Published:Updated:

`டெல்லியை உலுக்கிய பேரணி... ஒற்றைத் தலைமை!' - யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

பேரணியில் திடீரென `பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத் அரசியலமைப்பின் நகலையும் அம்பேத்கரின் புகைப்படத்தையும் கையில் ஏந்திக்கொண்டு கூட்டத்தில் தோன்றினார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பிரமாண்ட பேரணி நேற்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணிக்கு முதலில் அழைப்பு விடுத்தது குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வரும் `பீம் ஆர்மி' அமைப்பு. இந்த அழைப்பின்போதே `பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர ஆசாத் கைது செய்யப்படுவார் எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் பேரணியில் கலந்துகொள்வாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது.

இடையில் பேரணிக்கு முன்னதாகவே ஆசாத் கைது செய்யப்பட்டார் எனக் கூறியதுடன் போலீஸ் தரப்பில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மதியம் தொழுகை நடத்துவதற்காக ஜும்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தொழுகையை முடித்துவிட்டு ஏற்கெனவே அறிவித்தபடி பேரணி நடத்தப்பட்டது.

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

இதில் திடீரென `பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத் அரசியலமைப்பின் நகலையும் அம்பேத்கரின் புகைப்படத்தையும் கையில் ஏந்திக்கொண்டு கூட்டத்தில் தோன்றினார். அவரைப் பார்த்ததும் போலீஸார் கைது செய்ய முயன்றனர். ஆனால், காவல்துறை கைது செய்யும்முன் அவரை சூழ்ந்துகொண்ட இஸ்லாமிய நபர்கள் போலீஸை உள்ளேவிட மறுத்தனர். பின்னர், ஆசாத் தலைமையில் பேரணி நடந்தது. பேரணி முடிந்த பின் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

தலைநகர் டெல்லியை இந்தப் பேரணி உலுக்கியது எனச் சொல்லலாம். காரணம், ஜும்மா மசூதியில் தொழுகை நடத்தியது முதல் பேரணி முடியும் வரை மதபாகுபாடு இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஒரே கோஷத்துடன் சென்றனர்.

``முஸ்லிம்களை நோக்கித் துப்பாக்கி நீண்டால் பாயும் குண்டுகளை என் நெஞ்சில் வாங்குவேன்'' என்று முழங்கியபடியே இந்தப் பேரணிக்கு ஒற்றை ஆளாகத் தலைமை தாங்கி வழிநடத்தினார் ஆசாத்.

``ஈஸ்வர் அல்லா தேரே நாம்!’’ - குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட சென்னை

யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?

உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சந்திரசேகர் ஆசாத். அப்பகுதியில் சந்திரசேகர் ஆசாத் ராவண் என்று அழைக்கப்படுகிறார். சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என அறியப்படும் சந்திரசேகர் ஆசாத் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் வகையில் `பீம் ஆர்மி' என்ற அமைப்பை நிறுவினார். கன்ஷிராம் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பை நிறுவிய ஆசாத், அந்தப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குழந்தைகளுக்காகக் கல்வியைச் சொல்லிக் கொடுத்துவருகிறார்.

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

பட்டியலினத்தைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். சிறுவயது முதலே பட்டியலின மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகளுக்காகக் குரல்கொடுத்து வருகிறார் ஆசாத். உத்தரப்பிரதேச பள்ளிகளில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கும்போது அட்டவணைப் பிரிவு மாணவர்கள் பெஞ்சுகளில் உட்காரவோ, பம்பிலிருந்து தண்ணீர் அடித்து குடிப்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்?'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்

பள்ளிப் பருவத்தில் இருக்கும்போதே இந்தப் பாகுபாடு குறித்து அடிக்கடி பொதுமேடைகளில் பெருமளவு விவாதித்துள்ளார் ஆசாத். நாளடைவில் இந்தப் பாகுபாடு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உ.பி-யில் பட்டியலின மக்கள் அதிகம் வசித்துவரும் மேற்குப் பகுதியில் அம்மக்களின் தலைவராக உருவெடுத்து வருகிறார் ஆசாத். சஹாரான்பூர் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த பிரச்னையின்போது பட்டியலினத்தவர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் பெருவாரியான பட்டியலின இளைஞர்களின் ஆதரவைப் பெற்றார் ஆசாத். தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள், பீம் ஆர்மி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகப் போராடி வரும் ஆசாத், மோடி, அமித் ஷா ஆகியோரை அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

குடியுரிமை மசோதா... எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கொள்கைக்கு உலை... எடப்பாடி, பன்னீர் கொடுத்த விலை!

சந்திரசேகர் ஆசாத்தைச் சுற்றும் சர்ச்சை!

பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஆசாத் கடந்த பொதுத்தேர்தலின்போது மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவேன் என அறிவித்தார். ``மோடியை இந்தத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றிபெற விட மாட்டேன். மோடியை எதிர்த்துப் போட்டியிட உள்ளேன். எனக்குப் பதவி மீது ஆசையில்லை. அப்படி இருந்திருந்தால் தனித் தொகுதியில் போட்டியிட்டிருப்பேன்'' என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால், தேர்தல் நடப்பதற்கு முன் சில நாள்களிலேயே தனது அறிவிப்பிலிருந்து யூ-டர்ன் அடித்தார்.

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

சஹாரன்பூர் கலவரத்தின்போது கிட்டத்தட்ட ஒருவருடம் சிறைவாசம் அனுபவித்த ஆசாத் 2018 நவம்பரில் ஜாமீனில் வெளிவந்தார். சிறையில் இருந்து வெளிவந்த மறுநாளே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அதற்கடுத்த வாரமே அவர்மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்ததுடன் அவரது ஜாமீன் மனுவை எதிர்ப்பதையும் கைவிட்டது. உத்தரப்பிரதேச அரசின் இந்தத் திடீர் கனிவுக்கு யோகி ஆதித்யநாத்துடன் ஆசாத் சமரசம் செய்துகொண்டார் என்ற சர்ச்சை எழுந்தது. இன்றளவும் இந்தச் சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், ஆசாத்தின் தாயார் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே அவர்மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது எனவும் கூறப்பட்டது.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்
அடுத்த கட்டுரைக்கு