Published:Updated:

நியூசி - இந்தியா அரையிறுதியும் பட்ஜெட்டும் ஒன்று - ப.சிதம்பரம்!

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து - இந்தியா கிரிக்கெட் போட்டி போன்றது, நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் என்கிறார் ப.சிதம்பரம்!

 ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று இரவு நடைப்பெற்ற, “மத்திய நிதி நிலை அறிக்கை ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதுடன் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். மேடையில் பேசிய ப.சிதம்பரம், “நிதி அமைச்சராக இருந்தபோது தமிழில் நிதிநிலை அறிக்கையை அளிக்க ஆசைப்பட்டேன். ஆனால், நாடாளுமன்ற விதிகளில் அதில் வாய்ப்பில்லை. நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. புதிய பார்வை, மாறுபட்ட சிந்தனை, பெண்ணின் பார்வை ஆகியவை அதில் வர வாய்ப்பு இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தோம். ஆனால், அது பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்தநாளே அடிபட்டுவிட்டது. பங்கு சந்தை உயரம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மந்த நிலையிலேயே இருந்தது. அதேதான் தற்போதும் இருக்கிறது.

 ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல் காலாண்டில் ஏற்பட்ட 8 சதவிகித பொருளாதார வளர்ச்சி என்பது ஆட்சியின் இறுதிக் காலத்தில் 5.8 சதவிகிதமாகக் குறைந்தது. அதுகுறித்து நிதி நிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் பேசவில்லை. இந்திய பொருளாதார இடவெளியை அவர் பார்த்திருந்தால் பல கசப்பான உண்மைகள் தெரிந்திருக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு 10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தற்கொலையின் முதல் மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது. தொழில் உற்பத்தித்துறையில் வளர்ச்சி இல்லை. புதிய மூதலீடு குறைவு, புதிய தொழில்நுட்பம் குறைவு, செய்முறைகள் இல்லை, தயாரிப்பு குறைவு, சந்தை வளரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தொழில் உற்பத்தித்துறை நொண்டிக்கொண்டு இருந்தது.

2018-19 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வரி வருவாயாக 14,84,406 கோடி ரூபாய் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 1,60,000 கோடி குறைவாகவே வரி வருவாய் கிடைத்தது. வேலையின்மை விகிதாசாரம் மற்றும் தீர்வுக்கான வழிகள் எதுவும் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 4.7 கோடியே பேர் வேலை இழந்துள்ளார்கள். நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்வது அல்ல, அது சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. ஆனால், அதிலிருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகிவிட்டார். மொத்தத்தில் இந்த பட்ஜெட் உப்பு சப்பு இல்லாத பட்ஜெட்.

 ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய், ஐந்தாண்டுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய கமிட்டி அமைக்கப்போகிறோம் என்கிறார். அதை, எதில் முதலீடு செய்யப்போகிறோம் எனக் கூறாமல் கமிட்டி அமைக்கப்போகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேமிப்புக்கு நிதி நிலை அறிக்கையில் எந்த ஊக்கமும் அளிக்கவில்லை. பண மதிப்பிழப்பு ஏற்படுத்திய அச்சம் இதுவரை இந்தியாவில் நீங்கவில்லை. அதனால் கடந்த நான்காண்டுகளில் 7.4 சதவிகிதம் முதலீடு குறியீடு குறைந்துள்ளது.

ஆடுகளத்தையும் ஆராயாமல், 2018-19-ம் ஆண்டு பொருளாதாரத்தையும் ஆராயாமல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தைக் கொண்டு செல்வோம் எனச் சொல்கிறார்கள். அவர்கள் அதை அடைந்தால் மகிழ்ச்சிதான். இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் 2019-20-ம் ஆண்டில் 12 சதவிகிதம் இந்திய பொருளாதாரம் உயரும் என்கிறார். ஆனால், நிதி அமைச்சர் 11 சதவிகிதம்தான் உயரும் என்கிறார். இது குறித்து இவர்களுக்குள்ளயே தெளிவு இல்லை. ஒரு சதவிகித வளர்ச்சி என்பது இந்தியாவில் உள்ள பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். 5 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி என்பது அதிசியம் அல்ல, அது இயல்பாகவே நடக்கும். ஆனால், அதைப் பெரிய சாதனையாகச் சொல்கிறார்கள்.

கூட்டத்தில் மாணவர்கள்
கூட்டத்தில் மாணவர்கள்

மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு 42 சதவிகிதத்தைப் பிரித்து தருவார்கள். ஆனால், 2019-20-ம் நிதி ஆண்டுகளில் 42 சதவிகிதம் பிரித்து தரப்போவதில்லை. வெறும் 33 சதவிகிதம்தான் பிரித்து தரப்போகிறார்கள் எனத் தெரிகிறது. இதை ஆராய்ந்து உண்மையாக இருந்தால் இதைக் கண்டித்து மாநில அரசுகள் குரல் எழுப்ப வேண்டும். வரிவிவகாரத்தில் ஆசைப்படலாம். ஆனால், பேராசைப்படக் கூடாது. மத்திய அரசு பேராசைப்படுகிறது.

பல திட்டங்களுக்கும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய பாதிப்பு ஏற்படும். ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அடித்தட்டில் உள்ள 20 சதவிகித மக்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அவர்களை மத்திய அரசு மறந்துவிட்டது. நடுத்தர மக்களும் இந்த பட்ஜெட்டால் மிகப்பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெட்ரோல், டீசல் விலை தற்போது உள்ளதைவிட இந்த ஆண்டு முடிவதற்குள் கடுமையாக உயரும்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தங்கம், வெள்ளி, பத்திரிகைத் தாள், புத்தகம் இறக்குமதி, கார்கள், கார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஏராளமான பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்தி உள்ளார்கள். இது நடுத்தர மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இதைக் கண்டிப்பது தவிர வேறு வழியில்லை. அதனால்தான் உப்பு சப்பு இல்லாத இந்த பட்ஜெட்டை மக்கள் மறந்துவிட்டார்கள். மோடியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் வாசிக்கப்பட்ட இந்த பட்ஜெட் என்பது உலகக் கோப்பை கிரிக்கெட்போல மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் முதலில் ஆடிய பேட்ஸ்மேன்கள் விளையாடியதுபோல்தான் உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு சரியான அடித்தளத்தை அமைக்கவில்லை.

1,07,000 கோடி காணாமல்போன தொகை என்கிறார்கள். அதில் உண்மை இல்லை. கடந்த நிதி நிலை அறிக்கை, இந்த நிதி அறிக்கை ஆகியவற்றில் உள்ள கணக்கில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணம். இது முக்கியம்மல்ல. இந்த ஆண்டு வளர்ச்சி 7 சதவிகிதமா, 8 சதவிகிதமா என்பதைத்தான் ஆராய வேண்டும். அதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

கேள்வி கேட்கும் மாணவர்
கேள்வி கேட்கும் மாணவர்

பெட்ரோல், டீசல், மின்சாரம், ஆல்கஹால் போன்றவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அப்படிச் செய்தால் மத்திய அமைச்சர் கையிலிருந்து இந்த விலை ஏற்றும் வசதி பறிபோய்விடும் என்பதால், ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர மறுக்கிறார்கள். ஆனால், உடனடியாக அதில் மாற்றம் செய்ய வேண்டும். எல்லோரும் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்யவில்லையே என்கிறார்கள். அதற்குதான் தண்டித்துவிட்டீர்களே, பிறகும் எங்களை விமர்சிக்காமல் ஆட்சியில் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்புங்கள்” என்றார்.