, மர நிழல்களில் தத்தமது நண்பர்களோடு கூட்டம் கூட்டமாக இருந்து ஆண்கள் சீட்டாடுவார்கள். பெண்கள் சில வேளைகளில் கைவினைப் பொருள்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஓரளவு இளவயதுடைய ஆண்கள், பந்து விளையாடுவார்கள். இன்னமும் சிறியவர்கள் பசும் புற்தரையில் ஓடியாடி குதூகலத்தில் கும்மியடிப்பார்கள். இவர்கள் அனைவரையும் கண்காணித்துக்கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆங்காங்கே உலா வருவார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

சில உத்தியோகத்தர்கள் தாங்களும் அகதிகளுடன் சேர்ந்து பந்து விளையாடுவார்கள். சீட்டாடுவார்கள். முகாமுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லாமல், அகதிகள் மத்தியில் சுமுக நிலையைப் பேணுவதற்கு எதை எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்துகொள்வதில், உத்தியோகத்தர்கள் மும்முரம் காட்டுவார்கள்.

விளையாடுபவர்களுக்கு அடிபட்டு விழுந்தாலோ அல்லது இடையில் முரண்டு பிடித்துக்கொண்டு சண்டையென்று வந்துவிட்டாலோ, உத்தியோகத்தர்கள் உடனடியாக விளையாட்டை நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுவார்கள். நிலைமை கட்டுக்கடங்காத சிக்கல் என்றால், மொத்தமாகவே எல்லோரையும் அவரவர் அறைக்குள் கலைத்துவிட்டு, இரும்புப் படலைகளை இழுத்துப் பூட்டிவிடுவார்கள்.

தை மாசக் காற்றும் பின்னேர வெயிலும் சேர்ந்து ஜோடி போட்டு, முகாமுக்குள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.

``நீதன்… உனக்கு விருந்தினர்.”

விருந்தினர் மண்டபத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களில் ஒருவரான அமண்டா, அடிக்குரலில் கூவி அழைத்தாள். சத்தமாக அழைத்ததில் அவளுக்கு மூச்சு வாங்கியது. கூவி முடித்த அவளது குரல், தாடைக்குள் ஆடியபடி தெரிந்தது.

மைதானத்தில் நடந்துகொண்டிருந்த நீதனுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒருசேர முகத்தில் அறைந்தன. தனக்கு யார் இன்றைக்கு விருந்தினர் வரப்போகிறார்கள்? அரைவாசி குடித்த பிளாஸ்திக் குவளையை மைதானத்தின் மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் மெதுவாக எறிந்தான். விருந்தினர் மண்டபத்தை நோக்கி வேகமாக நடந்தான்.

தமிழ் ஆட்கள் யாரும் அவனைத் தேடி வருவதில்லை. அவனும் யாரையும் சந்திப்பதற்கு விருப்பம் காட்டியதில்லை. பாதிரியார் ஒருவர் எல்லா அகதிகளுக்கும் பொதுவாக பிரார்த்தனை செய்வதற்கு வருவார், அவரும் இன்று வருவதற்கான எந்தச் சந்தர்ப்பமும் இல்லை. பழைய பொங்கலை யாராவது முகாமில் அகதிகளுக்குக் கொண்டுவந்து தந்து புண்ணியம் தேடலாம் என்று வந்திருப்பார்களோ என்று எரிச்சலோடு யோசித்தபடி நடந்தான்.

கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த மாத்திரத்திலேயே, மஞ்சள் நிற சல்வாரில் சூரியகாந்தி தோட்டம்போல புன்னகைத்தபடி நின்றாள் ராதா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதன் எதிர்பார்க்கவில்லை. அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று மாத்திரமல்ல... அவள் அத்தனை அழகு என்பதையும்தான். வெளியில் போனதும் அவளது உடலிலும் மனதிலும் அப்படியொரு பரிபூரணம் நுழைந்திருந்தது. துயர்ரேகைகள் மறைந்த வெளிச்சமாகியிருந்தாள்.

