Published:Updated:

ஃபட்னாவிஸ் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திப்பு! - நிதின் கட்கரி பக்கம் திரும்பும் மகாராஷ்டிரா அரசியல்

நிதின் கட்கரி பேசினால் இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 -ம் தேதி வெளியான போதிலும், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து பெரும் குழப்பம் நீடித்துவருகிறது. அதிக இடங்களை வென்ற பா.ஜ.க, தேர்தலுக்கு முன்னர் சிவசேனா கட்சியுடன் போட்ட கூட்டணி ஒப்பந்தத்தை அமல்படுத்த மறுக்கிறது. அதாவது, 5 ஆண்டுகள் ஆட்சியை இரண்டரை ஆண்டுகளால இரு கட்சிகளும் ஆட்சி புரியலாம் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

ஆனால், பா.ஜ.க தற்போது அதை ஏற்க மறுப்பதுடன், 5 ஆண்டுகளும் பா.ஜ.க ஆட்சி செய்யும், சிவசேனா கட்சிக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகளை வழங்குகிறோம் எனத் தெரிவித்தது. இதை ஏற்க மறுக்கும் சிவசேனா, தங்களுக்கும் முதல்வர் பதவி வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளது. பிரச்னை இப்படிச் செல்ல, சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வேலைகளையும் பார்த்தது. இதனால், பா.ஜ.க தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

எனினும் காங்கிரஸ், சிவசேனா கட்சிக்கு ஆதரவளிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அது நாடு முழுவதும் தங்கள் கட்சிக்கு அவப்பெயரைக் கொண்டுவந்து விடுமோ என்ற கோணத்திலும் காங்கிரஸ் ஆலோசித்துவருகிறது. இதனிடையே, பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

இந்த சந்திப்பு நாடு முழுவதும் கவனம்பெற, அதே நாளில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பவார் டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புகளைப் தொடர்ந்து, நேற்று மாலை நாக்பூர் வந்த ஃபட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில், மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் பாய்யாஜி ஜோஷி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ஃபட்னாவிஸ்.

இந்த ஆலோசனையில், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை அணுகுமாறும் ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டதாம். நிதின் கட்கரி, சிவசேனா கட்சியுடன் நல்ல உறவில் இருப்பவர். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவர். அவர் பேசினால் இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சிவசேனா - பா.ஜ.க
சிவசேனா - பா.ஜ.க

இதை சிவசேனா கட்சியும் நம்புகிறது. சிவசேனா கட்சியில் தேர்தலுக்கு முன்பு இணைந்த கிஷோர் திவாரி, பா.ஜ.க - சிவசேனா இடையே நிதின்கட்கரி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் படிவத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் தலையிட்டு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எழுதிய கடிதம் தொடர்பாகப் பேசிய கிஷோர் திவாரி, ``மகாராஷ்டிரா விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பா.ஜ.க ஓரங்கட்டுகிறது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணுங்கள் என அமித் ஷா, கட்கரிக்கு உத்தரவிட்டால் இரண்டு மணிநேரத்தில் தீர்வு காணுவார்” என்றார்.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

ஆர்.எஸ்.எஸ்ஸும் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்புவதால், பா.ஜ.க - சிவசேனா இடையே ஆன அடுத்த நகர்வு என்பது கட்கரியை நோக்கி இருக்கும் என்கிறார்கள், தேசிய அரசியல் விமர்சகர்கள். எனினும் நிதின் கட்கரியை இந்த விவகாரத்துக்குள் கொண்டுவருவதில் பா.ஜ.க தலைமைக்கு விருப்பமில்லை என்ற தகவலும் பறக்கிறது.

`மூன்று முக்கிய சந்திப்புகள்!’ - டெல்லியில் முடிவாகும் மகாராஷ்டிரா அரசியல் இழுபறி?

வரும் 9-ம் தேதிக்குள் ஆட்சி அமைப்பது குறித்த முடிவு வெளியாக வேண்டும். தவறும் பட்சத்தில், ஆளுநரால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மீண்டும் புதிய தேர்தலைச் சந்திக்கவேண்டி இருக்கும். இன்னும் 3 நாள்கள் மட்டுமே இருப்பதால், உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறது மகாராஷ்டிரா.