தங்கக் கடத்தல்: `அமைச்சரிடம் 8 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை!’ - கொதிக்கும் கேரள அரசியல் களம்

`கேரள சரித்திரத்தில் முதன்முறையாக அமைச்சர் ஒருவரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. இது அவமானகரமானது’ என்கிறார் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஸ்வப்னாவுடன் போனில் தொடர்புகொண்டதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ரம்ஜான் சமயத்தில் யு.ஏ.இ தூதரகம் சார்பில் ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்குவது தொடர்பாக ஸ்வப்னாவிடம் பேசியதாக ஜலீல் கூறினார். `வெளிநாட்டு தூதரகத்திடம் மாநில அமைச்சர் எப்படி நிதி பெறலாம்...’ என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கிடையில் யு.ஏ.இ தூதரகத்திலிருந்து அரசு காரில் குரான் கொண்டு சென்றதாக ஜலீல் மீது குற்றச்சாட்டு கிளம்பியது. அதுமட்டுமல்லாமல் தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்த அமைச்சர் ஜலீல் உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதையடுத்து அமைச்சர் கே.டி.ஜலீலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணை சமயத்தில் மீடியாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக காலை 6 மணிக்கே கொச்சியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் ஜலீல். சி.பி.எம் கட்சியின் ஆலுவா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ யூசுப்பின் காரில் என்.ஐ.ஏ அலுவலகத்துக்குச் சென்றார். கடந்த மார்ச் 4-ம் தேதி நடந்த கடத்தல் குறித்து ஜலீலிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் எட்டு மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜலீல், காரில் என்.ஐ.ஏ அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
`அமைச்சர் ஜலீல் பதவி விலக வேண்டும்’ என வலியுறுத்தி கொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்தநிலையில் ஜலீல் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இது குறித்து கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில்,``கேரள சரித்திரத்தில் முதன்முறையாக அமைச்சர் ஒருவரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. இது அவமானகரமானது. அமைச்சர் ஜலீல் பதவி விலக வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தாதது ஏன்? இனி தனது அலுவலகத்துக்கு விசாரணை வரும் என பயந்துதான், ஜலீலை ராஜினாமா செய்ய்யும்படி முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தவில்லை. இந்த அரசு ஆட்சியில் இருப்பதற்கான அருகதையை இழந்துவிட்டது" என்றார்.

கேரள மாநில பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் கூறுகையில், ``தங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. ஜலீல் மீது வழக்கு பதிவு செய்தாலும், அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்ற சி.பி.எம் கட்சியின் முடிவு ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயல். முதல்வரே சந்தேக நிழலில் இருப்பதால், அவர் ராஜினாமா செய்து விசாரணை சுதந்திரமாக நடக்க வழிவகை செய்ய வேண்டும். ஜலீல் பதவி விலகினால், மேலும் பல அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் சி.பி.எம் கட்சி அவர்களைப் பாதுகாக்கிறது. பினராயி விஜயனின் அரசு ஆட்சியில் தொடர்வதற்கான தார்மிகத்தை இழந்துவிட்டது" என்றார்.