``என்ன தெரியாத மாதிரிப் பாக்குறீங்கள்... உங்களைப் பாக்கத்தான் வந்தனான்.”

தான் ஆச்சர்யப்பட்டதை அவள் கண்டுபிடித்துவிட்டாளோ என்ற பயத்தில், அதை இயன்ற அளவு மறைத்துக்கொண்டு, சிறு புன்னகையை உதடுகளில் மடித்துவைத்தான்.

``போன பிறகு, அப்படியே மறந்திருப்பாய் எண்டு நினச்சன்.”

யதேச்சையாக வாயில் வந்த எதையோ சொன்னானே தவிர, நீதனுக்குள் இன்னமும் ஆச்சர்யம் வற்றவில்லை.

விருந்தினர் மண்டபத்துக்கு, இன்னும் முழுமையாக ஆட்கள் வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று பேர் தங்களது விருந்தினர்களோடு, தனித்தனியாக இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் முன்னாலும் பின்னாலும் போடப்பட்டிருந்த மேசையிலிருந்து உத்தியோகத்தர்கள் அவர்களைக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். நடுவிலிருந்த விசாலமான சுவரில் அபொறிஜினல் கோட்டு ஓவியமொன்று அழகாக வீற்றிருந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

மண்டபத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த அகன்ற பச்சை நிறக்கதிரையில் நீதன் போய் அமர்ந்தான். அதற்கு முன்னாலிருந்த இன்னோர் அகன்ற கதிரையில் ராதா அமர்ந்துகொண்டாள். அருகில் பார்த்தபோது, இன்னும் பல விளக்கமான விடயங்கள் அவளில் தெரிந்தன.

தலைநிறைய பூ வைத்திருந்ததோ அல்லது அவள் பூசியிருக்கும் வாசனைத் திரவியமோ ஏதோ ஒன்று, அகதி முகாமுக்குச் சம்பந்தமே இல்லாத அதி அற்புத நறுமணத்தை நாசியில் அடித்தது.

இடது கன்னத்தில் எப்போதும் துருத்திக்கொண்டிருக்கும் அவளது பருவைக் காணவில்லை. இருந்தாலும் அதிகம் ஒப்பனையிடாத அவளது முகம், அவள் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சியைத்தான் ஓய்வில்லாமல் பருகியபடியிருந்தது.

“தனியவா வந்தனீ, குழந்தை எங்க?”

தனக்கு அப்பால் தனது குழந்தையை நீதன் தேடுவான் என்பதை நிச்சயமாக ராதா அறிந்திருந்தாள்.

“எங்களுக்குத் தந்திருக்கிற வீட்டுக்குப் பக்கத்தில ஒரு அக்கா இருக்கிறா. இரண்டு பிள்ளையளோட படகில வந்து மூண்டு வருசத்துக்கு முன்னம் வெளியில போனவ. அவவோட விட்டுட்டு வந்தனான்.”

“ஓ…”

“அவவிண்ட பிள்ளையளோட, இவளும் நல்லா சேந்திட்டாள், விளையாட்டு, படிப்பு எண்டு. எனக்குக் கரைச்சல் குறைவு.”

புன்னகையோடு தலையை அசைத்து அவள் சொன்ன, அவளது புது வாழ்க்கைச் சரிதம், அவள் எதிர்பார்த்துவந்த வாழ்க்கை இங்கு கிடைத்துவிட்ட பூரிப்பை முகத்தில் பூசிக் காட்டியது.

“எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருந்து ஒரு குடும்பம், இஞ்ச பக்கத்தில, குன்றத்துக் குமரன் கோயிலுக்குப் போனவயள். அவயளோடு சேர்ந்து வந்தனான். கோயிலால போகும்போது, இதில இறக்கச் சொன்னனான். வீட்டுக்கு பஸ்ஸில போற வழி இப்ப எனக்குத் தெரியும்.”

