தூத்துக்குடி, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆலோசனைக்குழுவின் தலைவரான, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பாலாஜி சரவணன், விமான நிலைய இயக்குநர் சிவபிரசாத், விமான நிலைய விரிவாக்கத் திட்ட இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவாக்கப் பணிகள், விமான சேவைகள், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கனிமொழி, ``தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்காக விமான நிலைய ஆணையம் மூலம் கேட்கப்பட்ட அளவுக்கு நிலம், தமிழக அரசு மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது விமான ஓடுதளம், பயணிகள் முனையம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விமான ஓடுதளம் அமைக்கும் பணிகள் 50 சதவிகிதம் முடிவடைந்திருக்கின்றன. மீதமுள்ள பணிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும். இந்தப் பணிகள் முடிந்ததும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும். மேலும், இரவு நேர விமான சேவையும் விரைவில் தொடங்கப்படும்.
விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும். தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அங்கு இரண்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு உறுதி செய்திருக்கின்றனர்.
அவர்கள் விரைவில் பணிகளைத் தொடங்குவார்கள். அதைத் தொடர்ந்து ஏற்கெனவே ஒப்பந்தம் செய்த நிறுவனங்களும் தொடங்குவார்கள். இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்தப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். தூத்துக்குடி-சென்னை இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறேன். மதுரையில் நடைபெறும் தென்மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தி கூடுதல் ரயில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.