Published:Updated:

பட்ஜெட் படித்த மகள்! - பார்த்து பரவசப்பட்ட பெற்றோர்

எம்.குமரேசன்

இந்தியாவின் பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் பெற்றோர்
நிர்மலா சீதாராமன் பெற்றோர்

மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் இரண்டாவது பெண் நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலாவுக்கு உண்டு. இதற்கு முன், 1970-ம் ஆண்டு இந்திரா காந்தி இந்தியாவுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண் ஆவார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

புறநானூறுலிருந்து 'யானை புக்க புலம் போல' பாடல், அர்த்த சாஸ்திரத்திலிருந்து 'நம்பிக்கை இருந்தால் வழி பிறக்கும்' போன்ற வரிகளை தன் பட்ஜெட் உரையின்போது நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

நிர்மலா பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தனி காரில் அவரின் பெற்றோர் நாராயண் சீதாராமன், தாயார் சாவித்ரி வந்தனர். பாதுகாவலர்கள் அவர்களைப் பார்வையாளர்கள் மாடத்தில் அமர வைத்தனர். தங்கள் மகள் பட்ஜெட் தாக்கல் செய்வதைக் காண ஆர்வத்துடன் இருந்தனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தன் இணையமைச்சர் அனுராக் தாக்கூர், நிதித்துறைச் செயலர் எஸ்.சி.கார்க், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோருடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார். பட்ஜெட் உரையை படிக்கத் தொடங்குவதற்கு முன், பெற்றோரை ஒருமுறை நிர்மலா பார்த்தார். உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் தேசத்தின் 2 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாட்டின் பட்ஜெட்டைத் தங்கள் மகள் தாக்கல் செய்வதைக் கண்டு நிர்மலாவின் பெற்றோர் பரவசமடைந்தனர்.