ராதாவுக்கு எப்போது கடவுள் நம்பிக்கையெல்லாம் வந்தது? இயக்கத்திலிருக்கும்போதே இருந்திருக்குமோ என்று ஆதி நினைவுகளை ஒரு கணம், நீதனின் புலனாய்வுப் புத்தி உருட்டிப்பார்த்தது.

“அப்ப, உங்கட பாடுகள் எப்பிடி... அதுக்குப் பிறகு இன்டர்வியூ நடந்ததா... இமிகிரேசன் ஏதாவது சொன்னவயளா?”

வெளிக்கதைகளைக் கேட்கும்போது செவிக்கு இனிமையாக இருந்த அவளது குரல், திடீரென்று முகாம் கதைக்குத் திரும்பியவுடன்தான், தான் முகாமுக்குள் இருக்கும் உணர்வே நீதனுக்குள் மீண்டும் முளைத்தது.

பாதி கடித்த நகத்தை அடுத்த விரலால் தட்டியடி,

“இமிகிரேசன் என்னத்தச் சொல்லுறது... அதுதான், அவங்கள் கேஸ அப்படியே புலனாய்வுக்காரங்களிட்ட குடுத்திட்டாங்களே.” அலுத்துக்கொண்டான் நீதன்.

“அதை விடு, வேற என்ன புதினம் வெளியில?”

ராதாவுக்கு எப்படி ஆரம்பிப்பது என்ற பெரிய பதற்றமும், அதை லாப நட்டக் கணக்குகளோடு நீதன் விளங்கிக்கொள்ளக் கூடாது. அதேவேளை, விளங்கிக்கொள்ளவும் வேணும் என்ற தேவையும் கண்களில் படபடத்தது.

பழசுகள் எல்லாவற்றையும் வலுக்கட்டாயமாக அடிமனதில் புதைத்தாள். நீதனையும்கூட இப்போதுள்ளவனாக மாத்திரமே நினைத்தாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும் தைரியத்தோடு பேசத் தொடங்கினாள்.

“என்ர கேஸ் செய்யிற லோயரோட இரண்டு மூண்டு தடவைகள் அப்பொயின்ட்மென்ற் எடுத்து கதைச்சனான். அவரும் தன்ர சீனியரில் பாறிஸ்டர் ஒருத்தரோட கூட்டிக்கொண்டுபோய் கதைச்சவர்.”

ராதாவின் உதடுகளில் தெரிந்த நடுக்கம், தான் முன்னம் கவனிக்காததா அல்லது உண்மையிலே பயத்தோடு பேசுகிறாளா என்பதில் நீதனுக்குக் குழப்பம். இருந்தாலும், இயன்றவரை, அவள் பேசுவதில் கவனம் செலுத்தினான்.

“என்ர கேஸ் தன்ரபாட்டில சரிவருமாம், நான் உங்கட நிலமையைத்தான் சொல்லி கேட்டனான்.”

கிழிந்த நகத்தைத் தட்டிக்கொண்டிருந்த நீதனின் விரல் தானாவே அதிர்ந்து நின்றது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

``உங்கட கேஸ் நிலைமை கொஞ்சம் கஸ்டம்தானாம். கொஞ்ச காலத்துக்கு முதல்தான் இவங்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தவங்கள் எண்டபடியால, இந்தச் சட்டத்தை சட்டத்தால உடைச்சுக்கொண்டு, விடுதலையாகிறது இப்போதைக்குக் கஸ்டமாம்.”

``அதைத்தானே இமிகிரேஸனும் சொல்லுது.’’ நீதன் அலுத்துக்கொண்டு நிமிர்ந்திருந்தான்.

``ஓம்... ஆனால், இதுக்கு முதல், இப்படியான கேஸில இருந்து இரண்டொரு பேர் சிம்பிளா வெளியில போயிருக்கினம். அதுக்கு அவயள் ஃபாலோ பண்ணின வழியை நீங்களும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால், இப்போதைக்கு டெம்பரரி விஸாவிலயேனும் வெளியில வந்திருந்து, பிறகு மேற்கொண்டு கேஸச் செய்யலாம்.”

