Published:Updated:

`என்ன நடந்தாலும் என் ஆன்மிகப் பணி தொடரும்!’- வெளிநாட்டுக்குத் தப்பிய நித்யானந்தா

சிறுவர், சிறுமிகள் அடைத்துவைத்து துன்புறுத்துவதாகத் தொடரப்பட்ட வழக்கில் சிக்கியதால், நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தா
நித்யானந்தா ( FB/@ParamahamsaNithyananda )

கர்நாடக மாநிலம் பிடதியில் மிகப்பெரிய ஆசிரமம் நடத்திவருகிறார் நித்யானந்தா. அதன் கிளை ஆசிரமங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டுவருகின்றன. அப்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருக்கும் தங்கள் மகளை மீட்டுத் தரக்கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குஜராத் நீதிமன்றம்
குஜராத் நீதிமன்றம்

ஜனார்த்தன ஷர்மாவின் புகாரை அடுத்து, நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர்மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் குஜராத் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, அகமதாபாத் போலீஸார் நித்யானந்தா ஆசிரமத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். அதன் முடிவில் இரண்டு பெண் சீடர்கள் கைதுசெய்யப்பட்டு, அங்கு இருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

``நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர்கள் வலுக்கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டதும், அவர்கள் துன்புறுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும், நித்யானந்தா மீது குழந்தைகளைக் கடத்தி சித்ரவதை செய்வதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என அகமதாபாத் போலீஸார் முன்னதாகப் பேசியிருந்தனர்.

நித்யானந்தா
நித்யானந்தா
FB/@ParamahamsaNithyananda

இதையடுத்து, நித்யானந்தாவைத் தேடும் பணிகளில் தீவிரம் காட்டிவந்த குஜராத் போலீஸ், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக நேற்று கூறியுள்ளனர். “கர்நாடகாவில் நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இந்தியாவிலிருந்து வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த வழக்கில் நித்யானந்தாதான் முக்கியக் குற்றவாளியாக உள்ளார். அவர் நாடு திரும்பியதும் நிச்சயம் கைதுசெய்யப்படுவார். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நித்யானந்தாவின் இரு சீடர்கள், ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது” என அகமதாபாத் போலீஸ் எஸ்பி அசாரி தெரிவித்துள்ளார்.

ஆசிரமத்தில் ரெய்டு... 2 பெண் உதவியாளர்கள் கைது! - நித்தியானந்தா விவகாரத்தில் வேகம்காட்டும் போலீஸ்

இதற்கிடையில், தன்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு நித்தியானந்தாவே நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் வீடியோவில், “ பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 20 முறை என்னைக் கைதுசெய்துள்ளனர். நான் ஒரு முறை இமயமலையிலிருந்து வந்தபோது, என்னை பாலியல் வழக்கில் கைதுசெய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்.

ஒரு பாலியல் குற்றச்சாட்டு நடந்தால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் பெயர் அடையாளத்தைத் தெரிவிக்க மாட்டார்கள். அதே போன்று ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள், அவருக்கு எதிராக குற்றவாளிகளைத் தேடுவார்கள். ஆனால் என் விஷயத்தில், இங்கு ஒரு குற்றவாளி உள்ளார் எனக் கூறி பாதிக்கப்பட்டவர்களைத் தேடுகிறார்கள். உண்மையை யாரும் ஆராய்வது இல்லை, அதைத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் யாருக்கும் இல்லை.

நித்யானந்தா
நித்யானந்தா
FB/@ParamahamsaNithyananda

குருகுலத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் ஆன்மிக மகன், மகள்கள். ஆசிரமத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி ஒரு குழந்தை பேசினால், அதற்கு சொல்லிக்கொடுத்துப் பேசவைப்பதாக நீங்கள் கூறலாம். ஆனால், எங்கள் இணைய தளத்தில் நிறைய வீடியோக்கள் உள்ளன, அனைத்துக் குழந்தைகளும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள். அவர்கள் எப்படி பொய் சொல்கிறார்கள் எனக் கூற முடியும்? என்மீது தாக்குதல், வன்கொடுமை நடக்கிறது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். என்னையும் குருகுலத்தையும் பிரிக்கப்பார்க்கிறார்கள். சிலர் என் ஆசிரமத்துக்குள் வந்தபிறகு, வேண்டுமென்றே குற்றங்களைச் செய்கிறார்கள். பின்னர் வெளியில் சென்று, அதைப் பெரிதாக்கி என்மீது குற்றம் சுமத்துகிறார்கள். என்மீது குற்றம் சுமத்துவதற்காக என் சீடர்களை ஒரு கருவி போல பயன்படுத்துகிறார்கள். இதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள என் குழந்தைகளைக் கால பைரவர் காப்பாற்றுவார். என்மீது பாய வந்த அம்பை இடையில் நுழைந்து அந்த இரு பெண்களும் தங்கள்மீது தாங்கிக்கொண்டுள்ளனர். பொய் வழக்குக்காகக் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள், நிறைய சித்ரவதைகளை அனுபவித்துவருகின்றனர். திட்டம்போட்டு என்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. என்ன நடந்தாலும் என் ஆன்மிகப் பணி தொடர்ந்துகொண்டே இருக்கும். நான் யாருக்கும் எதிரி அல்ல. இந்து மதத்தை வெறுப்பவர்களும் இந்து நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப் பெரிய சதியில் இறங்கியுள்ளனர். நான் மனித உரிமைகளுக்கும் குழந்தைகள் நல உரிமைக்கும் எதிரானவன் இல்லை.

நித்யானந்தா
நித்யானந்தா

எனது குருகுலத்தில் அகிம்சை வழியில் மட்டுமே சீடர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. அங்கு எந்த துன்புறுத்தல்களும் நடக்கவில்லை. இந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும். நிறைய பணம் செலவாகும். எனக்கும் என் சீடர்களுக்கும் கடும் தொந்தரவு, துன்புறுத்தல் அளிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தொடர் துன்புறுத்தல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும். அங்கு நானும் எனது சீடர்களும் வேத ஆகம ரீதியிலான ஆன்மிக பயிற்சியில் ஈடுபடுவோம். அங்கு நானும் என் சீடர்களும் பாதுகாப்பாக இருப்போம். எங்கள்மீது எந்த வன்கொடுமைகளும் திணிக்கப்படாது. எங்கள்மீது சுமத்தப்படும் பிரச்னைகளுக்கு இன்றே நிரந்தர தீர்வு. மிகப் பெரிய ஆன்மிக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிருடன் இருக்க வேண்டும் என சிவனும் காளியும், பைரவரும் விரும்புகிறார்கள்” என விளக்கமாக நித்யானந்தா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

நித்யானந்தா மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.