Published:Updated:

`என்னைப் போய் நடிக்கச் சொல்றியா' எனக் கோபப்பட்டார்! -கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தபோது என்ன நடந்தது?

ஆ.விஜயானந்த்

`இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, அண்ணா நினைவிடத்துக்குச் சென்று உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என்றார். அவரது திடீர் முடிவை நான் எதிர்பார்க்கவில்லை.

உண்ணாவிரதத்தில் கருணாநிதி
உண்ணாவிரதத்தில் கருணாநிதி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஓராண்டாகிவிட்டது. அவர் பதவியில் இருந்த 2009 காலகட்டத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தது. `போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை சிலர் விமர்சித்தனர். அந்த திடீர் முடிவின் பின்னணியில் நடந்த விஷயங்கள் யாருக்கும் தெரியாது' என ஆதங்கப்படுகிறார் அவரது உதவியாளர் நித்யா.

கருணாநிதி
கருணாநிதி

2009 ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு காலை 7 மணியளவில் வந்திருந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. எந்தவித முன்னறிவிப்புமின்றி `திடீர்' என உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். `இலங்கையில் நடந்துவரும் இன அழிப்புப் போரை மத்திய அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' என்பது அவரது போராட்டத்தின் மையக் கருத்தாக இருந்தது. குடும்பத்தினருக்குக்கூடத் தெரியப்படுத்தாமல் அண்ணா நினைவிடத்துக்கு வந்ததை கட்சியின் சீனியர்கள் அதிர்ச்சியோடு கவனித்தனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டுக் குடும்பத்தினரும் தொண்டர்களும் பெருமளவில் மெரினாவில் குவிந்தனர்.

அப்போது பேசிய கருணாநிதி, ` தமிழக மக்கள் சார்பாக ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்று வரையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்த பிறகும், போரை நிறுத்த முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளதாக அறிந்தேன். ராஜபக்சே, உயிர்ப் பலி வாங்குவதில் என்னையும் பலியாக்கிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்காக என்னையே அர்ப்பணித்து உயிரைக் கொடுக்க முன்வந்துள்ளேன்' என உருக்கமாகப் பேசினார். அதேநேரம், `அமைச்சர்களோ தொண்டர்களோ என்னோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்' எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இல்லத்தில் கருணாநிதி
இல்லத்தில் கருணாநிதி

உண்ணாவிரதக் களத்தில் இருந்த கருணாநிதியைத் தொடர்பு கொண்டு சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பேசினர். முடிவில், இலங்கை அரசு தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக மத்திய அரசின் மூலம் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தனது போராட்டத்தை முடித்துக்கொண்டவர், ` இலங்கை பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் மட்டுமே ராணுவம் ஈடுபடுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியும் கிடைத்துள்ளது. எனவே, உண்ணா நோன்பை முடித்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்' என அறிவித்தார். கருணாநிதியின் இந்த உண்ணாவிரதச் செயல், தமிழகத்திலிருந்து ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ` உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தியிருக்கிறார் முதல்வர்' என விமர்சனம் செய்தனர்.

` உண்ணாவிரதம் தொடர்பான முடிவை எடுத்தபோது என்ன நடந்தது?' எனக் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவிடம் கேட்டோம். `` அன்று காலை ஆறரை மணியளவில் என்னிடம், `இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, அண்ணா நினைவிடத்துக்குச் சென்று உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என்றார். அவரது திடீர் முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. உடனே பதற்றத்துடன், `இந்தத் தகவலை மற்றவர்களுக்குச் சொல்லிவிடுகிறேன்' என்றார். `யாரிடமும் சொல்லாதே... உண்ணாவிரதத்துக்குச் செல்ல வேண்டாம் என மற்றவர்கள் தடுத்துவிடுவார்கள்' என்றார். அவரது முடிவை மாற்ற முடியாது என்பதால், ` அய்யா கோவிச்சுக்காதீங்க. உண்ணாவிரதம் இருங்கள். வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஒருநாள் முழுக்க உண்ணாவிரதம் இருக்கும் வகையில் உடல் தாங்க வேண்டும். இரண்டு இட்லியையாவது சாப்பிட்டுவிட்டுப் போங்கய்யா...' எனக் கெஞ்சினேன்.

உதவியாளர் நித்யா
உதவியாளர் நித்யா

என்னுடைய பேச்சால் கோபப்பட்டவர், ` என்னய்யா.. என்னைப் போய் நடிக்கச் சொல்றியா... இட்லி சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றச் சொல்றியா' எனக் கோபப்பட்டார். தண்ணீர்கூட குடிக்காமல் ஏழு மணிநேரம் அவர் உண்ணாவிரதம் இருந்தார். டெல்லியிலிருந்து போர் நிறுத்தம் தொடர்பாக பாசிட்டிவ்வான அறிவிப்பு வந்த பிறகே கோபாலபுரம் வந்தார். மதியம் 3 மணிக்குத்தான் உணவைச் சாப்பிட்டார்" என்றவரிடம், ` அவரது உண்ணாவிரதத்தைச் சிலர் விமர்சனம் செய்திருந்தார்களே' என்றோம். `` இலங்கைத் தமிழ் மக்களுக்காக கடைசிவரையில் உண்மையாக இருந்தார் அய்யா. ஈழ மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியால் மிகுந்த மனவேதனையில் இருந்தார். சிலர் விமர்சனம் செய்தபோதுகூட, ` ஒரு தலைவருக்கு நல்ல விமர்சனங்களும் வரும், கெட்ட விமர்சனங்களும் வரும்' என எடுத்துக்கொண்டோம்" என்றார் இயல்பாக.