நீதனுக்கு இப்போது ராதா முழுதாகவே ஆச்சர்யத்தின் உருவமாகத் தெரிந்தாள். நேற்றுவரைக்கும் இந்த முகாமுக்குள் இருந்தவள், திடீரென்று வெளியிலிருந்து வந்து, தனது விடுதலைக்கு வழி சொல்கிறாளே என்ற புதிராகத் தெரிந்தாள்.

ராதாவின் கண்கள் கல்கிஸ கடற்கரையில் முத்தமிட்டபோது பதற்றமடைந்ததுபோலத் துடித்தன.

பேசும்போதே அவளது இமைகள் போதையில் தள்ளாடுவதுபோல நெளிந்தன, கூடுதலாக, முகத்தில் கொஞ்சம் கலவரமும் தெரிந்தது.

“நீதன், நான் உங்களிட்ட ஓப்பனாவே சொல்லிடுறன். என்னைப் பிழையாக நீங்கள் நினைச்சாலும் பரவாயில்லை. லோயரிட்ட போய் நான் கதைச்சதிலும், எனக்குள்ள நான் முடிவெடுத்ததிலுமிருந்து கதைக்கிறன். உங்கட வாழ்க்கை எப்படியான சிக்கலில வந்து மாட்டிக்கிடக்கு எண்டு உங்களுக்கு நல்லாவே தெரியும். இதில இருந்து மீண்டு வெளியில வரும்வரைக்கும் இந்தோனேசியாவில விட்டுட்டு வந்த குடும்பம், குழந்தைகள் எண்டு, மற்ற ஆக்களைப்போல கணக்கு போட்டு வாழ்க்கையை எதிர்பார்க்கமுடியாது. லோயர் சொல்லுறார், நீங்கள் ஒஸ்ரேலியாவில இருக்கிற ஒராளைப் பதிவுத் திருமணமாவது செய்துகொண்டால், உங்கள வெளியில எடுக்குறத்துக்கு முயற்சிக்கலாமாம்.”

ராதா எங்கே வந்திருக்கிறாள் என்பதும், தனது உரையாடலுக்கு லோயரை முன்னரணாக நிறுத்தி, எதை நோக்கிப் பேசுகிறாள் என்பதும் நீதனுக்குப் புரிந்தது.

நீதனுக்குப் புரிந்திருக்கும் என்ற எடுகோளோடு ராதா, அடுத்த கட்டங்களுக்கு எகிறிப் பாய்ந்துகொண்டு உரையாடலைத் தொடர்ந்தாள்.

“என்ர பிள்ளையைக் காட்டி, உங்கட விடுதலை முக்கியம் எண்டு சொல்லலாம்...”

சிறு மௌனம்.

உலகின் மிகப் பரிதாபமான மௌனம், அந்த நான்கு கண்களுக்கும் இடையில் சற்று நசிந்தது.

“அதோட, நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொள்ளுவம்.”

மிகுந்த அச்சத்தோடுதான் அந்த வார்த்தைகளை உச்சரித்தாலும் அவளது பேச்சில் ஓர் அழுத்தம் தெரிந்தது.

ஆயுதப் போராட்டமொன்றிலிருந்து வந்தவர்கள் என்ற காரணத்தினால், இருவரும் அந்த உரையாடலையும் அந்த உரையாடலின் பின்னணியிலிருக்கும் நேர்மையையும் யதார்த்தமாகப் புரிந்துகொண்டார்கள்.

நீதனுக்கு அனீஸாவும் இரண்டு குழந்தைகளும் முக்கியம் என்பதற்கு அப்பால், இந்த முகாமிலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் முதல் முக்கியம். அந்த விடுதலையின் வீதியில்தான் சகல சாத்தியங்களும் தங்கியிருந்தன.

