Published:Updated:

`கொடுக்க முடியல; விரக்தியில் காரில் எறிந்தேன்!'- அழுத பெண்ணை ஆச்சர்யப்படுத்திய நிர்மலா சீதாராமன்

``மழையில் நாங்கள் இருக்கும் வீடு உடைந்துவிட்டது. அதைச் சரிசெய்து தாருங்கள்.''

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்துவரும் மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வடகர்நாடகம், தென்கர்நாடகத்தின் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பெலகாவி பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு அதிகாரிகளுடன் காரில் மற்ற பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தார்.

வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடும் நிர்மலா சீதாராமன்
வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடும் நிர்மலா சீதாராமன்

அப்போது வேகமாக சென்றுகொண்டிருந்த காரின் கண்ணாடியில் ஒரு பேப்பரை வழியில் நின்றிருந்த பெண்மணி தூக்கி எறிந்தார். இதைக் கவனித்த நிர்மலா உடனே தனது காரை நிறுத்தியதுடன் ஒட்டுமொத்த கான்வாய் வாகனங்களையும் திருப்பி அந்தப் பெண்மணி இருக்கும் பகுதிக்குச் சென்றார். அவரிடம் எதற்காக பேப்பரை வீசினீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். ``மழையில் நாங்கள் இருக்கும் வீடு உடைந்துவிட்டது. அதைச் சரிசெய்து தாருங்கள்.

கோரிக்கை மனுவை உங்களிடம் கொடுக்க முடியாத விரக்தியில்தான் அதை காரில் தூக்கி எறிந்தேன்" எனக் கூறி அப்பெண்மணி அழுதார். அழுதவரை தேற்றிய நிர்மலா, ``வீட்டுக்காக நீங்கள் அழ வேண்டாம். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் புதிய வீடு கட்டித்தரப்படும்'' எனக் கூறி ``பிரதம மந்திரி அவாஸ் யோஜனா'' திட்டத்தையும் அப்பெண்மணிக்கு எடுத்துக் கூறினார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மேலும் அருகில் இருந்த அதிகாரியிடம் அப்பெண்மணி பெயரை பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்படி உத்தரவிட்டார். பின்னர் தனது காரில் உள்ள கோரிக்கை கடிதத்தை எடுத்து அந்தப் பெண்ணின் கையாலே அந்த அதிகாரியிடம் கொடுக்க வைத்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த மக்கள் நிர்மலாவின் நடவடிக்கையை கைதட்டி வரவேற்க, அங்கிருந்து மீண்டும் தனது கான்வாய் வாகனத்தில் கிளம்பிச்சென்றார்.