Published:Updated:

புதிய நாடாளுமன்றம்... புதிய தேசிய சின்னம்... புதிய அகராதி! - சொற்களுக்குத் தடை சாத்தியமா?

தேசிய சின்னம்
பிரீமியம் ஸ்டோரி
தேசிய சின்னம்

இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை. புதிய இந்தியா என்று சொல்லும் பா.ஜ.க., கடந்தகால நடைமுறைகள் அனைத்தையும் மாற்ற வேண்டுமென்று முயல்கிறது.

புதிய நாடாளுமன்றம்... புதிய தேசிய சின்னம்... புதிய அகராதி! - சொற்களுக்குத் தடை சாத்தியமா?

இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை. புதிய இந்தியா என்று சொல்லும் பா.ஜ.க., கடந்தகால நடைமுறைகள் அனைத்தையும் மாற்ற வேண்டுமென்று முயல்கிறது.

Published:Updated:
தேசிய சின்னம்
பிரீமியம் ஸ்டோரி
தேசிய சின்னம்

தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுவரும் புதிய நாடாளுமன்ற வளாகம் குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், சமீபத்தில் அங்கு பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட தேசிய நினைவுச்சின்னத்தால் மேலும் ஒரு சர்ச்சை எழுந்தது. புதிதாக வைக்கப்பட்டிருக்கும் நான்கு சிங்கங்களைக்கொண்ட தேசிய சின்னத்தில், வழக்கத்துக்கு மாறாக ஆக்ரோஷமான தோற்றத்துடன் சிங்கங்கள் காணப்படுகின்றன. அந்தச் சர்ச்சை ஓயும் முன்பு, ‘நாடாளுமன்றத்தில் பயன்படுத்த உகந்ததல்ல’ (Unparliamentary) என்று சில சொற்களைப் பட்டியலிட்டு நாடாளுமன்றச் செயலகம் தற்போது கையேடு வெளியிட்டிருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.

ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் (Unparliamentary words) என்று பல சொற்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ‘பொய்’ என்று நேரடியாகச் சொல்லக் கூடாது. அதற்கு பதிலாக, ‘உண்மைக்கு மாறாக’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதைப்போல சில புதிய சொற்களை இப்போது பட்டியலிட்டிருக்கிறார்கள்.

புதிய அகராதி...

`ஊழல், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர் (ஜும்லா), நாடகம், கண்துடைப்பு, வெட்கக்கேடு, துரோகம் செய்தார், கொரோனா பரப்புபவர், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவுசக்தி, இரட்டை வேடம், பயனற்றது, கோழை, குழந்தைத்தனம், குற்றவாளி, பொய், முதலைக் கண்ணீர், அவமானம், போலித்தனம், ரௌடித்தனம், தவறாக வழிநடத்துதல், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், கழுதை, உண்மையல்ல’ ஆகிய சொற்கள் பயன்படுத்த உகந்தவையல்ல என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்கள் வந்தவுடன், “இந்தச் சொற்கள் தடைசெய்யப்படவில்லை. மாறாக, இவற்றை நாடாளுமன்றத்தில் பேசினால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்” என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்திருக்கிறார்.

புதிய நாடாளுமன்றம்... புதிய தேசிய சின்னம்... புதிய அகராதி! - சொற்களுக்குத் தடை சாத்தியமா?

“பயன்படுத்த உதந்ததல்ல” என்று தற்போது சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. உதாரணமாக, ‘2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளிலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வோர் இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று மோடி சொன்னாரே...’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு, ‘அது ஓர் அரசியல் ஜும்லா’ என்று அமித் ஷா பதிலளித்தார். ‘ஜும்லா’ என்றால் வாய்ஜாலம் என்று பொருள். அப்போதிலிருந்து ‘ஜும்லா’ என்ற சொல் இந்திய அரசியலில் பிரபலமாகிவிட்டது. 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `ஜூம்லா’ என்ற சொல்லைப் பயன்படுத்தி மோடியை விமர்சிக்க, `ஜூம்லா’, `ஜூம்லாஜீவி’ உள்ளிட்டவை ட்விட்டரில் டிரெண்டாகின. அதுபோலவே இந்தப் பட்டியலிலுள்ள பெரும்பாலான சொற்கள் ஆளும் அரசை விமர்சிக்கப் பயன்படுத்தப்படுபவைதான்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் தருமபுரி தொகுதி எம்.பி-யான எஸ்.செந்தில்குமாரிடம் பேசினோம். “தங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று பா.ஜ.க அரசு நினைக்கிறது. ‘இந்தச் சொற்கள் தடைசெய்யப்படவில்லை... பயன்படுத்தினால் நீக்கப்படும்’ என்று சபாநாயகர் கொடுத்திருக்கும் விளக்கம் விநோதமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, இதை ஒரு சுவாரஸ்யமான சவாலாகப் பார்க்கிறேன். ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கக்கூடிய எத்தனை சொற்களை நீக்கினாலும், அவற்றுக்கு இணையாக அல்லது அவற்றைவிட வலிமையாகச் சொல்வதற்கான வேறு சொல்லாடல்கள் தமிழில் இருக்கின்றன. எனவே, அத்தகைய சொற்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவோம். அது அரசுக்கே ஒரு ‘பேக் ஃபயர்’ ஆக இருக்கப்போகிறது” என்றார் செந்தில்குமார்.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவைத் தொகுதி எம்.பி-யான பி.ஆர்.நடராஜனிடம் பேசினோம். “இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை. புதிய இந்தியா என்று சொல்லும் பா.ஜ.க., கடந்தகால நடைமுறைகள் அனைத்தையும் மாற்ற வேண்டுமென்று முயல்கிறது. தங்களை எந்த வகையிலும் யாரும் விமர்சித்துவிடக் கூடாது என்று பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். இப்போது இவர்கள் தடைசெய்திருக்கும் சொற்கள், நாடாளுமன்றத்தில் கடந்த ஐம்பதாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்தச் சொற்களை அவர்கள் பயன்படுத்தவில்லையா.. ‘போஃபர்ஸ் ஊழல்’ என்று காங்கிரஸை பா.ஜ.க விமர்சித்தது. இப்போது, ‘ரஃபேல் ஊழல்’ என்று யாரும் விமர்சித்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். இப்படியெல்லாம் தடைவிதித்தால், நாங்கள் வாயில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டுதான் நாடாளுமன்றத்துக்குப் போகவேண்டியிருக்கும்” என்றார் பி.ஆர்.நடராஜன்.

இது குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுருவிடம் பேசினோம்.

எஸ்.செந்தில்குமார், பி.ஆர்.நடராஜன், குமரகுரு
எஸ்.செந்தில்குமார், பி.ஆர்.நடராஜன், குமரகுரு

“இந்த விஷயத்தை சர்ச்சையாகப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில், நாடாளுமன்றத்தில் ஒவ்வோர் ஆண்டும், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட சொற்களை எடுத்துக்கொண்டு, `அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்’ என்று சொல்வது வழக்கம். அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது. உதாரணமாக, ‘நிலக்கரித் திருடன்’ என்று குறிப்பிட்டு ஒரு எம்.பி பேசியிருக்கிறார். அதை, ராகுல் காந்தி ஆட்சேபித்திருக்கிறார். எனவே, அந்தச் சொல்லாடலை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். ‘நிலக்கரி’ என்று தனியாக சொல்வதையோ, ‘திருடன்’ என்று தனியாகச் சொல்வதையோ, ஆட்சேபிக்கவில்லை. இந்த இரண்டையும் சேர்த்துச் சொல்ல வேண்டாம் என்கிறார்கள். அதேபோல, பிரதமரின் திட்டங்களை ‘ஜும்லா’ (வாய்ஜாலம்) என்று சிலர் விமர்சிக்கிறார்கள். எனவே, அந்தச் சொல்லைத் தவிர்க்குமாறு சொல்லியிருக்கிறார்கள். சொல்லவே கூடாது என்று தடை விதிக்கவில்லை. அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட சொற்களை கவனமாகவும், சரியாகவும் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார்.

புதிய இந்தியாவின், புதிய அகராதியில் இன்னும் என்னென்ன சொற்களெல்லாம் இடம்பெறப்போகின்றனவோ!