Published:Updated:

`குமாரசாமியின் பட்ஜெட் தாக்கலாகவே அப்படிப் பேசியிருப்பார்’ - பா.ஜ.க கூட்டணி பற்றி ம.ஜ.த தலைவர்கள் கருத்து

சத்யா கோபாலன்

`நாங்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை’ என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் நடந்த வாக்கெடுப்பில், குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் அவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி பா.ஜ.கவின் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவர், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். நாளை தன் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார் எடியூரப்பா.

ஜி.டி தேவகவுடா
ஜி.டி தேவகவுடா
Twitter/@GTDevegowda

இதற்கிடையில் நேற்று முன்தினம் நடந்த ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.டி தேவகவுடா, ``காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கலாம் எனச் சில எம்.எல்.ஏ-க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருப்பதா அல்லது ஆளும் கட்சியான பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுவதா என்பதைக் குமாரசாமிதான் முடிவு செய்ய வேண்டும்” எனப் பேசியிருந்தார். இவரின் கருத்து கர்நாடக அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் ஜி.டி தேவகவுடாவின் கருத்துக்கு விளக்கமளித்துள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமி, ``நாங்கள் பா.ஜ.கவுடன் இணையவுள்ளதாகச் செய்திகள் பரவிவருவதை நான் கவனித்தேன். இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. மேலும், இந்தப் புரளிகளுக்குக் கட்சியைச் சேர்ந்தவர்கள் செவி சாய்க்கக் கூடாது. இது உண்மைக்கு மிகவும் புறம்பானது. மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.டி தேவகவுடா
ஹெச்.டி தேவகவுடா

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஹெச்.டி தேவகவுடா, ``ஜி.டி தேவகவுடா கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியான நாங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படவுள்ளோம். எந்த இடத்தில் எதிர்க்க வேண்டுமோ அங்கு நிச்சயமாக எதிர்ப்போம். நீங்கள் (எடியூரப்பா) மாநிலத்துக்கு ஏதேனும் நல்லது செய்தால் அதை நாங்கள் வரவேற்போம். அதைத் தவிர எங்களுக்கு பா.ஜ.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குமாரசாமி தயார் செய்த மாநில பட்ஜெட் அறிக்கை நல்லவிதமாகத் தாக்கல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஜி.டி தேவகவுடா அப்படிப் பேசியிருப்பார்” என பி.டி.ஐ ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.