Published:Updated:

நிர்மலா சீதாராமன் Vs தமிழக எம்.பி-க்கள் - மக்களவையில் தமிழில் வார்த்தைப் போர்... நடந்தது என்ன?

கனிமொழி, நிர்மலா சீதாராமன்

``நாடாளுமன்றத்தில் தமிழிலேயே பதிலளித்து திமுக-வை விமர்சித்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.” - நாராயணன் திருப்பதி.

நிர்மலா சீதாராமன் Vs தமிழக எம்.பி-க்கள் - மக்களவையில் தமிழில் வார்த்தைப் போர்... நடந்தது என்ன?

``நாடாளுமன்றத்தில் தமிழிலேயே பதிலளித்து திமுக-வை விமர்சித்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.” - நாராயணன் திருப்பதி.

Published:Updated:
கனிமொழி, நிர்மலா சீதாராமன்

மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக அவை விதி 193-ன் கீழ் நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பதிவுசெய்த கருத்துகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் அவருக்கும் திமுக, அதன் கூட்டணி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நிர்மலா சீதாராமன் பேசும்போது, "உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தற்போதுள்ள நிலையில் இருப்பதற்கு மக்கள்தான் ஒரே காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றும் நாம்தான் வேகமாக வளரும் பொருளாதாரம். இதை உலக வங்கி போன்ற பெரிய அமைப்புகள் கூறியுள்ளன. இன்றைய விவாதத்தில் பங்கெடுத்தவர்கள் தரவுகள் அடிப்படையில் விவாதத்தில் கருத்துகளைப் பதிவுசெய்யாமல் அரசியல் சார்ந்த கருத்துகளையே பதிவுசெய்தனர். ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் ஜிஎஸ்டி குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு மாநிலங்களால் எடுக்கப்படுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் மாநிலங்களுக்கும், ஒரு பங்கு வாக்களிக்கும் உரிமை மத்திய அரசுக்கும் உள்ளது. ஒருமித்த கருத்து அடிப்படையிலும் முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இதற்கு முன்னதாக, திமுக எம்.பி கனிமொழி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி பென்சில் விலை உயர்ந்தது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்துப் பேசினார். அதற்கு பதிலளித்த நிர்மலா, "பென்சில் விலையில் எந்த மாற்றமும் கிடையாது. ஒரு சிறுமி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஏன் எழுதுகிறார்... நாட்டின் பிரதமருக்குத் தன் மனதில் உள்ளதை எழுதினால் அது அவரைச் சென்றடையும். பிறகு அவர் ஏதாவது செய்வார் என்ற எண்ணத்தில் எழுதுகிறார்" என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட கனிமொழி, “இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக இருக்கிறார். பில்கேட்ஸைத் தாண்டி ஓர் இடத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். அதனால், சில பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். காரணம், அந்த கார்ப்பரேட் தொழில்துறைகளுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் தொழில் வளர்ச்சி வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால், அடித்தட்டிலேயே, வாழும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயங்கக்கூடிய இந்த ஆட்சி இப்படி இருக்கக்கூடிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிகளைத் தொடர்ந்து செய்துகொண்டு, அவர்களை வளர்த்தெடுக்கக்கூடிய ஆட்சி இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று சில கேள்விகளை முன்வைத்தார் கனிமொழி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுவரை இந்தி, ஆங்கிலத்திலேயே உரையாடிய நிர்மலா சீதாராமன், ‘`மிகவும் ஆர்வத்துடன் கனிமொழி சில பிரச்னைகளை எழுப்புகிறார். அதனால் நான் அவருக்குத் தமிழிலேயே பதிலளிக்கப்போகிறேன்’ என்று தமிழில் விளக்கமளிக்கத் தொடங்கினார்.

ஸ்டாலின், முகேஷ் அம்பானி
ஸ்டாலின், முகேஷ் அம்பானி

``பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு மட்டும்தான் எல்லாம் செய்வதாக நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். உங்கள், தமிழகத்தில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. இதன் மதிப்பு 35 ஆயிரம் கோடி. அதானியுடன் சேர்ந்து டேட்டா சென்டர் அமைக்கிறது. மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது ஏன்... ராஜஸ்தான் அரசு, மின்சாரம் தயாரிப்புக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குகிறது” என்ற நிர்மலா சீதாராமன், மேலும் தொடரும் போது, “2021, நவம்பர் 3-ம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ.5, டீசல் மீதான வரி ரூ.10 என்ற வகையில் மோடி குறைத்தார். அதேபோல, 2022, மே மாதம் மத்திய அரசு திரும்பவும் பெட்ரோல் மீதான வரியை ரூ.9.5 காசுகளும், டீசல் மீது ரூ.7 என்றும் குறைத்தது. எல்பிஜி உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 மானியம் தருவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு திமுக அதன் தேர்தல் அறிக்கையில், `தேர்தலில் நாங்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்போம்’ என்றனர். அதைத் தவிர, மாநில அரசு எல்பிஜி மானியம் ரூ.100 தருவோம் என்று கூறியது" என்று நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போதே, திமுக உறுப்பினர்கள் இடைமறித்து, "கறுப்புப் பணத்தை திருப்பிக் கொண்டு வருவோம் என நீங்கள்கூட சொன்னீர்கள். அந்தக் கறுப்புப் பணம் எங்கே?" என்று கேட்டனர்.

