Published:Updated:

`இறுதிவரை பேசாத விஜயகாந்த்; எதிர்பார்த்த கட்சியினர்’ - பிறந்த நாள் நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

விஷ்ணுராஜ் சௌ

நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எழுந்து நிற்க முயற்சிக்கும் போதும் கீழே விழ செல்ல, அவரை அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கிப் பிடித்தனர்.

விஜயகாந்த்
விஜயகாந்த் ( விகடன் )

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை தே.மு.தி.கவினர் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் தே.மு.தி.க நிர்வாகிகள் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வது வழக்கம்.

விஜயகாந்த்
விஜயகாந்த்
விகடன்

அதன் தொடர்ச்சியாக இந்த வருட பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமையகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலாத உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய பிரேமலதா, “இது ஒன்றும் புதிதான நிகழ்வல்ல ஒவ்வொரு ஆண்டும் நடைபெறு கின்ற நிகழ்வு தான். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடமல் மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்டங்களை வழங்கி 40 ஆண்டுகளாக வரலாறு படைத்து வருகின்றார் கேப்டன், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 1500 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட உள்ளது.

விஜயகாந்த்
விஜயகாந்த்
விகடன்

இப்போது இந்த ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்படுவதற்கான காரணம், சில மாதங்களுக்கு முன்னாள் தமிழகத்தில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடுகள் தான். இப்போது கூட சுவாசிப்பதற்கான காற்றை உற்பத்தி செய்யக்கூடிய அமேசான் காடுகள் எரிந்துக் கொண்டிருக்கின்றன, இந்த நேரத்தில் மரம் நடுதலை நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வரும் தங்களின் வீடுகளில் மழை நீரை சேமிக்க வேண்டும். தமிழகத்திற்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும். இனி வரும் காலம் தே.மு.க.வி-ற்கான காலமாக இருக்கும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எழுந்து நிற்க முயற்சிக்கும் போதும் கீழே விழ செல்ல, அவரை அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கிப் பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் பேசுவார் என காத்திருந்த நிலையில் கடைசி வரை விஜயகாந்த் பேசவேயில்லை.