Published:Updated:

திருச்சியில் என்.ஐ.ஏ ரெய்டு: பின்னணி என்ன?!

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாம்

“போலி பாஸ்போர்ட் மூலம் யாராவது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்களா... குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்களை விடுவித்ததில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா என்று விசாரிப்பதாகத் தெரிகிறது.” - திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் என்.ஐ.ஏ ரெய்டு: பின்னணி என்ன?!

“போலி பாஸ்போர்ட் மூலம் யாராவது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்களா... குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்களை விடுவித்ததில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா என்று விசாரிப்பதாகத் தெரிகிறது.” - திருச்சி மாவட்ட ஆட்சியர்

Published:Updated:
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். மேலும், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த 67 பேர், பல்கேரியா, தென் கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பல குற்ற வழக்குகளில் ஈட்டுபட்டு, இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 1946-ன் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் விசாரணை முடிந்தும் விடுவிக்கப்படவில்லை எனக் கூறி கடந்த மே மாதம் முதல் 15-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டங்கள் நடத்திவந்தனர். இது தொடர்பாக அகதிகள் சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில் சமீபத்தில் 14 இலங்கைத் தமிழர்களை முகாம் சிறையிலிருந்து மாவட்ட நிர்வாகம் விடுவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவிலேயே தங்கியிருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்றுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் ஊழல் நடந்திருக்கிறது. இது தொடர்பாக வருகிற 21-ம் தேதி ஆதாரத்துடன் ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்கவிருக்கிறேன். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில் நேற்று (ஜூலை 20) என்.ஐ.ஏ அமைப்பைச் (தேசிய புலனாய்வு முகமை) சேர்ந்த மத்திய அரசின் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருச்சி மத்திய ஜெயில் முகாம் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் திருச்சி மத்திய சிறை அதிகாரிகள், உள்ளூர் போலீஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் கார்களில் மத்திய சிறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முகாம் வாசலை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு ஆய்வு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணிக்கு இந்த திடீர் சோதனை தொடங்கியது. இதற்கிடையே கலெக்டர் பிரதீப் குமார் சம்பவ இடத்துக்கு வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “டெல்லியில் நடந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த முகாம் ஜெயிலில் உள்ளனர். அவர்கள் இலங்கைத் தமிழர்களா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களா எனத் தெரியவில்லை. காலை 5 மணிக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சியிலிருந்து யாராவது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்களா, குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்களை விடுவித்ததில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா என்று விசாரிப்பதாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

இதற்கிடையே நேற்று நடந்த என்.ஐ.ஏ விசாரணையின் தொடர்ச்சியாக இன்று திருச்சியிலுள்ள சிறப்பு முகாம் அகதிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் சிறப்பு அகதிகள் முகாமுக்குள் சென்றிருக்கிறார்கள்.

“அகதிகள் முகாம்களிலிருந்து வெளியே போவதற்கான போராட்டம் நடந்ததா... இல்லை வேறு ஏதும் அரசியல் காரணம் இருக்கிறதா என்று மாநில அரசு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்களாம். அதேபோல் ஐ.பி-சார்பிலும் ஒரு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதில் ஐ.பி கொடுக்கும் ரிப்போர்ட் அன்அஃபீஷியல்தான். அதை அஃபீஷியலாக விசாரிப்பதற்கோ, டாக்குமென்ட் ஆக்குவதற்கோ, கைது செய்வதற்கோ என்.ஐ.ஏ-விடம் பவர் இருக்கிறது. மாநில அளவில் நடந்த உளவுத்துறை கண்காணிப்பிலோ, காவல்துறை கண்காணிப்பிலோ, வழக்குகளிலோ யாராவது வெளிநாட்டவர் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பதை விசாரிப்பதாகவும் தெரிகிறது. சமீபத்தில் பாஸ்போர்ட் விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சை சம்பந்தமாகவும் விசாரணை இருக்கலாம்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.