Published:Updated:

`பாகிஸ்தான் கரன்சியைப் பார்த்ததே இல்லை; சிக்கவைக்கப் பார்க்கிறாங்க!' - என்.ஐ.ஏ மீது தென்காசி பெண் புகார்

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தென்காசியைச் சேர்ந்த அஹமதுமைதீன் என்ற அஹமதுஷாலி வீட்டில் தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பாகிஸ்தான் கரன்சி உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேலதூண்டிவிநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், ராமலிங்கம். பா.ம.க நகரச் செயலாளராக இருந்த அவர், தமிழன் கேட்டரிங் சர்வீஸ் என்ற பெயரில் சமையல் தொழில் செய்து வந்தார். சமையல் பணிக்காக ஆட்களைத் தேர்வு செய்வதற்காக அவர் பாகனந்தோப்பு பகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி சென்றபோது ஒரு குழுவினருடன் தகராறு ஏற்பட்டது.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதம் காரணமாக அன்று இரவில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. இது தொடர்பாக குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வேகம் பிடித்த விசாரணையில், தென்காசியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளரான அஹமதுமைதீன் என்ற அஹமதுஷாலி என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால், ஜூன் 27-ம் தேதி அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கேரளமாநிலம் கொச்சியில் உள்ள என்.ஐ,ஏ அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தென்காசியில் உள்ள அஹமது ஷாலி வீட்டில் தேசிய புலனாய்வு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜஸ்வீர்சிங் தலைமையில் 10 போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற சோதனையில் அவரது பாஸ்போர்ட், ஆதார்கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைச் சோதனையிட்டனர். அப்போது சில ஆவணங்களுடன் பாகிஸ்தான் நாட்டு கரன்சி கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனை நடைபெற்றபோது தென்காசியில் அவர் வீடு அமைந்துள்ள பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தென்காசி வீட்டில் சோதனை
தென்காசி வீட்டில் சோதனை

ஆனால், சோதனையின்போது பாகிஸ்தான் கரன்சி கைப்பற்றப்பட்ட தகவலை அஹமது ஷாலியின் மனைவி ஆஷியாபானு திட்டவட்டமாக மறுத்தார். இது பற்றி அவர் கூறுகையில், ‘’எனது வீட்டில் நான் தினமும் புழங்கும் பீரோவில் இருந்து பாகிஸ்தான் கரன்சியை எடுத்ததாகச் சொல்கிறார்கள். நான் ஒருநாள் கூட அதைப் பார்த்ததில்லை. அங்கு அது இருந்ததற்கு வாய்ப்பே கிடையாது. அவர்களாகவே அதைக் கொண்டு வந்து வைத்துவிட்டு என்னை மிரட்டி எனது வழக்கறிஞருக்குக் கூட தகவல் தெரிவிக்க விடாமல் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். எனது கணவரை எப்படியாவது இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனேயே என்.ஐ.ஏ திட்டமிட்டுச் செயல்பட்டதுபோலவே அதிகாரிகளின் நடவடிக்கை இருந்தது’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு