Published:Updated:

தென்காசி: ரூ.1 கோடி கேட்டாரா திமுக மாவட்டச் செயலாளர்?! - யூனியன் பெண் தலைவர் ராஜினாமா பின்னணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராஜினாமா கடிதம் கொடுக்கும் செல்லம்மாள்
ராஜினாமா கடிதம் கொடுக்கும் செல்லம்மாள்

தேர்தல் செலவாக திமுக சார்பில் 1.10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், அந்தத் தொகையைக் கேட்டு நிர்பந்தம் செய்யப்பட்டதால் யூனியன் சேர்மன் ராஜினாமா செய்திருக்கிறார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியத்துக்கு, அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது 10-வது வார்டில் தி.மு.க சார்பாக செல்லம்மாள் என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ராஜினாமா செய்த செல்லம்மாள்
ராஜினாமா செய்த செல்லம்மாள்

அதன் பின்னர் ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதில், திமுக சார்பாக ஜெயக்குமார் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள யூனியன் கவுன்சிலர்களில் தி.மு.க 11 இடங்களிலும் அ.தி.மு.க ஐந்து இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றிருந்தன.

யூனியன் கவுன்சிலர்களில் தி.மு.க-வுக்குப் பெரும்பான்மை இருந்ததால் தி.மு.க வேட்பாளர் ஜெயகுமார் சுலபமாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் துணையுடன் செல்லம்மாள் என்பவர் வெற்றிபெற்றார். அதனால் அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள் இது குறித்து விசாரித்து, ஒன்றியச் செயலாளர் குமார் பாண்டியன் என்பவரை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கினார்கள்.

அதிகாரியிடம் கடிதம் கொடுக்கும் செல்லம்மாள்
அதிகாரியிடம் கடிதம் கொடுக்கும் செல்லம்மாள்

கடையம் வட்டார தி.மு.க-வில் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. கட்சிக்குள் நடந்த இந்த உள்குத்து விவகாரத்தின் பின்னணியில் ஒன்றியச் செயலாளர் குமார் பாண்டியன் இருந்தது குறித்துப் பலரும் விமர்சனம் செய்துவந்தார்கள். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்ற ஒன்றியக்குழுத் தலைவர் செல்லம்மாள் தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்றியக்குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய செல்லம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தி.மு.க-வில் நடக்கும் உட்கட்சிப் பூசல் காரணமாக நான் ராஜினாமா கடிதம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.

ராஜினாமா கடிதம்
ராஜினாமா கடிதம்

இதற்கிடையே செல்லம்மாளிடம் ஒருவர் நேரில் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது. அதில் பேசும் செல்லம்மாள், ``என்னிடம் 1.10 கோடி ரூபாய் கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கேட்கிறார். என்னிடம் அவ்வளவு பணம் எங்கே இருக்கு? அதனால்தான் ராஜினாமா செய்தேன்” என்கிறார்.

ராஜினாமா செய்த செல்லம்மாள் பேசும் ஆடியோ குறித்து தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளரான சிவபத்மநாதனிடம் கேட்டதற்கு, ``கட்சி சார்பாக ஜெயகுமார் என்பவர் யூனியன் சேர்மன் தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தார். அவர் தேர்தல் பணிக்கு கவுன்சிலர்களுக்கு நிறைய செலவு செய்திருந்தார். அவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்த நிலையில் எந்தச் செலவும் செய்யாமல் குறுக்குவழியில் செல்லம்மாள் பொறுப்புக்கு வந்துவிட்டார்.

முதல்வருடன் தென்காசி தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன்
முதல்வருடன் தென்காசி தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன்

ஒன்றியச் செயலாளராக இருந்த குமார் பாண்டியன் என்பவர் செல்லம்மாளுக்குப் பின்னணியில் இருந்ததால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் மீண்டும் கட்சியில் சேர்வதற்காகவும், பொறுப்பைக் கைப்பற்றவும் செல்லம்மாளிடம், `பணத்தைக் கொடு அல்லது பதவியை ராஜினாமா செய்’ எனச் சொல்லியிருக்கலாம். இது தவிர நான் செல்லம்மாள் என்பவரைப் பார்த்ததுகூடக் கிடையாது. நான் யாரிடமும் பணத்தைக் கேட்கவும் இல்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு