Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: `கட்சி ஆரம்பிப்பவர்களெல்லாம் வெற்றி பெற முடியாது!’ - கனிமொழி எம்.பி

நெல்லையில் கனிமொழி பிரசாரம்
நெல்லையில் கனிமொழி பிரசாரம்

`ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், கட்சி ஆரம்பித்தவர்களெல்லாம் வெற்றி பெற்றுவிட முடியாது' என்று தி,மு.க மகளிரணிச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி தெரிவித்தார்.

தி.மு.க சார்பாக நெல்லை மாவட்டத்தில், `விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி இரு தினங்கள் நடக்கிறது. அதற்காக தி.மு.க மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி நேற்று நெல்லைக்கு வந்தார்.

கோவை: `வருமானத்துக்கு உகந்த திட்டங்களே நிறைவேற்றம்!' - அ.தி.மு.க அரசைச் சீண்டும் கனிமொழி

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பாகக் கரகாட்டம், மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பிலுள்ள அண்ணா சிலை மற்றும் டவுன் பகுதியிலுள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி பின்னர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

பிரசாரப் பயணத்தில் ஈடுபட்ட கனிமொழி, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாளையங்கோட்டை மார்க்கெட்
பாளையங்கோட்டை மார்க்கெட்

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் கட்டுவதாகச் சொல்லி அங்கிருந்த ஆற்று மணலையெல்லாம் அள்ளி விற்றுவிட்டார்கள். ஸ்மார்ட் திட்டத்துக்கான கான்ட்ராக்ட்டுகள் அனைத்தும் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்ததற்காக எத்தனை வழக்குகளைப் பதிவு செய்தாலும் அதைச் சந்திக்க தி.மு.க-வினர் தயாராக இருக்கிறோம்.

தாமிரபரணிக் கரையோர மக்களிடம் பேசும் கனிமொழி
தாமிரபரணிக் கரையோர மக்களிடம் பேசும் கனிமொழி

கொரோனா காலத்தில் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதனால் பொதுமக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கக்கூடிய இந்தச் சமயத்தில் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான சம்பளம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. யார் எந்தத் திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். ஆனால், மக்களுக்குப் பயன்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்தும் வலிமையுள்ள ஒரே கட்சி தி.மு.க மட்டும்தான்.

மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு
மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு

கொரோனா காலத்தில்கூட ஓய்ந்திருக்காமல் மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக காணொலிக் காட்சி மூலம் ஸ்டாலின் பணியாற்றினார். மக்கள் பணியே தன் தலையாய கடமை என்று ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்.

தி.மு.க சார்பாக தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. மக்கள் நலனுக்கான திட்டங்கள் அடங்கிய முழுமையான தேர்தல் அறிக்கை, ஜனவரி மாதத்தில் தயாராகிவிடும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், கட்சி ஆரம்பித்தவர்களெல்லாம் வெற்றி பெற்றுவிட முடியாது.

ஆட்டோவில் பயணம் செய்யும் கனிமொழி
ஆட்டோவில் பயணம் செய்யும் கனிமொழி

மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் தங்களது வாக்குகளை வீணாக்க விரும்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

கனிமொழி நெல்லையிலுள்ள மகளிர் காவல் நிலையம், பாரதியார் படித்த ம.தி.தா மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றார். பொதுமக்கள் கனிமொழியுடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினார்கள். பாளையங்கோட்டையில் அவர் ஆட்டோவில் ஏறிச் சென்று பிரசாரம் செய்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு