Published:Updated:

`எமர்ஜென்ஸியைப்போல் ஒரே நாளில் இதைச் சரிசெய்ய முடியாது!' -மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ரகுராம் ராஜனும் மன்மோகன் சிங்கும் பதவியில் இருந்த காலத்தில்தான் பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலையில் இருந்தன. நட்புரீதியாகப் பல தொழிலதிபர்களுக்கும் வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( vikatan )

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையிலான வார்த்தைப் போர் தொடர்ந்துவருகிறது. இடையே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் இன்றைய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சனம் செய்துவருகிறார்.

Nirmala Sitaraman
Nirmala Sitaraman
vikatan

"மத்திய அரசு, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவது, பழி சுமத்த முயற்சிப்பது என இவற்றில் மட்டுமே தீவிர கவனம் செலுத்திவருகிறது" என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நடந்த எண்ணற்ற ஊழல்களே,அந்த ஆட்சி எப்படி என்பதைச் சொல்லும். அந்தக் காலகட்டத்தில் என்னென்ன தவறு நடந்தன, எப்படி நடந்தன என்பதை நினைவுபடுத்திப் பார்ப்பது மிகவும் அவசியம்" என்றார்.

மேலும், "காங்கிரஸ் கட்சி எங்கள்மீது வைக்கும் விமர்சனங்களை உரத்த குரலில் கேட்கும் தைரியம் உள்ளதா?" என்றும் கேள்வியெழுப்பினார். வாஷிங்டனில் நடைபெறும் உலக வங்கியின் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் நிலையில், அங்கு நடந்த இந்தியப் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் மன்மோகன்சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடிகொடுத்துள்ளார்.

manmohan singh
manmohan singh
vikatan

'மத்திய அரசுக்கு, பொருளாதாரம் குறித்த தெளிவான பார்வை இல்லை' என்று முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் விமர்சனம் செய்ததற்கு, "ரகுராம் ராஜனும் மன்மோகன் சிங்கும் பதவியில் இருந்த காலத்தில்தான் பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலையில் இருந்தன. நட்புரீதியாகப் பல தொழிலதிபர்களுக்கும் வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டன. தொலைபேசி அழைப்புகளின் மூலமாகவே வங்கிக்கடன்களைப் பெறும் நிலை இருந்தது. தற்போது, பொதுத்துறை வங்கிகளுக்கு உயிரூட்டும் முயற்சியில் இருக்கிறோம். எமர்ஜென்ஸியைப்போல் ஒரே நாளில் இதைச் சரிசெய்ய முடியாது' என்றும் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.