வெளிநடப்பு செய்த எம்.பி-கள்
வெளிநடப்பு செய்த எம்.பி-கள்

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், தமது உரையை தமிழிலேயே நிர்மலா சீதாராமன் தொடர்ந்தபோது, திமுக உறுப்பினர்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், திருமாவளவன் உள்ளிட்டோர் அவரின் உரைக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன், "நீங்கள் பேசும்போது நான் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். பிறகு நான் பேசும்போது நீங்கள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்" என்று கூறினார். இதையடுத்து ``அவையில் உங்களுக்கு எப்படிப் பேசுவதென்றே தெரியவில்லை’’ என்று திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர். ஒருசில உறுப்பினர்கள் ``நீங்கள் அடாவடித்தனமாக நடந்துகொள்கிறீர்கள்’’ என்று கூறினர். இதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்த பிறகும் தமது உரையை தமிழிலேயே தொடர்ந்த நிர்மலா சீதாராமன்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு செய்தியாளர்கள் சந்திப்பில், ``ஜி.எஸ்.டி நிறைய வசூல் ஆகிறது. அந்த தைரியத்தில் பேசுகிறார்கள். அவர்கள் பேசிய முறை எல்லோரும் சொன்னதுபோல் அரகன்ட் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அவர் ஒரு பெண் அமைச்சர். அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் என்ன பேசினாரோ அதையே அவர் எடுத்துப் பார்க்கும்போது உடல்மொழி, பேசிய விதத்தை கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

`` `முதலைக் கண்ணீர்’ என்ற சொல்லை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிர்மலா சீதாராமன் இந்தச் சொல்லை அழுத்தம் திருத்தமாகப் பயன்படுத்தினார். என்ன செய்யப்போகிறீர்கள்...” என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன், கனிமொழி
சு.வெங்கடேசன், கனிமொழி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியோ, ``இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று நிதியமைச்சர் கூறியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அவர் சொல்வது சரிதான்.

ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்துவிட்டது. எனவே, இப்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை” எனக் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.

 சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

“விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்துக்கு விடையளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிலை குறித்து இந்தியாவை அண்டை நாடுகளோடு ஒப்பீடு செய்தார். அப்போது `இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஐஎம்எஃப் மற்றும் பிற நாடுகளில் கையேந்துகின்றன’ எனக் குறிப்பிட்டார். நம்மைப் பற்றி தம்பட்டமடிப்பது சரி. ஆனால், ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், உலகமே உற்று கவனிக்கக்கூடிய ஓர் அவையில் பிற நாடுகளை இழிவு செய்வதுபோல் பேசியது அரசியல் நாகரிகமா... கையேந்துகிறார்கள் என்பது நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படும் சொல்லா... தெளிவுபடுத்துவார்களா...” என்கிற கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

திருமாவளவன்
திருமாவளவன்

இவ்வாறாக நாடாளுமன்றத்தில் நடந்த விஷயம் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியைத் தொடர்புகொண்டோம். ``நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் பேசுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அரசும் ஒத்துழைத்து பதில் கொடுப்போம் என்று கூறியது. அதன்படி கனிமொழி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கேள்விகளை முன்வைத்தபோது பொறுமையாகக் கேட்டு அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர்கள் பதில் கூறினர். அவர்கள் கூறிய பதில்களைக் கேட்கக்கூடிய சகிப்புத்தன்மை எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

உதாரணத்துக்கு ‘தயிர், மோருக்கு 5% வரி போட்டது தவறு’ என்று திமுக சொல்கிறது. அதற்கு, ‘ரூ.100-க்கு 5% வரி என்றால் ரூ.5-தானே கூட வேண்டும், எப்படி ரூ.20 ஆனது?’ என்று நிதியமைச்சர் கேட்டபோது திக்கித் திணறி தவித்தனர். இதுதான் உண்மை. அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அடுத்து ’எங்களுக்கு ஜி.எஸ்.டி தொகை நிலுவையைக் கொடுத்தாலே போதும்’ என்றதற்கும், ‘நிலுவையே இல்லை...’ என்பதை மிகத் தெளிவாக போட்டு உடைத்திருக்கிறார் நிதியமைச்சர். இவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல் குட்டு வெளிப்பட்டுவிட்டது என்கிற ஆதங்கத்தில்தான் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தேவையில்லாமல் கூச்சல் எழுப்பியதோடு, நிர்மலா சீதாரமனின் உண்மைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினர்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இது தவிர திருமதி கனிமொழி எம்.பி அவர்கள், ‘கறுப்புப் பணம் உலவிவருகிறதே...’ என்று கேட்டார். கறுப்புப் பணம் உலவி வருகிறது என்று சொன்னால் தமிழ்நாட்டில் டாஸ்மாக், மின்துறை, திரைப்படத்துறை... என எல்லாவற்றிலும் அரசியல்வாதிகளின் ஊழல் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. திமுக-வை லஞ்சம், ஊழல், முறைகேடான நிர்வாகம் எனத் தொடர்ந்து இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் விமர்சித்துக்கொண்டிருந்தோம். இப்போது நாடாளுமன்றத்தில் தமிழிலேயே பதிலளித்து விமர்சித்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு இதுவரை ‘தமிழ்... தமிழ்...’ என முழங்கிக்கொண்டிருந்தவர்கள், நாடாளுமன்றத்தில் தங்களைத் தவிர வேறு யாருமே தமிழில் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு தமிழிலேயே தக்க பதிலடி கொடுக்கும்போது பதற்றப்படுவது இயற்கையான ஒன்றுதான். ஆனாலும், மக்கள் நலன் கருதி நாடாளுமன்றத்தில் தங்களுடைய ஜனநாயகக் கடமையை அவர்கள் ஆற்ற வேண்டும் என்பதை பா.ஜ.க விரும்புகிறது” என்றார்.