``எனக்கு வெளியில பெர்மனென்ட் விஸா கிடைச்சிட்டுதெண்டால், உங்கட கேஸ இன்னமும் நாங்கள் இறுக்கலாம் எண்டு பாரிஸ்டர் சொல்லுறார்.”

சொல்லி முடித்துவிட்டு நியாயமானதொரு பார்வையை நீதன் மீது பதித்தாள்.

தனது யோசனைக்கு நீதன் கோபப்படுவானோ என்று அவளுக்குள்ளிருந்து சிறியதொரு பதற்றம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் வடியத் தொடங்கியது.

ராதாவின் முகத்தில் ஒரு கணம் வற்றிய தெளிவு மீண்டும் வெளிச்சமாகப் படரத் தொடங்கியது.

தேசத்தைவிட்டு வந்தபோது, இன்னொரு தேசம் வாழ்க்கைத் துணையைத் தந்தது. ஒரு துளி வாழ்க்கையையும் தந்தது.

அங்கிருந்து புறப்பட்டு, ஆழியில் நடு இரவில் தொலைந்தபோது, படகிலிருந்து மீட்டு, காலம் மீண்டும் வாழ்வதற்கு உயிரைத் தந்தது.

இந்த தேசத்தில் வந்து, மறுபடியும் வாழ்க்கையைத் தொலைத்துக் கிடக்கும்போது, ராதாவை காலம் கொண்டுவந்து முன்னிறுத்தியிருப்பது, ஏதோவொரு நல்லதுக்குத்தான் என்ற உணர்வு நீதனுக்குள் சிறு கீற்றாகத் தெரிந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

ஆனால், இந்தோனேசியக் கடற்கரையின் புதைமணலில் அணைத்து அனுப்பிய அனீஸாவின் மார்புச்சூடு நீதனைவிட்டு இன்னமும் அகலவில்லை. கட்டிலின் தலைப்பக்கமாக ஒட்டிவைத்திருக்கும் அவள் படத்தின் வழியும் புன்னகை மூச்சைவிட்டு இன்னும் நீங்கவில்லை. லியோவின் கண்களும், இரண்டாவது குழந்தையின் பிஞ்சுப் பாதமும் விடிகாலை வெளிச்சமாக நெஞ்சுக்குள்ளேயே ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன.

எதை மறந்துகொண்டு இன்னொரு வாழ்வை அணைப்பது... எதை நியாயப்படுத்திக்கொண்டு இன்னொரு பெண்ணோடு சிரிப்பது...

பச்சை நிறக் கதிரையில் தான் உறைந்துபோனதாக நீதன் உணர்ந்தான்.

“நீதன்...”

அருகில் வந்து கைகளைப் பற்றிய ராதா,

“உங்கட நிலைமை எனக்குப் புரியுது நீதன். கனக்க நீங்கள் யோசிக்காதேங்கோ. இதுவும் ஒரு போராட்டம் எண்டு நினைச்சுக்கொண்டு முடிவெடுங்கோ எண்டு மாத்திரம்தான் என்னால இப்ப உங்களிட்ட கேட்க முடியும். இது கொஞ்சம் கஷ்டம்தான். நான் அறிஞ்சு வந்து வழியை உங்களோட பேசவேணும் எண்டு நினைச்சன். திரும்பவும் ஏதோவொரு காரணத்துக்குத்தான் நாங்கள் சந்திச்சிருக்கிறம் எண்டும் நினைச்சன்.”

அவளது கைகளில் படர்ந்திருந்த சிறிய நடுக்கத்தை நீதன் உணர்ந்தான். விரல்கள் சில்லென்றிருந்தன. ஆனால், அவளது கண்களைப் பார்க்க முடியவில்லை.

“எனக்கு விளங்குது ராதா…”

அடுத்து அவன் பேசப்போகும் வார்த்தைகளுக்காக, அவனது உதடுகளையே பார்த்தாள்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism